PUBLISHED ON : ஆக 05, 2011

கருத்தரித்த ஒரு பெண்ணின் அல்லது விலங்கின் கருப்பைக்குள் ஒரு நஞ்சுக்கொடி உருவாகிறது. அதன் வழியாகத்தான் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு உணவு செல்கிறது. தொப்புள் கொடி மூலமாகக் குழந்தை நஞ்சுக் கொடியுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.
தொப்புள் கொடிதான் பிறக்கப்போகும் குழந்தைக்கு உயிர்வழியாகும். அதன் வழியாகவே குழந்தை உயிர் தரித்திருக்கத் தேவைப்படும் ஒவ்வொன்றும் செல்கிறது. காற்று, இரத்தம், உணவு, ஊட்டம் ஆகியவை அனைத்தும் அதன் வழியாகத்தான் செல்கிறது. இத்தகைய சிறப்பான பணிகளைச் செய்யும் தொப்புள்கொடி, ஒரு அங்குலத்திற்கு அதிகமாக இருக்காது; அதன் நீளமோ ஒரு அடிதான். குழந்தை பிறந்ததும் நஞ்சுக்கொடி வேண்டாப் பொருளாகத் தள்ளப்படும். குழந்தை பிறக்கும் வரையில் தான் அதன் பணி தேவைப்படுகிறது.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைச் சில அங்குலம் விட்டுத் துண்டித்து விடுகின்றனர். இவ்வாறு துண்டிப்பதற்குக் கத்தரிக்கோலை உபயோகிக்கின்றனர். தொப்புள் கொடியைத் துண்டிப்பதால் குழந்தைக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது. ஏனெனில், அதில் நரம்புகள் இல்லை. பிறந்த குழந்தைக்கு இனி தொப்புள் கொடி தேவையில்லை. உணவு, ஊட்டம், காற்று முதலியவற்றைக் குழந்தை தானாகவே பெற்றுக்கொள்கிறது.
தொப்புள் கொடியின் சேவையே சேவைதான்!
