PUBLISHED ON : ஜூன் 27, 2020

தேனி மாவட்டம், கம்பம், ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப் பள்ளியில், 2002ல், மேல்நிலை முதலாம் ஆண்டு சேர்ந்த போது, பயந்து நடுங்கிக்கொண்டிருந்தேன்; பலரும் என் போலவே நடுங்கியதைக் கண்டேன்.
எங்கள் தாவரவியல் ஆசிரியர் அகமது சலீம், தெளிவாக பாடம் நடத்துவார். உற்சாகம் கொள்ளும் வகையில் அறிவுரைகள் சொல்வார். பயந்திருந்தவர்களை அழைத்து, 'கவனம் செலுத்தி, புரிந்து படித்தால் தேர்ச்சி பெறலாம்; மதிப்பெண் பற்றி கவலைப்பட வேண்டாம். பிறர் மதிக்க வாழ்வதை லட்சியமாக கொள்ளுங்கள்...' என தேற்றினார்.
அவரது அறிவுரை தெம்பூட்ட, சிறப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆர்வத்துடன் படித்து, நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன்.
என் வயது, 35; அந்த ஆசிரியரின் அறிவுரை, இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாழ்வில் நம்பிக்கை சுடர் ஏற்றியவரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- மணிபிரபு, தேனி.
தொடர்புக்கு: 98948 58492
