PUBLISHED ON : ஜூன் 27, 2020

தாளம்பட்டி கிராமத்தில் வசித்த செல்லம்மாள் தம்பதியரின் இளையமகன் மணி. சரியான சோம்பேறி; எப்போதும், 'எனக்கு நேரமே இல்லை...' என்றே கூறுவான். பள்ளியில், 10ம் வகுப்பு படித்த அவனது காலாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலை பார்த்த அப்பா, 'என்னடா, ஆங்கிலத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருக்கிற...' என்றார்.
'வர வர நிறைய வீட்டுப்பாடமா கொடுக்குறாங்க... படிக்க நேரமே இல்லைப்பா...' என்றபடி, நைசாக நழுவினான். அதற்குள், தமிழ் புத்தகத்தை விரித்தபடி, 'அண்ணா... பாரதியார் பாட்டுக்கு அர்த்தம் சொல்லிக் கொடுக்கிறாயா...' என்றாள் அவன் தங்கை.
'ஆமா... எனக்கு வேற வேலை இல்லை... உனக்கு பாடம் நடத்த வேண்டுமாக்கும்... பரீட்சைக்கு படிக்கவே நேரம் இல்லாமல் தவிக்கிறேன்...' என்றபடி எரிச்சலுடன் நகர்ந்தான்.
குறுக்கிட்ட அண்ணன், 'டேய் மணி... மோட்டார் சைக்கிளை சர்வீசுக்கு விட்டிருந்தேன்; வொர்க் ஷாப் போய் எடுத்திட்டு வந்திடு...' என்றான்.
'போ அண்ணா... உனக்கு வேற வேலை இல்லையா; படிப்பதற்கே நேரம் இல்லாம சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன்...' என்று, புத்தகப் பையை துாக்கியபடி போனான்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, 'மணி இங்கே வாயேன்...' என்று மென்மையாக அழைத்தார்.
'ஏம்மா... நானே நேரம் இல்லாம தவிக்கிறேன்... உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்...'
'எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம்; சொல்வதை ஒரு நிமிஷம் கேட்டுட்டு போடா...'
'என்னம்மா சொல்ல வர்றிங்க...'
'எப்ப பார்த்தாலும், 'நேரம் இல்லை' என்கிறாயே... அதை யோசிச்சு பாரு... நீ சொல்லுறது எந்த பொருளும் இல்லாத சொல்ன்னு புரியும். சந்திராயன் விண்கலத்தை ஏவிய விஞ்ஞானிக்கும் சரி, சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்திக்கும் சரி... ஒரு நாளைக்கு, 24 மணிநேரம் தான். சாதனைக்கு மேல் சாதனை செய்ய அவர்களுக்கு நேரம் இருந்திருக்கு...
'அதே நேரம் தான், எல்லாருக்கும் கிடைக்குது; உனக்கு மட்டும் நேரம் கிடைக்காம எப்படி போகுது... முன்னுக்கு வர வேண்டுமானால், சொல்ல கூடாத ஒரே வாக்கியம், 'நேரம் இல்லை' என்பதைத் தான்...
'முன்னேறியவர்கள் எல்லாம் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தியவர்கள்... காலம், உயிர் போன்றது... இனிமேலாவது, நேரத்தை திட்டமிட பழகிக்கொள்...' என்று கூறி, சமையல் வேலையைக் கவனிக்க சென்றாள்.
சற்றுநேரம் அப்படியே நின்றான் மணி. நேரம் வீணாவது புரிந்தது. அடுத்த செய்ய வேண்டிதை திட்டமிட துாண்டியது மனம்.
குழந்தைகளே... திட்டமிட்டு நேரத்தை பயன்படுத்த வேண்டும். அது தான் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு முதல் படி.
- சுமதி ரகுநாதன்
