தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/திக்... திக்.. பங்களா! (12)

திக்... திக்.. பங்களா! (12)

திக்... திக்.. பங்களா! (12)


PUBLISHED ON : ஜூன் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினு, மதுவுக்கு விசித்திர அனுபவங்கள் ஏற்பட்டன. அவ்வப்போது மர்மமாக தோன்றி, எச்சரித்து வந்த கொளஞ்சி பற்றி, கொள்ளு தாத்தா கடுமையாக எச்சரித்தார். இனி -

'கொளஞ்சி விஷயத்துல ஜாக்கிரதையாவே இருக்கிறோம்...'

வினு, மதுவின் வாக்குறுதியால், தாத்தாவின் முகத்தில் திருப்தி தெரிந்தது.

தீவிரமாக யோசித்த மது, 'கெட்ட ஆவிகள் மனுஷரை தொந்தரவு செய்யாம இருக்க வழியே இல்லையா...' என்றாள்.

இறுகிய முகத்துடன் தாத்தா, 'ஆவியா இருக்கும் கொளஞ்சி, கூடிய சீக்கிரம் அழிஞ்சு போவான்...' என முணுமுணுத்தார்.

'ஆவியா இருக்கிற கொளஞ்சிய பார்த்திருக்கீங்களா...'

'எந்த மூஞ்சியோட வருவான்; பயந்தாங்குளி...'

'அது சரி தாத்தா... பழையக் குற்றாலத்துல ஆவிகள், மந்திரவாதி நடமாட்டம் அதிகமா இருக்கே... அதுக்கு காரணம் என்ன...'

'ஓ அதுவா... இங்கு, உயிர் காக்கும் மூலிகைகள் உண்டு; தங்கம் செய்யும் ரசவாத மூலிகைகளும் உண்டு. அத தேட வர்றவங்க தவறிப் போய் மரணமடைவாங்க... இது தவிர, ஒவ்வொரு வருஷமும் குறைஞ்சது, 30 பேராவது நீர் வீழ்ச்சில விழுந்து அகால மரணம் அடையுறாங்க. அவங்கெல்லாம் ஆவியாத்தான் சுத்துவாங்க...'

மதுவும், வினுவும், 'ஓவ்' என, துள்ளினர்.

'பயப்படாதீங்க... பாதுகாக்க நாங்க இருக்கும்போது எதுவும் வாலாட்ட முடியாது...' என்றார் தாத்தா.

'சரி போய் துாங்குங்க...' என்றாள் பாட்டி.

இருவரும், அறைக்குள் மறைவதை உன்னித்து பார்த்தாள் செண்பா; அவளது உதட்டோரம் ஒரு பரிகாச புன்னகை மின்னியது.

இரவாடைக்கு மாறி, ஜன்னலுக்கு வந்தான் வினு; இருட்டு பூசிய வயல்வெளி தெரிந்தது.

'கொளஞ்சி உண்மையில் ஆவியா... ஆவி என்றால் நல்ல ஆவியா, கெட்ட ஆவியா... கண் இமைக்காமல் நகரும் மோனாலிசா சித்திரமாய் காட்சி தரும் செண்பா... பெண்ணா, பேயா...

'சுப்பையனின் தோற்றம் நடை உடை செய்கைகள் கூட ஒரு வகை சந்தேகத்தையும், பீதியையும் கிளம்புகிறதே... உண்மையில் அவன் யார்...

'சகதி பூதங்கள் எங்கிருந்து கிளம்புகின்றன... அவற்றுக்கும் இந்த மாளிகைக்கும் உள்ள தொடர்பு என்ன... தினமும், 200 பேருக்கு செண்பா சமைக்கிறாளே... அந்த, 200 பேரின் முகமும், முகவரியும் வேண்டுமே!

'எனக்கு மனோதிடமும், வீரமும் அதிகம். மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் விட மாட்டேன். துப்பறியும் வேலையை துவங்குவோம்' என, எண்ணியபடி சுற்றும் முற்றும் பார்த்தான்.

இரவு, 11:20 மணி.

மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தான் வினு. முதலில் தாத்தா, பாட்டி அறைக்குள் எட்டினான். ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தனர். பூனை போல் நடந்தான். சமையலறைக் கதவை நெட்டினான்.

கோரைப்பாய் விரித்து படுத்திருந்தாள் செண்பா; தலையணை இல்லை; இரு கைகளையும் கோர்த்து, பின்தலைக்கு முட்டுக் கொடுத்து கண் திறந்தபடி துாங்கிக் கொண்டிருந்தாள். இப்படி ஒரு வினோதப் பிறவியா...

சமையலறையில் கண்களை ஓட்டினான்; ஒரு ஸ்டாண்ட் முழுக்க வகை வகையான கத்திகள், பிரமாதமாக மின்னின.

