தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி!(13) - சரண்யா

பூங்குழலி!(13) - சரண்யா

பூங்குழலி!(13) - சரண்யா


PUBLISHED ON : ஜூன் 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: சின்னப்பெண் பூங்குழலி வளர்ந்து பருவ மங்கை ஆனாள். அவளை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினார் அமைச்சர். இனி-

ˆமய்காப்பாளன் வந்து சொன்ன செய்தியைக் கேட்டதும், அமைச்சர் அறிவுமதி பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார். எப்படியும், இளவரசி அந்தஸ்திலிருக்கும் பூங்குழலியை ஒழித்துக் கட்டிவிட்டு, தம் மகன் பேரறிவாளனை அரச குமாரனாக்க வேண்டுமென்ற பேராசை அவருள் அதிகரித்தது.

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், எவ்வளவு ஏமாற்றங்கள் வந்தாலும், தன் லட்சியத்திலிருந்து சிறிதும் பின்வாங்காமல் இலக்கை அடைந்தே ஆக வேண்டும். அடுத்த முயற்சியை உடனே தொடராமல், சிறிது காலம் செல்லட்டும் என்று தீர்மாணித்தார் அமைச்சர் அறிவுமதி.

சிறுமி பூங்குழலி எழில் மங்கையானாள். சிறுவர்களாகயிருந்த பேரறிவாளனும், புலந்திரனும், அரும்பு மீசை வளர்ந்த இளைஞர்களாயினர்.

என்ன முயற்சியை அடுத்து தொடங்கலாம் என்று அமைச்சர் அறிவுமதி தமது அரண்மனையிலுள்ள பட்சி கூட்டங்கள் நிறைந்த, மேலே ஒளியும் காற்றும் தாராளமாக உள்ளே வருமாறு அமைந்திருந்த பூந்தோட்டத்தில், அங்குமிங்கும் அலைந்தபடி யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ''அமைச்சர் பெருமானே! வணக்கம். தங்களை அரசர் அரண்மனைக்கு வருமாறு செய்தி அனுப்பியிருக்கிறார்!'' என்றான் அங்கு வந்த காவலாளி ஒருவன்.

அரசர் ஏன் தன்னை கூப்பிட்டு அனுப்பியுள்ளார் என்று தனக்குத்தானே கேள்விக் கேட்டபடி, அரசரின் அரண்மனையை சென்றடைந்தார் அமைச்சர் அறிவுமதி.

''வாருங்கள் அமைச்சரே! அமருங்கள்...'' என்றார் அரசர் அமரசிம்மன்.

தனது இருக்கையில் அமர்ந்து, ''அரசே! என்னை தாங்கள் அழைத்ததன் காரணத்தை அறிந்து கொள்ளலாமா?'' என்று மிகவும் பணிவுள்ளவர் போல அமைச்சர் அறிவுமதி கேட்டார். அப்போது அரசி மாணிக்கவல்லியின் அருகில் அமர்ந்திருக்கும் பூங்குழலியை பார்த்தார் அவர்.

''சிறுமியாக இருந்த இந்த பெண் எப்படி வளர்ந்துவிட்டாள் அரசே... பெண்ணும், பீர்க்கங்காயும், 'மடமட'வென வளர்ந்து விடுவர் என்று சொல்வது சரிதான்!'' என்று சொல்லி, ஒரு சிரிப்பை தம் முகத்தில் வரவழைத்துக் கொண்டார் அமைச்சர் அறிவுமதி.

''பூங்குழலி வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டாள். கல்வி, கேள்விகளிலும் நல்ல தேர்ச்சிப்பெற்றுவிட்டாள். நம் அரண்மனை நூலகத்தில், அவள் படித்து முடிக்காத எந்த ஏடுமில்லை!'' என்று பெருமையாக கூறிக்கொண்டு வந்த அரசர் அமரசிம்மன், பூங்குழலியின் கேசத்தை வருடிக் கொடுத்தார்.

பிறகு, ''கடந்த ஆண்டுகளில், அவள் உடல் திடம் பெறவும், பலம் பெறவும், அரசியார் நல்ல உணவுகளை கொடுத்து பூங்குழலியை வளர்த்துள்ளார். இன்னும் சில ஆண்டுகளில் ஒரு விழா எடுத்து, 'நம் நாட்டின் இளவரசி பூங்குழலி' என்று, நம் நாட்டினருக்கும் பிற நாட்டினருக்கும் அறிவுக்க வேண்டும். மேகநாட்டின் இளவரசி பூங்குழலி என்று பிரகடனப்படுத்த வேண்டும் அமைச்சரே!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

''தங்கள் விருப்பம் நியாயமானதே அரசே! பூங்குழலி இந்த மேகநாட்டின் இளவரசி என்று அறிவிக்க, இச்சபையிலுள்ள அரசப் பிதானிகள், அறிஞர் பெருமக்களோடு நானும் ஒருவனாக இருக்க விரும்புகிறேன் அரசே!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''பூங்குழலி கல்வியில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். ஒரு அரசகுமாரனுக்கோ, ஒரு அரசகுமாரிக்கோ, கல்வியறிவு மட்டும் போதாது... வில்வித்தை, வாட்போர், மற்போர், குதிரை ஏற்றம், யானையேற்றம், ராஜதந்திரம் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் அமைச்சரே!''

