PUBLISHED ON : ஆக 01, 2014

பாரதத்தின் வட பகுதியில் மிக நீண்ட நாட்களுக்கு முன் ஒரு அரசன் சித்திராநதிக் கரையில் அரசாண்டு வந்தான். அவன் பெயர் யோகராஜன். அவன் நாடு மிகப் பெரியது. அதன் மக்கள் செல்வமும், செழிப்பும் பெற்று உலகத்திலேயே மிக்க மகிழ்ச்சியானவர்களாக வாழ்ந்து வந்தனர். அதைக் கண்டு மன்னன் யோகராஜன் மிகவும் திருப்தி அடைந்தான்.
அவனிடம் உலகத்தில் உள்ள சகல யோகங்களும் சேர்ந்து வந்து குடியிருந்தன. உலகத்தில் அவனைப்போல் செல்வம் உள்ளவர்கள் வேறு யாருமே இல்லை என்னும் அளவிற்கு அவன் செல்வம் உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது. யாரையாவது செல்வந்தன் என்று குறிக்க வேண்டும் என்றால் கூட, ''அவன் என்ன யோகராஜன் மகாராஜா போல் பணக்காரனா?'' என்று மக்கள் கேட்கும் அளவிற்கு அவன் செல்வம் புகழ் பெற்றதாக விளங்கியது.
மன்னன் யோகராஜனிடம் அவனை மகிழச்செய்யும்படியான எல்லா வசதிகளும் இருந்தன. எக்கச்சக்கமான சந்தோஷத்தில் அவன் மிதந்து கொண்டிருந்தான். ஒருமுறை அவன் தன்னைப் பற்றி சிந்தித்து, 'நான்தான் உலகிலேயே மிக சந்தோஷமான மனிதன்!' என்று சொல்லிக்கொண்டான்.
இப்படி இருந்தபோது ஒரு பேரறிஞர் கிரேக்க நாட்டிலிருந்து வந்து பாரதத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் யோகராஜனின் செல்வத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவனைக் காண அவன் நாட்டுக்கு வந்தார். அவரை யோகராஜன் மிக அன்பாகவும், ஆசையாகவும், மரியாதை யோடும் வரவேற்றுத் தன் அரண்மனையில் தங்க வைத்தான்.
அந்த அறிஞரின் பெயர் பிளாடிபஸ். 'உலகிலேயே அறிவில் அவருக்கு நிகரானவர் எவரும் இல்லை' என்று அப்போதைய நாடுகள் அனைத்துமே நம்பி வந்தன. யாராவது அறிஞரைக் குறிக்க வேண்டும் என்றால் அவனைப் பற்றிப் பேசும்போது, ''அவன் என்ன, பிளாடிபஸ் போன்ற அறிவாளியா?'' என்று கேட்பர். அப்படிப்பட்ட உலக மகா அறிஞர் தன்னோடு தங்குவதைக் குறித்து யோகராஜன் மிகவும் கர்வம் கொண்டான்.
அவன் அறிஞரைத் தன் அரண்மனை முழுவதும் அழைத்துச் சென்று தன்னிடம் உள்ள செல்வம் எல்லாவற்றையும் மிகப் பெருமையாகக் காட்டினான். முத்துக்கள், பவழங்கள், வைர வைடூரியங்கள் என்று பலவற்றையும் காட்டினான். தன் அழகான தோட்டங்கள், எண்ணற்ற மாளிகைகள், அறை கொள்ளாத அளவு அவன் சேர்த்து வைத்திருந்த அரிய பொக்கிஷங்கள் மற்றும் தனது ஆள்படை அம்புகள் என்று அனைத்தையும் காட்டினான்.
அன்று இரவு யோகராஜனும், பிளாடிபஸும் மிக உன்னதமாகத் தயாரிக்கப் பட்ட உணவை அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது யோகராஜன், ''இப்போது சொல்லுங்கள் உலகத்தில் என்னைக் காட்டிலும் சந்தோஷம் மிகுந்தவன் யாராவது இருப்பார்களா?'' என்று கேட்டான்.
அதற்கு பிளாடிபஸ் 'யாரும் இருக்க முடியாது!' என்று கூறுவார் என்று எதிர்பார்த்தான்.
பிளாடிபஸ் அவனை நிமிர்ந்து ஒருமுறை பார்த்தார். பின்பு,''எனக்கு ஏதேன்ஸ் நகரத்தில் வாழ்ந்த டாலாரஸ் என்ற ஒரு ஏழையைத் தெரியும். நான் அவன்தான் உலகத்திலேயே மிக சந்தோஷமானவன் என்று சந்தேகம் இல்லாமல் நினைக்கிறேன்,'' என்றார்.
