PUBLISHED ON : ஜூலை 01, 2011

ராஜபுத்திரர்களின் வீரம் உலகமறிந்த ஓர் ஒப்பற்ற அற்புதம். உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் இல்லாத அதிசய ஆற்றலும் மனோதிடமும் கொண்டவர்கள் ராஜபுத்திரர்கள். நேர்மைக்கும், உண்மைக்கும் உறைவிடம் அவர்களே. நன்றி மறவாத நாயகர்கள். ராஜ புத்திரர்களின் வீரத்தைக் கேட்கும் கோழையும் கூட வாள் வீசப் பாய்ந்து எழுவான்.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பண்டி என்ற நாட்டின் மன்னன் ராஜா ராவ் சத்ரஸால். மொகலாயர் வெற்றி கொடி நாட்டிய ஆதிக்கம் காலம் அது. சத்ரஸாலைச் சிங்காசனத்தில் அமர்த்தியவர் ஷாஜகான். ஆரம்பத்தில் ராஜபுத்திரர்கள், அந்தியர்களான மொகலாயர்களின் வரவை எதிர்த்துப் போரிட்டாலும் நாளடைவில் மொகலாயர்களுடன் நட்புக் கொண்டு வாழலானார்.
அக்பர் ராஜபுத்திர மங்கையையே மணந்து கொண்டார். தமது ஆளுகையிலே ராஜபுத்திரர்களைப் பல உயர்ந்த பதவிகளில் அமர்த்திப் பகைமையை வென்று அவர்களின் நட்புக்குப் பாத்திரமாகி விட்டார் அக்பர். அதே போல் அக்பரின் பேரனான ஷாஜகானும், வீரர் சத்ரஸாலை ஆக்ராவின் கவர்னராக்கிக் கவுரவித்தார். மாவீரர் சத்ரஸால், ஷாஜகானுக்காக எத்தனையோ போர்களில் வெற்றிவாகை சூடி வந்திருக்கிறார்; நன்றி மறவாத நல்ல வீரர் சத்ரஸால்.
'ஹரா' என்ற இனத்தைச் சேர்ந்தவர். 'ஐம்பத்திரண்டு போர்களில் வெற்றி கண்டு 'மாவீரன்' என்ற பட்டப்பெயர் பெற்றவர் இவர்.மாமன்னர் ஷாஜகானுக்கு நான்கு புதல்வர்கள். தாரா மூத்த மகன். ஷூஜா, மூரத், அவுரங்கசீப் ஆகிய மூவரும் இளையவர்கள். தமது சாம்ராஜ்யத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து, நான்கு புதல்வர்களையும் தனது பிரதிநிதியாக இருந்து ஆட்சி புரிய அனுப்பியிருந்தார்.
உலகப் புகழ் பெற்ற தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகானின் கடைசிக் காலம் மகிழ்ச்சிகரமாக இல்லை. புகைந்து கொண்டிருந்த அரசுரிமைப் போராட்டம் ஒரு நாள் குபீரென்று பற்றிக் கொண்டது. தகப்பனாருக்கு ஏதிராகப் போர்க் கொடி உயர்த்தினர் இளைய புதல்வர்கள். முறைப்படி மூத்தவனான தாரா சிம்மானசனத்தில் அமருவதை விரும்பவில்லை தம்பிகள். அதிலும் கடைசி மகனான தந்திரசாலியான அவுரங்கசீப் தானே டில்லி சிங்கானத்தில் உட்காரத் திட்டமிட்டான். தான் நினைத்ததை முடிப்பதற்காக எதையும் செய்யத் தயங்காத குரூர குணம் படைத்தவன் அவுரங்கசீப்.
அரசுரிமைப்போர் ஆரம்பமானபோது, தென்னாட்டின் கவர்னராக இருந்தான் அவுரங்கசீப். அவனுடன் இருந்தார் சத்ரஸால். மன்னர் ஷாஜகான் தம் மைந்தர்களுக்குக் காவலாகவும் துணையாகவும் பல ராஜபுத்திரத் தளபதிகளை அனுப்புவது வழக்கம். ராஜபுத்திரர்கள் தங்கள் படைகளுடன் இளவரசர்களுக்கு ஆலோசகர்களாக இருந்தனர். அப்படி தக்காணத்தில் அவுரங்கசீப்புடன் இருந்தார் சத்ரஸால். தம் தளபதி சத்ரஸாலின் வீரத்தையும், ஆற்றலையும் அறிவார் அவுரங்கசீப். ஆரம்பத்தில் மன்னர் ஷாஜகானுக்கு எதிராக, தன் பக்கம் இருக்கும்படி நயமான வார்த்தைகளால் கேட்டுக் கொண்டான் அவுரங்கசீப். ஆனால், சத்ரஸால் சம்மதிக்கவில்லை. நன்றி மறப்பது ராஜபுத்திரர்களின் பண்பில்லையே!