''உண்மை... முற்றிலும் உண்மை!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அரசே?'' என்று கேட்டார் அவர்.

''பூங்குழலியை ஒரு சிறந்த வில்லாளியாக, ஒரு வாட்போர் வீரமங்கையாக, மற்போரில் வல்லவளாக ஆக்க வேண்டும். அவைகளை கற்க அமைச்சராகிய தாங்கள்தான் சிறந்த பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

''ஒருமுறை பூங்குழலி, கல்வி கற்க ஒரு குரு வேண்டுமென்று தாங்கள் என்னிடம் சொன்னபோது, ஒரு குறைமதி படைத்தவனை குருவாகக் கொண்டு வந்தேன். அவன் பூங்குழலியிடம் அவமானப்பட்டு அவையை விட்டே ஓடினான். அது போல இப்போதும் ஆகிவிடக் கூடாதே... என்று தான் யோசிக்கிறேன்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''ஒருமுறை தவறு நேர்ந்துவிட்டால், அதுபோலவே ஏதாவது நிகழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது அமைச்சரே! யானைக்கும் அடி சறுக்குமல்லவா? அது சகஜம்... தாங்கள் குற்ற உணர்வேயில்லாமல், வில், வாள், போர் மற்றவற்றில் தேர்ச்சியானவர்களை தேர்ந்தெடுத்து பூங்குழலிக்கு பயிற்சியை ஆரம்பியுங்கள். நம் பூங்குழலியும், அரண்மனை நூலகத்திலுள்ள நூல்களை எல்லாம் படித்து ஓரளவு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறாள்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதென்று எண்ணிய அமைச்சர் அறிவுமதி, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ''அரசே! சிறந்த பயிற்சியாளர்களை அவசரப்படாமல் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறேன். பொறுப்பு முழுவதையும் என்னிடம் தாங்கள் ஒப்படைத்தாலும், வில், வாள், மற்போரில் எல்லாம் சிறந்து விளங்கி பல போர்களில், எதிரிகளை சிதறடித்து ஓடச் செய்த தாங்களும், அவ்வப்போது பூங்குழலி எப்படி பயிற்சி பெறுகிறாள் என்பதை கண்காணித்து வந்தால் எனக்கு உதவியாக இருக்கும்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''கண்காணிக்கிறேன் அமைச்சரே! என் மகள் எல்லாவற்றிலும் திறமை பெற்றவள் என்பதை, இந்த ஊரும், உலகமும் கூறுவதை கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறவன் தானே நானும்!'' என்றார் அரசன் அமரசிம்மன்.

''பயிற்சியின்போது, போராயுதங்கள் என் கண்மணியின் மீது தவறி கூட பட்டுவிடக்கூடாது அமைச்சரே!'' என்றார் மகராணி மாணிக்கவல்லி.

போராயுதங்களுடன் பயிற்சியில் ஈடுபடும்போது, நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், சிறுசிறு காயங்கள் ஏற்படத்தான் செய்யும் மகாராணி!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

அரசரே அப்படி கூறியது, அமைச்சர் அறிவுமதிக்கு சவுகரியமாகப் போய்விட்டது. பயிற்சியின் போது பூங்குழலிக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டு மகாராணியார், 'என் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த ஆயுதப்பயிற்சி வேண்டவே வேண்டாம்!' என்று சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லாவிட்டால், முதலில் சிறுசிறு வெட்டுக் காயங்கள் உண்டாவதை பயன்படுத்தி, பூங்குழலியின் உயிரை முடிக்க, பெரிய காயம் அல்லது உடலில் காயத்தை வேண்டுமென்றே ஏற்படுத்தி, அரண்மனை வைத்தியரிடம் கூறி, காயம் குணமாகாமலிருக்க ஏதாவது வேறு மருந்துகளைப் போடச் சொல்லி, வெட்டை குணமடையாமல் செய்து அல்லது ரத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலக்கும் விஷத்தை மருந்து வடிவில் பூங்குழலியின் காயத்திலிட்டு அவள் கதையை முடித்துவிட வேண்டும்,'' என்றெண்ணினார் அமைச்சர் அறிவுமதி.

''தாயே! தாங்கள் என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம்! உடலில் ஒரு சிறுகீறல் கூட விழாமல், எல்லா போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு, அதில் முழுப்பயிற்சியும் பெற்று, வீரமகளாக வந்து தங்கள் பாதம் தொட்டு வணங்குவேன்! இது உறுதி,'' என்றாள் பூங்குழலி.

''தன்னம்பிக்கையோடு தொடரும் எந்த காரியமும், வெற்றியையே கொண்டுவந்து சேர்க்கும் குழந்தாய்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.

''உத்தரவு மன்னரே! போர்ப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்கிறேன் அரசே!'' என்று சொல்லிவிட்டு புறப்பட்ட அமைச்சர் அறிவுமதியின் மனதில் மகிழ்ச்சி உண்டாயிற்று. பூங்குழலியை தொலைத்துக்கட்ட வந்திருக்கும் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார் அவர்.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us