தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (16) - சரண்யா

பூங்குழலி (16) - சரண்யா

பூங்குழலி (16) - சரண்யா


PUBLISHED ON : ஜூலை 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: இளவரசிக்கு, மற்போர், வில்போர் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இனி-

மேக நாட்டின் நீதி பரிபாலன சபை கூடியிருந்தது. அரசர் நீதி வழங்கும் நீதியின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இரு புறமும் இரண்டு சாட்சிகள் நின்று பேசும் சாட்சிக் கூண்டுகள் இருந்தன. சபையின் இருபுறமும் சட்ட வல்லுனர்களும், அறிஞர் பெருமக்களும் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர் அறிவுமதி தமது இருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். நாளுக்கு நாள் பூங்குழலியின் அறிவுசுடர் மிகவும் பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பவர். அதை ஊதி அணைக்க ஒரு சந்தர்ப்பம் வராதா என்று, ஓடு மீன் ஓட உலுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கைப் போல, பூங்குழலியின் செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருந்தார் அவர்.

கால் கொலுசு, 'கணீர், கணீர்' என இனிய ஒலி எழுப்ப சிரித்தபடி இருபுறமுமுள்ள அவையோரை இருகை கூப்பி வணங்கியபடி வந்தாள் பூங்குழலி.

அரசரின் சிம்மாசனம் அருகே ஒரு சிறிய சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. அது பூங்குழலி அமர்ந்து நீதி பரிபாலனை சபை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்வதற்காக போடப்பட்டிருந்தது.

''வா! குழந்தாய் பூங்குழலி!'' என்று அழைத்த அரசர் அமரசிம்மன் அவளை அச்சிமாசனத்தில் அமரச் செய்தார்.

மேன்மாடத்தில் அரசியார் மாணிக்கவல்லி இருபுறமும் இரு சேடிப் பெண்கள் மயில் பீலிகைகளாலான விசிறியைக் கொண்டு வீசிக் கொண்டிருந்தனர்.

''அவையோர்களே! இந்த நீதி பரிபாலன சபை இன்று விசேஷமாக கூட்டப்பட்டுள்ளது. ஏனென்றால், நம் வருங்கால இளவரசியார் பூங்குழலி கல்வி கேள்விகளில் தேர்ச்சிப்பெற்றவளாகி விட்டாள். அதுபோல, வில்வித்தை, வாட்போர், மல்யுத்தம், குதிரையேற்றம், யானையேற்றம் ஆகியவைகளிலும் பயிற்சிப் பெற்று சிறந்து விளங்குகிறான்.

அவளுக்கு நீதி பரிபாலன சபைக்கு வரும் வழக்கை எப்படி கையாள்வது, எப்படி முடிவெடுத்து அறிவிப்பது போன்ற விஷயங்களில் முதலில் அடிப்படை அறிவும், அனுபவமும் ஏற்பட வேண்டும். இது ஒரு நாளில் வந்துவிடாது என்பது உண்மையே! பல நாட்கள் பல வழக்குகளை அவள் கையாள வேண்டும். இன்று ஒரு வழக்கை சபைமுன் கொண்டுவந்திருக்கிறோம். வாதி, பிரதிவாதி ஆகியோரின் வாதங்களைக் கேட்டு, நியாயத்தின் அடிப்படையில் வழங்குவது தான் நீதி. அதை எப்படி பூங்குழலி தீர்த்து வைத்து தீர்ப்புக் கூறுகிறாள் என்பதை இன்று கண்டறியப்போகிறோம்!'' என்றார் அரசர். பிறகு சபையைப் பார்த்தார்.

சற்று வயதான ஒருவரும், மிகவும் இளவயது வாலிபன் ஒருவனும் எழுந்து வந்து ஒவ்வொரு சாட்சிக் கூண்டிலும் ஏறி நின்றனர்.

''உங்கள் தரப்பு வழக்கென்ன?'' என்று இளைஞனிடம் கேட்டாள் பூங்குழலி.

''இளவரசியாரே! நான் செல்வமிக்க ஒரு தனவந்தரின் மகன். அவர் இப்போது இல்லை. காலமாகி விட்டார். ஆனால், அவர் விட்டுச்சென்ற சொத்துக்கள் பத்து தலைமுறைக்கு போதும் எனும்படி உள்ளன.

''அப்போது நான் சிறிய குழந்தை. விளையாட்டுப் பருவம். என்ன செய்யவேண்டுமென்றெல்லாம் எனக்குத் தெரியாது.

''அப்போது பிரதிவாதி கூண்டில் நிற்கிற சாது எங்களுக்கு வந்திருந்தார். சிறந்த புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், காவியங்கள் எல்லாம் கற்றவர். அவர் தினசரி கோவில் மண்டபத்தில் உபந்யாசங்கள் நிகழ்த்துவார். சொற்பொழிவாற்றுவார். புராணங்கள் படிப்பார். நீதிக் கதைகள் கூறுவார்.

''அவர் பிரசிங்கிப்பதை கேட்க, என் தந்தை நாள் தவறாமல் செல்வார். கூட்டத்தோடு சேர்ந்து உட்கார்ந்து அவர் பேசுவதை கேட்டார். என் தந்தைக்கு அவரிடம் ஒரு நன்மதிப்பும், மரியாதையும் உண்டாயிற்று. அவரை வீட்டுக்கு அழைத்து வந்து உணவுக் கொடுத்து உபசரிப்பார் என் தந்தை.