துவரம் பருப்பு மூட்டை, உளுந்தம் பருப்பு மூட்டைகள், பச்சரிசி, புழுங்கல் அரிசி மூட்டைகள், வெங்காயம், காய்கறிகள், வாழைப்பழத்தார்கள், டின்டின்னாய் சமையல் எண்ணெய்கள். சமையல் பொருட்களில் ஒன்றே ஒன்று மிஸ்சிங்; அதுதான் வெள்ளைப் பூண்டு.

வெளியே வந்தான் வினு. குதிரை கொட்டடியில், சுப்பையனை துழாவினான்.

சரியாக நள்ளிரவு, 12:00 மணி.

எங்கோ, பெரிய காண்டா மணி ஒலித்தது. 'திடுக்' என எழுந்த சுப்பையன், நொண்டாமல் தெளிவாக நடந்தான். ஒளிந்து கவனித்தான் வினு.

நள்ளிரவில் மட்டும் சுப்பையனின் ஊனம் சரியாகுமோ... இதென்ன விந்தை.

ஒரு பெட்டியும், மண்வெட்டியும், கடப்பாரையும் எடுத்தான் சுப்பையன். இடது கையில் லாந்தர் விளக்கு. வினோதத்துக்கு மேல் வினோதம்! கறுப்பு குதிரை, தானே சேணம் பூட்டியபடி, வண்டிக்கு நடந்தது.

ஒரு நொடி நின்று சுற்றும் முற்றும் பார்த்தான் சுப்பையன்; எடுத்து வந்திருந்த பொருட்களை, வண்டிக்குள் வைத்தான். குதிரையை பூட்டி, தாவி ஏறி, லகானைச் சுண்டினான்.

மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தது வண்டி. கணம் தயங்கினாலும், பார்வையிலிருந்து மறைந்துவிடும். மான் போல துள்ளிக்குதித்து பின்தொடர்ந்தான் வினு.

தொடர்ந்து, 20 நிமிட ஓட்டம். பிரேக்கிட்ட கார் போல நின்றது வண்டி. குதிரை எழுந்து இரு கால்களை உயர்த்தி, 'ஷீய்...' என குரல் கொடுத்தது.

நின்ற இடம் சுடுகாடு.

வவ்வால்கள் தாழப் பறந்தன; சுப்பையனின் முகம் நோக்கி பறந்தவை, நெருங்குவதற்குள் வளைத்து வேறு திசையில் போயின. வவ்வால்களுக்கு சுப்பையனின் மீது என்ன பயம்...

பெட்டி, லாந்தர், மண்வெட்டி, கடப்பாறை சகிதம் சுடுகாட்டுக்குள் போனான் சுப்பையன்.

ஆந்தை அமர்ந்திருந்த கல்லறையை நெருங்கினான். சுற்றி வந்து அதை தோண்ட ஆரம்பித்தான்; லாந்தர் விளக்கு வெளிச்சத்தில், மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தது சுப்பையன் முகம். குழியிலிருந்து மண்டை ஓட்டையும், தொடை எலும்பையும் எடுத்து வெளியே வைத்தான்; பெட்டியிலிருந்து பூஜை சாமான்கள் எடுத்தான்; எலும்புகளின் மீது குங்குமத்தை வீசினான்.

ஒரு துணி பொம்மையை நிறுத்தி, நெற்றியில் குங்குமம் வைத்தான். மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தான். துணி பொம்மை உயிர் பெற்று ஆடியது; உதடுகளில் சாயம் போட்டது போல சிவந்திருந்தது; வயிறு தொப்பை ஆகியிருந்தது. மந்திரங்களை ஓதியபடி கல்லறையை சுற்றி வந்தான் சுப்பையன்; கூடவே பொம்மையும் ஆடிக்கொண்டே வந்தது.

கல்லறைகளின் மீது எருக்கம் பூக்களையும், ஊமத்தம் பூக்களையும் துாவினான். பின், சாம்பலை உடல் முழுதும் பூசி ஆட ஆரம்பித்தான்.

காட்டிலிருந்து, நான்கைந்து நாகப் பாம்புகள் கிளம்பி வந்தன; சுப்பையன் முன் படமெடுத்து ஆடின.

மெய் மறந்திருந்த வினுவின் நடுமுதுகை கொத்தும் வகையில், ராஜநாகம் படமெடுத்து நின்றது!

திரும்பிய வினு, பயத்தால் உறைந்தான். 'விசுக்...' என தலையை உயர்த்தியது ராஜநாகம். அதன் சீறல், வினுவின் நெற்றி நோக்கியிருந்தது. ஒளிவேகத்தில், வினுவின் இதயம் கண்டபடி துடித்தது.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us