PUBLISHED ON : டிச 07, 2019

தேனிமாவட்டம், தேவதானப்பட்டி, இந்து நடுநிலைப் பள்ளியில், 1974ல், 5ம் வகுப்பு படித்த போது, ஆசிரியர் வீரசின்னு, கோள்கள் பற்றிய பாடம் நடத்தினார்.
'பூமி, தன்னைத் தானே சுற்றி, சூரியனையும் சுற்றுகிறது...' என்று, விளக்கிக்கொண்டிருந்தார். எங்களுக்கு புரியவில்லை என்பதை, முகக்குறிப்பைக் கொண்டே அறிந்தவர், செயல்முறை விளக்கம் அளித்தார்.
ஒன்பது மாணவர்களை அழைத்தவர், நடுவில் ஒருவனை நிற்க வைத்தார். அவனை சூரியன் என்றார். மற்ற எட்டு பேரையும், அவனை சுற்றி, நீள்வட்டப் பாதையில் நிற்க வைத்து, கோள்களை அறிமுகப்படுத்தினார்.
பூமியாக நின்றவனை, சுயமாக சுழன்று, சூரியனையும் சுற்றி வரும்படி வைத்தார். 'பூமி, தன்னைத் தானே சுற்ற, ஒரு நாளும், சூரியனைச் சுற்றி வர, ஒரு ஆண்டும் ஆகும்' என, தெளிவாக விளக்கினார். அனைவருக்கும் நன்றாக புரிந்தது.
தற்போது, தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். சூரியக் குடும்பம் பற்றி பாடம் நடத்தும்போது, அந்த ஆசிரியர் நினைவுக்கு வருகிறார்.அவரது பாணியிலே கற்பித்து வருகிறேன்.
- செ.கிரேஸ் இந்திரா, கோவை.