''அப்போது அவர் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இந்த சாதுவிடம் நம் குழந்தை பெரியவளானதும் நம் சொத்தை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளலாமென்று எண்ணினார். எண்ணியதை சாதுவிடம் கூறினார். இந்த சாது அதற்கு முதலில் சம்மதிக்கவில்லை என்றாலும், என் தந்தை மேலும், மேலும் அவரை வலியுறுத்தவே சம்மதித்தார். என் தந்தையின் காலம் முடிந்தது. இந்த சாது தன் சுகபோக வாழ்க்கைக்கு, என் தந்தை விட்டுச்சென்ற சொத்துக்களை பயன்படுத்திக் கொண்டார்.

''நான் வாலிபனானதும், இவரிடம் சென்று என் தந்தை விட்டுச்சென்ற சொத்துக்களை என்னிடம் ஒப்படைக்கும்படி வேண்டிக் கொண்டேன். அவரோ, ஒரு சிறிய வீடும், நிலமும், சிறிது பொற்காசும் கொடுத்து இவ்வளவுதான் உனக்கு சேர வேண்டியது. நீ பெரியவளானதும் உங்களுக்கு பிரியப்பட்டதை என் மகனுக்கு கொடுத்தால் போதும் என்று உன் அப்பா எழுதி, கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பதாக கூறினார்,'' என்றான் இளைஞன்.

''அந்த சாதுவைப் பார்த்த பூங்குழலி, ''இவ்விளைஞனுக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டாள்

''இவன் தந்தை நான் பிரியப்பட்டதை இவனுக்கு கொடுக்கும்படி எழுதிக் கொடுத்த கடிதம் இதோ இருக்கிறது. அதன்படி நான் பிரியப்பட்ட ஒரு வீட்டையும், கொஞ்சம் நிலத்தையும், கொஞ்சம் பொற்காசுகளையும் கொடுத்து விட்டேன்!'' என்றார். கடிதத்தையும் பூங்குழலியிடம் கொடுத்தார்.

அதை படித்த பூங்குழலி அச்சாதுவை நோக்கி, ''இவன் தந்தை எழுதியதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் பிரியப்படுவதை குழந்தைக்கு கொடுங்கள் என்று எழுதியிருக்கிறார். நீங்கள் பெருமளவு சொத்தை வைத்துக்கொள்ள பிரியப்படுகிறீர்கள். இவனுக்கு சொத்தில் ஒரு சிறிய பாகத்தை மட்டுமே கொடுத்த நீங்கள், அதிக அளவு சொத்தை வைத்துக் கொள்ள பிரியப்படுகிறீர்கள் என்பது தெரிகிறது. ஆதலால், உங்கள் பிரியத்திற்குரிய பெரும் சொத்தை இந்த இளைஞனிடம் சேர்த்து விடுங்கள். அதுதான் நியாயம்!'' என்றாள் பூங்குழலி.

தன் மதியூகத்தால் வழக்கை மிகவும் சுலபமாக தீர்த்து வைத்த பூங்குழலியை அனைவரும் கொண்டாடினர்; பாராட்டினர்.

''நல்ல தீர்ப்பு வழங்கினாய் மகளே!'' என்று மகிழ்ந்து கூறினார் அரசர் அமரசிம்மன். மேல்மாடத்திலிருந்து அரசி மாணிக்கவல்லி பூங்குழலியின் மீது மலர் மாறிப் பொழிந்தாள்.

அமைச்சர் அறிவுமதி, நீதி வழங்குவதிலும் தான் ஒரு சிறந்த பெண் என்பதை நிரூபித்துவிட்ட பூங்குழலியை ஒழித்துக்கட்ட என்ன உபாயம் செய்யலாமென யோசிக்கலானார். அதனால் மாறு வேடம் பூண்டு மின்னல்புரி முழுவதும் ஒரு பிச்சைக்காரனைப் போல அலைந்தார்.

ஒரு வீதியில் கூட்டம் கூடியிருந்தது. அதன் நடுவே உட்கார்ந்திருந்த ஒருவன் மாங்கொட்டை ஒன்றை தரையில் நீர் தெளித்து ஊன்றி தண்ணிடமுள்ள ஒரு துணியால் அதை மூடி, 'மாங்கொட்டை இப்போது வளர்ந்து மாங்காய் காய்க்கப்போகுது பாருங்க, பாருங்க, வேடிக்கைப் பாருங்க!' என்று கூவிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அவன் துணியை எடுத்ததும் சில இலைகளுடன் ஒரு மாங்காய் காய்த்த செடி இருந்தது.

அதிசயப்பட்ட அமைச்சர் அறிவுமதி அவனிடம், ''இது எப்படி நடந்தது?'' என்று கேட்டார்.

''மந்திரம் கால் மதிமுக்கால்! இதைவிட அற்புதமான வேலைகளை எல்லாம் செய்யும் ஒரு மந்திரவாதி உள்ளார்!'' என்றான் வித்தைக்காரன்.

''அவனிடம் என்னை இப்போதே அழைத்துப்போ!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

அன்று மாலை கண்களில் துணியை கட்டிக்கொண்டு ஓடிப்பிடிக்கிற விளையாட்டை தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பூங்குழலி, காணாமல் போனாள்.

(-16 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us