PUBLISHED ON : ஜன 13, 2012

பழைய பொருள்களை விலக்குவது. உயிர்களை காக்கும் உத்தமனை போற்றுவது, இயற்கை தெய்வமான சூரியனுக்கு நன்றி தெரிப்பது, ஆதவனை ஆராதிப்பது, வாயில்லா ஜீவன்களை வணங்குவது, மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கண்டு ஆனந்தம் காணுவது, இத்தனை வர்ணணைகள் எதற்கு என்று உங்களுக்கு தெரியும்தானே... தைத்திங்கள் முதல் நாளுக்குத்தாங்க!
மனித வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். இம்மூன்றுக்கும் இயற்கையே காரணமாக இருக்கிறது. உணவை தருவிக்கும் தொழில் விவசாயம். 'உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்று பாரதியார் உழவுத் தொழிலுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளார். இத்தொழிலுக்கு வெயில், மழை, மண் வளம் ஆகிய இயற்கை கூறுகள் மிக அவசியம்.
மனித வாழ்க்கைக்கும், உழவுத் தொழிலுக்கும் துணை புரியும் இயற்கை கூறுகளுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகள் கிடைக்காமல், வாழ்க்கையில் ஒருநாள் அதுக்கென்று ஒதுக்கி பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்.
இப்பண்டிககை உலகெங்கும், வெவ்வேறு நாடுகளிலும் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமாக வெவ்வேறு நாட்களிலும், வெவ்வேறு பெயரிலும் கொண்டாடப்படுகிறது. பூமியின் சுழற்சியால் சூரியன் உதயமாகும் நேரம் மாறுபடுவதால், நாட்களும் வேறுபட்டு வருகின்றன.
கொண்டாடும் முறைகள், நாட்கள், பெயர்கள் வேறுபட்டாலும் அடிப்படை நோக்கம் மனித வாழ்க்கைக்கும், உழவுத்தொழிலுக்கும் துணை புரியும். 'ஆதவனுக்கு நன்றி செலுத்தவதுதான். தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், அறுவடை திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும், வட இந்தியாவில் சங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையும் அறுவடை திருநாளாகவே கருதப்படுகிறது.
பொங்கி பெருக!
போகிப் பண்டிகையின் போது நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள் போகின்றன. பொங்கல் பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கி பெருக ஆரம்பிக்கின்றன.
காணும் பொங்கல், எதிர் வரும் (காணும்) காலங்களில் நல்ல குணங்கள் எங்கும், எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள் புரிய கொண்டாடப்படுகிறது.
கோ பூஜை!
மாட்டுப் பொங்கலும் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் கோ பூஜையும் ஒன்றே. காமதேனுவின் சக்திகளாக பசுக்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பசுக்களை, தமிழர்கள் வழிபடுவது போலவே, கோ பூஜையிலும் பசுக்கள் பூஜிக்கப்படுகின்றன. வேதமந்திரம் முழுவதும் முழங்க கோமதா பூஜிக்கப் படுகிறாள்.
பொங்கல் எனும் அற்புத பேக்கேஜ்!
மாடாய் உழைக்கும் மனிதனுக்கு முதல் நாள் பொங்கல். மனிதனுக்காக உண்மையில் மாடாய் உழைக்கும் மாடுகளுக்கு சீவி சிங்காரித்து கொண்டாடுவது, 'மாட்டுப் பொங்கல்!'
அடுத்து உழைத்து சேர்த்த காசு தன் பையில் இருக்கும். கட்டுச்சோற்றை கட்டிக்கொண்டு குடும்பமே ஒண்ணு சேர குதூகலமாக மூன்றாம் நாள் கிளம்பி விடுவது காணும் பொங்கல். இப்படி உழைப்பாளி, பிராணி, உறவுகள் என்று எல்லாரும் இன்புற மனிதர்கள் உருவாக்கிய, அற்புதமான பேக்கேஜ் கொண்டாட்டம் பொங்கல். இப்படிப்பட்ட சிறப்பு, உலகில் வேறு எந்த பண்டிகைக்கும் கிடையாது.
காணும் பொங்கலிலும் கொடுப்பது தொடரும்!
பொங்கலில் காணும்பொங்கல் என்ற பண்டிகை உண்டு. முதல் நாள் செய்து மீந்து போன சர்க்கரைப் பொங்கல், சாதம் எல்லாவற்றையும் எடுத்து போய் மொட்டை மாடியில் பரப்புவர்.
சாதத்தில் மஞ்சள் கலந்து மஞ்சள் சாதம், மோர் சேர்த்து வெள்ளை சாதம் என சாதங்கள் கலர் கலராய் கண்ணை பறிக்கும். மஞ்சள் கிழங்கின் இலையில், பெண் குழந்தைகள் உருண்டை பிடித்து மேற்படி உணவுகளை படைப்பர். ஒற்றைப்படை எண்ணில்தான் உருண்டை வைக்க வேண்டும். மூன்று, ஐந்து, ஏழு இப்படி... அழகழாக எல்லா குழந்தைகளும் அடுக்கியதும் அனைத்தும் சூரியனுக்கு படைத்து பெரியவர்களிடம் ஆசி பெற வேண்டும்.
இயற்கையோடு இணைந்த வாழ்வு எத்தனை சுகம்
