PUBLISHED ON : செப் 16, 2023

அடர்ந்த காட்டில், குதிரை ஒன்று வாழ்ந்து வந்தது; அது, 'காட்டிலேயே, வேகமாக பயணிப்பவன் நான் தான்' என கர்வம் கொண்டிருந்தது.
ஒரு நாள் -
வழியில், நத்தை ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. அதை கண்டதும், 'நீ... ஒரு சிறிய உயிரினம்; நான் போகும், பாதையில் வராதே... ஓட்டப் பந்தயத்தில் என்னுடன் போட்டி போடுகிறாயா... கால்களில் மிதிப்பட்டு இறந்து விடுவாய்...' என, ஏளனம் செய்தது.
பொறுமை இழந்த நத்தை, 'வரும் ஞாயிற்றுக் கிழமை, இதே இடத்தில் உன்னை சந்திக்கிறேன்; ஓட்டப் பந்தயத்தை வைத்துக் கொள்ளலாம்...' என்று கூறியது.
கர்வத்துடன் சம்மதித்தது குதிரை.
இருப்பிடத்தை அடைந்ததும் நண்பர்களை அழைத்து, 'குதிரையை தோல்வி அடைய செய்து தக்க பாடம் புகட்டணும்; அதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுங்க...' என கேட்டது நத்தை.
அதன்படி வெற்றி பெறுவதற்கு உரிய திட்டம் வகுக்கப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை -
சற்று முன்னதாகவே, போட்டி நடைபெறும் இடத்திற்கு நண்பர்களுடன் வந்தது நத்தை.
போட்டி துவங்கும் இடத்திலிருந்து, முடியும் எல்லை வரை, ஒரு கோட்டை கவனமாக வரைந்தது. ஓட்டப் பந்தய பாதையில் சீரான இடைவெளியில் புதர்களில் பதுங்கி இருந்தன, நட்பு நத்தைகள். அவை, போட்டியில் கலந்துகொள்ளும் நத்தை போலவே காட்சி தந்தன.
போட்டி துவங்கியது.
மிகவும் துச்சமாக எண்ணி, 'வெல்லப் போவது, நான் தான்...' என, கனைத்து ஓடத் துவங்கியது குதிரை; சற்று துாரத்தில், ஓடும் பாதையில் முந்தி சென்று கொண்டிருந்த நத்தையை கவனித்தது.
இதனால், வேகத்தை கூட்டியது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வேகத்தை அதிகரித்தது குதிரை.
நண்பர்கள் உதவியுடன், குதிரையை முந்தி செல்வது போன்ற, தோற்றத்தை உருவாக்கியிருந்தது நத்தை. ஓட்டப்பந்தய பாதையில் அங்காங்கே அமர்ந்து அதற்கு உதவின, நட்பு நத்தைகள்.
இறுதியில், எல்லைக் கோட்டருகே பதுங்கி இருந்த நத்தை, வெற்றிக் கோட்டை நிதானமாக தொட்டது. கர்வத்தை விட்டு, தோல்வியை ஒப்புக் கொண்டது குதிரை.
சரியாக திட்டமிட்டு கர்வமிக்க குதிரைக்கு, தக்க பாடம் கற்பித்தது நத்தை.
குழந்தைகளே... வல்லவனுக்கு, வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணருங்கள்!
- எஸ்.பிரபுராஜா