சக்கரவர்த்தி ஷாஜகானுக்கு, அவருடைய மகன்களாலேயே ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த வேளையில், தாம் அவர் அருகே இருப்பதையே விரும்பினார் ராஜபத்திர வீரர். தக்காணத்திலிருந்து கிளம்ப முடிவு செய்தார். சத்ரஸாவின் பிடிவாதமான முடிவை அறிந்து அவுரங்கசீப், அவருடைய கூடாரத்தைச் சூழ்ந்து கொள்ளும்படி தம் முகலாய வீரர்களுக்கு ஆணையிட்டான். தம்மை டில்லிக்குப் போக விடாமல், இப்படி ஏதாவது அவுரங்கசீப் செய்வான் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த சத்ரஸால், அவுரங்கசீப்பின் ஆட்கள் தம் கூடாரத்தைச் சூழ்ந்து கொள்ளும் முன்னமே, தமது பரிவாரம் மற்றும் பொருள்களையெல்லாம் எச்சரிக்கையுடன் வெளியேற்றி விட்டார்.
சத்ரஸால் தமது வீரர்களையும், மற்றும் ராஜவிசுவாசமுள்ள ராஜபுத்திரர்களையும் ஒன்று திரட்டினார். தங்களது நன்றிக் கடனைச் செலுத்த, ஷாஜஹானுக்காக உயிரையே கொடுப்பது என்று அவர்களும் உறுதி எடுத்துக் கொண்டனர். எல்லாரும் ஆரஞ்சு ஆடை அணிந்தனர். அவுரங்கசீப்பின் வீரர்களை எதிர்க்கத் தயாரனார். இதை முகலாய வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் திகைத்தனர். அவர்களுக்குத் தெரியும், ராஜ புத்திர வீரர்கள் இப்படிக் குங்குமப்பூ வண்ண ஆடை அணிந்தால் அதன் பொருள் என்ன என்று. வாழ்வு அல்லது சாவு! என்ற முடிவோடு போரிடும் போதுதான் ராஜபுத்திரர்கள் இத்தகைய காவி வண்ண ஆடை அணிவது வழக்கம்.
அவுரங்கசீப் ஆணையாயிற்றே. சத்ரஸாலையும் அவரது படைகளையும் எதிர்த்தனர் முகலாயர்கள். நர்மதை நதி வரையில் பின்தொடர்ந்து போனார். நர்மதையில் அப்போது வெள்ளம் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடியது. வெள்ளத்தினால் வெறி கொண்டு ஓடும் நதியை அவர்களால் கடக்க முடியாது. சுலபமாக மடக்கி விடலாம், என்று மனப்பால் குடித்தனர் முகலாயர்கள். ஆனால், பாவம் ராஜபுத்திரர்களின் தீரத்தை முழுவதும் அவர்கள் அறியவில்லை.
இந்த ஆற்று வெள்ளமா அவர்களின் வீரத்துக்குத் தடையாக இருக்கும்? வீர குணம் ராஜபுத்திரர்களுக்கு மட்டும்தானா? அவர்களுடைய குதிரைகளுக்குமே கூட உண்டு. ராஜபுத்திரர்களுடைய குதிரைகள் நிகழ்த்திய சாகசங்கள் எத்தனை எத்தனையோ, வாளாகக் குத்தும் குளிர்ந்த வெள்ள நீரிலே தங்கள் குதிரைகளை விரட்டினர். கம்பீரமாகக் கனைத்துக் கொண்டு, குதிரைகளும் ஆற்று வெள்ளத்திலே இறங்கி நீந்தி அக்கரை சேர்ந்தன. சத்ரஸாலும் அவரது சகாக்களும் பத்திரமாக ஆக்ரா நகர் போய்ச் சேர்ந்தனர். துரத்தி வந்த அவுரங்கசீப் ஆட்கள் ஏமாந்து போய் நின்றனர்.
மன்னர் ஷாஜஹான் தம் புதல்வர்களின் போக்கினால் மனம் உடைந்து நோய்வாய்ப்பட்டார். புதல்வி ஜஹனாரா நோய்வாய்ப்பட்ட தந்தையின் அருகிலேயே இருந்தாள். பட்டத்துக்கு உரியவனான சகோதரன் தாராவிடம் அன்பு கொண்டவள் சகோதரி. தகப்பனாரின் ஆசியும் அன்புமோ மூத்த மகன் தாராவிடம்தான். ஆகவே, தாராவுக்குப் பலம் சேர்க்கத் தீர்மானித்தாள் ஜஹனாரா. தம் தம்பி அவுரங்கசீப்பிடமிருந்து தப்பிய வீரர் சத்ரஸால், ஆக்ரா வந்துள்ள செய்தி அறிந்தாள். தன்னுடைய கங்கணத்தை அவருக்கு அனுப்பி வைத்தாள்.