யோகராஜன் எதிர்பார்த்த பதில் அது அல்ல. இருப்பினும் அவன் தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு, ''தாங்கள் ஏன் அப்படி சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
''ஏனென்றால் டாலாரஸ் ஏழையாக இருந்தாலும் தன் குடும்பத்தை நிர்வகிக்கவும், பிள்ளைகளை வளர்க்கவும் மிகக் கடினமாக உழைத்தான். அவர்கள் வளர்ந்து பெரியவர் கள் ஆனதும், அவர்களிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, கிரேக்க நாட்டுப்படையில் சேர்ந்து சில போர்க்களங் களில் மிக வீரமாக சண்டையிட்டு மாண்டு போனான். அவனைக் காட்டிலும் மகிழ்ச்சி யானவன் யாராக இருக்க முடியும்?'' என்று சொன்னான் பிளாடிபஸ்.
''ஆமாம் உண்மைதான்,'' என்று ஒப்புக்காக ஒத்துக்கொண்ட யோகராஜன், பின்பு டாலாரஸுக்கு அடுத்ததாக அதிர்ஷ்டக் காரன் யார் என்று சொல்லுங்கள்?'' என்று கேட்டான். இந்த முறை அவர் கட்டாயம் யோகராஜன்தான் என்று தன் பெயரையே சொல்வார் என்று மிக ஆவலோடு, எதிர்பார்த்தான்.
''அதற்கடுத்ததாகச் சொல்வதென்றால் துருக்கி நாட்டில் வசித்த இரண்டு இளம் வீரர்களைக் கூறலாம். அவர்கள் மிக இளமையிலேயே தங்கள் தந்தையை இழந்து விட்டனர். அதன் பிறகு மிகக் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தையும், தாயாரையும் காப்பாற்றினர். அவர்களின் தாயார் அவர்கள் உழைப்பில் மிக்க மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். அவள் இறந்த பிறகு அவர்கள் துருக்கி நாட்டுப் படையில் சேர்ந்து தாய் நாட்டிற்கு மிகமிக அதிகமாகச் சேவை செய்துவிட்டு மாண்டுபோயினர். அவர்களும் உலகத்திலேயே அதிக மகிழ்ச்சி வாய்ந்தவர் கள் என்று சொல்லலாம்,'' என்று தயங்காமல் கூறினார்.
இப்போது யோகராஜன் உண்மையிலே மிகுந்த ஆத்திரம் அடைந்தான்.
''இது என்ன? உலகிலேயே மிகப் பணக்காரனாக இருக்கும் நான் அந்த உழைப்பாளி வர்க்கத்து ஏழைகளை விட மகிழ்ச்சியானவனாக உங்களுக்குத் தெரிய வில்லையா? இறந்து போனவர்களைப் பற்றியே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே! என்னுடைய செல்வத்தையும், செல்வாக் கையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லையா?'' என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.
''ஓ அரசனே! யாரும் உயிரோடு இருப்பவரை உலகத்திலேயே மிக சந்தோஷ மானவர்கள் என்று ஒப்புக்கொள்வதில்லை. உனக்கும், உன் செல்வத்திற்கும் உன் வாழ்நாளுக்குள் ஏதாவது கேடு வந்து நீ அவற்றை இழக்க நேரிடலாம். மிக ஏழையாகப் போக நேரிடலாம். அப்போது நீ எப்படி உலகிலேயே மிகுந்த மகிழ்ச்சியான மனிதனாக இருக்க முடியும்? ஒருவனுடைய கடைசிக்காலத்திற்குப் பிறகுதான் அவன் மகிழ்ச்சியான மனிதனா? இல்லையா என்று சொல்ல முடியும்?'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு பாரதநாட்டில் மிகவும் பராக்கிரமம் வாய்ந்த ஒரு மன்னன் உருவானான். அவன் பெயர் சிம்மராஜன். அவன் தனது தன்னிகரில்லாத வீரத்தால், எல்லா மன்னர்களையும் எதிர்த்துப் போரிட்டு, அவர்களைச் சிறைப்படுத்தி அவர்கள் நாட்டைப் பிடுங்கிக்கொண்டான்.
உலகில் இருந்த செல்வங்கள் அனைத் தையும் பெற்றிருந்த யோகராஜனால் கூட அவன் முற்றுகையை நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கடைசியாக யோகராஜனும் வீழ்ந்தான். அவனின் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன; அரண்மனை எரியூட்டப்பட்டது. அவனது அழகான தோட்டங்கள் நாசமாக்கப்பட்டன.
