PUBLISHED ON : ஜூன் 10, 2011

அப்போது ராமனும், சீதையும் தவப்பள்ளியில் இருந்தனர். லட்சுமணன் வெளியே நின்று கொண்டிருந்தான். தவப் பள்ளியை நெருங்கிய குகன், தன் பெருமை அறிந்து யாரும் வரவேற்கவில்லை என்பதை உணர்ந்தான். அனுமதியின்றி உள்ளே போகக் கூடாது என்றும் எண்ணினான்.
''அன்பால் உங்கட்குப் பணி செய்ய வந்தேன்!'' என்று லட்சுமணனிடம் கூறினான் குகன்.
அதைக் கேட்ட லட்சுமணன், குகனை நோக்கி, ''நீ யார்?'' என்று கேட்டான்.
''சுவாமி! உங்களைக் காணவே வந்தேன். நான் ஒரு வேடன். இக்கங்கையில் ஓடம் விடுபவன்; உங்கள் அடியவன்!'' என்று கூறினான். அதைக் கேட்ட லட்சுமணன், குகனை அவ்விடத்திலேயே நிற்க வைத்துவிட்டு, ராமனிடம் சென்று குகனுடைய வருகையைக் கூறினான்.
அதனை அறிந்த ராமன், ''அவனை இங்கு அழைத்து வருக!'' என்று பணித்தான். லட்சுமணன் உடனே வந்து குகனை ராமன் முன் அழைத்து சென்றான்.
உள்ளே சென்ற குகன், தன் கண்களால் ராமனைக் கண்டு களித்தான்; மனம் குளிர்ந்தான். தன் தலைமயிர் தரையிலே படுமாறு விழுந்து வணங்கி எழுந்து, பயபக்தியுடன் பணிந்து பயத்தினால் வாய் பொத்தி நின்றான். அவ்வாறு நின்ற குகனைப் பார்த்து ராமன், ''இவ்விடத்தில் அமர்க!'' என்று கூறினான்.
அப்போது குகனுடைய ஆர்வத்தை அறிந்த லட்சுமணன், ''இவன் தாயினும் நல்லவன்; உள்ளமோ தூயவன்; படகோட்டும் தலைவன். குகன் என்னும் பெயருடையவன். உங்களைக் காண வந்துள்ளான்!'' என்று விளக்கமாக எடுத்துக் கூறினான்.
குகன், ராமன் சுட்டிக்காட்டிய அவ்விடத்தில் அமராமல் நின்றபடியே, ராமனைப் பணிவுடன் நோக்கி, ''சுவாமி! தங்களுக்குக் காணிக்கையாகத் தேனும், மீனும் கொண்டு வந்திருக்கிறேன். தங்கள் திருவுள்ளம் என்னவோ!'' என்று கூறினான்.
அதைக் கேட்ட ராமன், அருகில் இருந்த முனிவர்களைப் பார்த்துப் புன்முறுவல் செய்தான். பின்னர் குகனைப்பார்த்து, ''அன்பின் மிகுதியால் நீ கொண்டு வந்த இவை அமிர்தத்தைவிட மேலானவை; பரிசுத்தமானவை. நான் ஏற்றுக் கொள்வதற்கு உரியவை. ஆகையால், மனம் மகிழ்ந்து நாம் உண்டதற்கு ஒப்பாகும்!'' என்று கூறினான்.
அவ்வாறு கூறிய ராமன், மேலும் குகனைப் பார்த்து, ''இன்று நாங்கள் இவ்விடத்தில் தங்கியிருந்து, நாளை காலையில் கங்கையைக் கடந்து செல்லக் கருதியுள்ளோம். ஆகையால், நீ இன்று உன் கூட்டத்தாருடன் உனது இருப்பிடம் சென்றடைந்து, நாளை காலையில் படகுடன் வருவாயாக!'' என்று கூறினான்.
அதைக் கேட்ட குகன், ''சுவாமி! மாமன்னர் மைந்தரான தங்களை இக்கோலத்தில் கண்டு விட்டுப்பிரிந்து செல்வதற்கு என் மனம் இசையவில்லை. ஆகையால், தங்களிடமே நான் இருந்து தொண்டு புரியத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்!'' என்று ராமனிடம் வேண்டினான்.
அதைக் கேட்ட ராமன், சீதையையும், லட்சுமணனையும் பார்த்து, பின்னர் குகனை நோக்கி, ''யாதினும் இனிய நண்பா! நீயும் எனக்கு அன்பான தம்பிதான். அவ்வாறே இவ்விடத்தில் இருப்பாயாக!'' என்று பணிந்தான்.