ஒரு பெண், தன் கங்கணத்தை மாற்றானுக்கு அனுப்பினால், அவன் அவளைத் தன் சகோதரியாக (ராகி பந்த்பாய்) ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ராஜபுத்திரர்களின் வழக்கம். சத்ரஸால் ஜஹனாராவைக் சகோதரியாக ஏற்றுக் கொண்டார். அவள் பொருட்டுத் தாராவுக்காக, அவனது இரு தம்பிகளான அவுரங்கசீப், மூரத் ஆகிய இருவரின் பெரும் படைகளையும் சந்திக்கத் தம் இனத்தவர்களுடன் தயாரானார் சத்ரஸால்.
ராஜபுத்திரர்கள் தங்கள் வழக்கமான தீரத்துடன் போரிட்டனர். போர்க்களத்தில் இளவரசன் தாராவுக்கு யாரோ தவறான தகவலைத் தரவே, தாரா தனது பட்டத்து யானை மேலிருந்து கீழ இறங்கி விட்டான். விரோதிகளின் சதிச் செயல் இது. இளவரசன், தாரா, யானை மீதில்லாததைக் கண்ட போர் வீரர்கள், தங்கள் இளவரன் இறந்து விட்டதாகப் பீதி அடைந்து போர்க்களத்தை விட்டு ஓடத் தலைப்பட்டார். ஆனால், சத்ரஸால் ஓடவில்øல். வீர ராஜபுத்திரராயிற்றே. தம் வீரர்களை நோக்கிக் கர்ஜித்தார். 'ஓடுபவர்கள் கோழைகள், வெறுக்கப்பட வேண்டியவர்கள். மன்னர் ஷாஜஹானின் உப்பைத் தின்றவன் நான் என் கால்கள் இந்தப் போர்க்களத்திலிருந்து நகராது. வெற்றி பெற்றதால்தான் நான் யுத்த பூமியிருந்து உயிரோடு திரும்புவேன்; நகருவேன்.'என்றார்.
தங்கள் தலைவனின் இந்த வாசங்களைக் கேட்ட ராஜபுத்திரர்கள் புதிய பலத்துடன் விரோதிகளைத் தாக்கினார். சத்ரஸால் தமது போர் யானை மீது ஏறி அதை நடத்தினர். ஒரு பீரங்கி அவரது யானையைத் தாக்கவே யானை பீதி கொண்டு திரும்ப ஓடலாயிற்று. பண்டி வீரர் சத்ரஸால் அதன் முதுகிலிருந்து கீழே குதித்தார். தமது அருமைக் குதிரையான ஜவாடியாவை குரலெழுப்பி, அருகே வருமாறு அழைத்தார்.
''என் யானை புறமுதுகிட்டு ஓடலாம். ஆனால், அதன் தலைவனா சத்ரஸால் உயிரோடு ஓர் அங்குலம் கூடப் பின்வாங்க மாட்டான்,'' என்று கூறி அருகே வந்த ஜவாடியாவின் மீதேறி இளவரன் மூரத்தைத் தாக்கலானார். தமது ஈட்டியை மூரத்தின் மீது எறிவதற்கு ஓங்கிய அதே வேளையில் எதிரியின் குண்டு சத்ரஸாலின் தலையைத் துளைத்துச் சென்றது!
இந்திய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு மாவீரன் வாழ்க்கை முடிவுற்றது. சத்ரஸாலின் இனத்தைச் சேர்ந்த அத்தனை ராஜபுத்திர வீரர்களும் அந்தப் போர்க்களத்திலே தங்கள் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தி இளவரசன் தாராவுக்காக உயிரிழந்தனர்.
துரோகமும், சூழ்ச்சியும் வஞ்சனையும் வெற்றி பெற்றன. தன் சகோதர்களையெல்லாம் கொன்றுவிட்டுத் தாமே டில்லி சிம்மாசனமேறினார் அவுரங்கசீப். தம் தந்தையை அவர் சாகும் வரையில் கைதியாகவே வைத்திருந்தார் அவுரங்கசீப். இது சரித்திரம் கூறும் உண்மை. அதேபோல், நன்றிக் கடனைத் தீர்க்க, தன்னுயிரையே ஈந்த வீரர் சத்ரஸாலின் புகழும் ராஜஸ்தானம் எங்கும் பாடப்படுகிறது.
மாவீரர் ராஜா சத்ரஸால் தலை சிறந்த வீரர் மட்டுமல்ல; கலையுள்ளம் படைத்தவர். பக்திமான் படானில் கிஷோர் என்ற கோயிலைக் கட்டியிருக்கார். சத்ரமஹால் என்ற அரண்மனை இவரது பெயரை நினைவுபடுத்திக்கொண்டு இன்றும் பண்டியில் உள்ளது.
***