அவன் மீது சிம்மராஜன் மிகக் கோபம் கொண்டான்.
''இந்த யோகராஜன் நம் பொறுமையை மிகவும் சோதித்து விட்டான். அவனால் வீரர்கள் பலர் அழிந்து போயினர். அவனை சும்மா விடக்கூடாது. அவனுக்கு நாம் தரும் தண்டனை நம்மை எதிர்க்கத் துணியும் மற்ற மன்னர்களுக்கு ஒரு பாடமாக அமைவது போல் இருக்க வேண்டும்,'' என்று கறுவிக்கொண்டான்.
அவன் சொல்லி முடித்ததும், அவனது வீரர்கள் யோகராஜனின் கைகளைக் கட்டி, அவன் அரசாண்ட நகரத்தின் வீதி வழியாக அவனை மிகக் கேவலமான நிலையில் இழுந்து வந்தனர். அடுத்து அவனது எரிந்த அரண்மனையில் மிச்சம் இருந்த மரக்கட்டை களைப் பிடுங்கி, ஒரு படுக்கைபோல் தயார் செய்து அதன் மீது யோகராஜனை உட்கார வைத்தனர். ஒரு வீரன் அந்தக் கட்டைகளைக் கொளுத்தி விட தீப்பந்தம் எடுத்து வர ஓடினான்.
''இப்போது நாம் குளிர்காய ஒரு நல்ல நெருப்பு கிடைக்கப் போகிறது. இவன் சேர்த்து வைத்த அத்தனை செல்வங்களும் இப்போது அவனுக்கு எப்படி உதவப் போகிறது?'' என்று சொல்லி அந்த வீரர்கள் சிரித்தனர்.
உலகிலேயே மிகப் பணக் காரனாக இருந்த யோகராஜன், இப்போது உடல் நிறைய காயங் களோடு, மனம் நிறைய வருத்தங்களோடு அவர்கள் அந்தக் கட்டை களுக்குத் தீ வைக்கப் போவதற்காகக் காத்திருந்தான். அப்போது அவன் மனதில் முன்பு ஒருமுறை பிளாடிபஸ், 'ஒருவர் இறக்கும்வரை அவனது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்ததா என்று சொல்ல முடியாது' என்று கூறியது நினைவுக்கு வந்தது. அவன் தன்னை மறந்து, ''பிளாடிபஸ், பிளாடிபஸ்'' என்று புலம்பினான்.
அப்போது அந்த வழியாக மன்னன் சிம்மராஜன் குதிரை மீது அமர்ந்து வந்தான். யோகராஜன் புலம்பலைக் கேட்டு, ''யார் அந்த பிளாடிபஸ், எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீ அவன் பெயரைச் சொல்லி ஏன் புலம்பு கிறாய்?'' என்று வினவினான்.
பிளாடிபஸ் யார் என்பதையும், அவர் தன்னிடம் சொல்லிய தத்துவங்களையும் யோகராஜன் ஒரு வழியாக திக்கித்திணறி அவனிடம் கூறி முடித்தான். தான் அவரிடம் அப்போது கோபப்பட்டதையும் ஆனால், இன்றைய தினம் அது உண்மையாகியிருப்ப தையும் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.
அவன் கதை சிம்மராஜனின் மனதைத் தொட்டது. அவனும் பிளாடிபஸ் கூறிய தத்துவங்களில் இருந்த உண்மையை உணர்ந்துக் கொண்டான்.
''உண்மைதான்... யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. ஒரு காலத்தில் என்னிடம் இருக்கும் செல்வமும், செல்வாக்கும் கூடப் பறிபோய்விடலாம். நான் நிர்கதியாய் நிற்க நேரிடலாம். ஆகையால் என்றும் நிலைத்து நிற்கும் அன்பே எனக்கு முக்கியம்,'' என்று சொல்லிவிட்டு யோகராஜனை விடுதலை செய்தான்.
''எல்லாரும் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ, அதை நானும் மற்றவர்களுக்குச் செய்வதுதானே நியாயம்? கருணையைக் காட்டிலும் நாம் மற்றவரிடம் எதிர்பார்க்கும் உயர்ந்த பொருள் வேறு என்னவாக இருக்கும்?'' என்று சொல்லி யோகராஜனை மன்னித்துவிட்டதோடு, அவனை அதற்குப்பின் தனது இனிய நண்பனாகக் கருதத் தொடங்கினான். யோகராஜன் தன்னை கடைசி நிமிடத்தில் காப்பாற்றிய பிளாடிபஸை நன்றியோடு நினைத்துக் கொண்டான்.
***