ராமன் குகனை, 'யாதினும் இனிய நண்பா' என்று அழைத்தது, அவர்கள் இருவரது நட்பின் சிறப்பை விளக்குவதாகும். ராமன் தன்னுடன் இருப்பாயாக என்று கூறியதும் குகன் பெருமகிழ்ச்சி கொண்டான். தன் சேனையைச் சுற்றிலும் ஏவி, வில்லை ஏந்திக் காவல் புரிந்து நின்றான். ராமன் நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்து சேர்ந்த செய்தி எல்லாவற்றையும் லட்சுமணன் கூறக் கேட்டறிந்தான். அவற்றைக் கேட்டறிந்த அளவில் அவன் கண்களில் நீர்வழியக் கலங்கி நின்றான்.
அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையில் மறைந்தான். ராமன் மாலைக் காலத்தில் செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்துவிட்டு, தருப்பைப் பாயில் படுத்து உறங்கினான். அவன் தேவி சீதையும் அவ்வாறே உறங்கினாள். லட்சுமணன் கையில் வில் ஏந்தியவாறு, கண்களை இமைக்காது பொழுது விடியும் வரை காவல் புரிந்துநின்றான்.
அவ்வாறு காவல் புரிந்து நின்ற லட்சுமணன், ராமனும், சீதையும் எளியவர்கள் போலத் தருப்பைப் பாயலில் படுத்து உறங்கியதைக் கண்டு மிகுந்த வருத்தத்துடன் கண்களில் நீர் வடிய, சித்திரம் போல வில்லை ஊன்றிய வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
நண்பன் குகன், யானைக் கூட்டங்கள் போன்ற அநேகம் வேடர்கள் சூழ கையில் வில்லைத் தாங்கிக் கொண்டு மனம் வெம்பிப் புழுங்கிக் கண்களில் நீர் வடிய, லட்சுமணன் நின்று கொண்டிருந்ததையும் ராமன் படுத்திருந்ததையும் பார்த்து நின்றான்.
இரவு நீங்கி கதிரவன் தோன்றினான். ராமன் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, குகனை நோக்கி, ''கங்கையைக் கடப்பதற்குப் படகினைக் கொண்டு வருவாயாக!'' எனப் பணித்தான். நண்பன் குகனுக்கு ராமனை விட்டுப் பிரிந்து செல்ல விருப்பமில்லை. அதனால், அவன் கண்களில் நீர் வடிய, ராமனையும் சீதையையும் வணங்கி நின்றான்.
''சுவாமி! அடிமைகளாகிய நாங்கள் பொய் என்பதை அறியோம்; பொய் வாழ்க்கை இல்லாதவர்கள். நாங்கள் வாழ்வது காட்டில், நாங்கள் மிகுந்த பாவிகள்; நீங்கள் இடும் ஏவலைச் செய்யத் தக்கவர்கள். ஆகையால், தாங்கள் வேறு இடத்திற்குச் செல்ல நினைக்காமல், எங்கள் இருப்பிடத்திலேயே தங்கியிருக்கலாம். நான் ஒரு குறையும் இல்லாதவன். தாங்கள் எம்மூர்க்கு வந்து தங்கிப் போக வேண்டும்.
''உண்பதற்கு தேனும், தினையும் உள்ளன. சிறந்த மாமிசமும் உண்டு. துணை புரிவதற்கோ நாங்கள் இருக்கிறோம். விளையாடுவதற்கோ காடுகளும் உண்டு. நீராடுவதற்கோ கங்கை இருக்கிறது. நான் உள்ளவரையிலும் என் ஊரிலேயே இருக்கலாம். உடுப்பதற்கோ பட்டாடை போன்ற தோல்கள் இருக்கின்றன. படுத்து உறங்குவதற்கோ பரண்கள் உள்ளன.
''வேகமாகச் செல்லும் கால்களையும், வில்லேந்திய கைகளையும் உடையோம். வானத்தில் உள்ள பொருள் வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்போம். வலிமையில் மேம்பட்ட வேட்டுவர் ஐந்நூறாயிரவர் உள்ளனர். தாங்கள் ஒரு நாளாவது என் குடிசையில் தங்குவீராயின் இதைவிட நான் பெறும்பேறு வேறு ஏதும் இல்லை!'' என்று தன் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்து வேண்டினான்.
அதற்கு ராமன், குகனது அன்பைப் பாராட்டிப் புன்முறுவல் செய்து, ''நாங்கள் பற்பல புண்ணிய நதிகளில் நீராடி, புனித முனிவர்களைக் கண்டு வணங்கிக் கொண்டு சில நாட்களில் மீண்டும் வருவோம். அப்போது உன் இருப்பிடத்திற்கு வருகிறோம்!'' என்று கூறினான்.
நண்பன் குகன் அதன் பின்னர் எதுவும் கூறாது, ராமனது கட்டளைப்படியே சென்று படகினைக் கொண்டு வந்தான். ராமன் அங்கிருந்த முனிவர்களிடமிருந்து விடைபெற்று, சீதையுடனும் லட்சுமணனுடனும் படகில் ஏறினான்.
(-தொடரும்)
