PUBLISHED ON : ஜூலை 08, 2011

இதுவரை: இளவரசி பூங்குழலி திடீரென்று மாயமானாள். நாடே கவலைப்பட்டது. இனி -
அரண்மனை சோகத்தில் ஆழ்ந்திருந்தது. தன் தோழிகளுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசி மட்டும் காணாமல் போய்விட்டாள். அது எப்படி நிகழ்ந்தது என்பது எவருக்கும் புரியவில்லை.
அரசரும், அரசியும் அழுதபடி இருந்தனர். வராது வந்த மாமணி போல வந்த புத்தி நிறைந்த இளவரசி பூங்குழலியை பறிகொடுத்து விட்டோமே என்ற வேதனை அவர்களை வாட்டியது.
ஒருவேளை தகப்பனாருடன் வாழ விரும்பி சொல்லிக்கொள்ளாமல் போய் விட்டாளோ? தன் ஏழைக் குடும்பம் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது, தான் மட்டும் சுகபோகத்தை அனுபவிக்கிறோமே... என்று மனம் வருந்தி சென்று விட்டாளா பூங்குழலி?
அமைச்சர் அறிவுமதி அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டார். அரசர், பூங்குழலி காணாமல் போய்விட்ட செய்தியை அவரிடம் தெரிவித்தார்.
''அரசே! கவலைப்படாதீர்கள். பூங்குழலி சிறிய பெண். அவள் காணாமல் போய் சில மணி நேரங்களே ஆகின்றன. அவள் மின்னல்புரியை விட்டு வெகுதூரம் சென்றிருக்க முடியாது. வீரர்களையும், சேவகர்களையும் அனுப்பி நாடு முழுவதும் சல்லடையாக சலித்து தேட ஏற்பாடு செய்வோம்,'' என்ற அவர், உடனே வீரர்களை அழைத்து விவரம் சொல்லி அரசகுமாரியை தேடிப் பிடித்து வர ஆணை பிறப்பித்தார்.
அவர்களும், அக்கணமே நாடு முழுவதும் தேட நான்கு திசைகளிலும் பிரிந்து சென்றனர். பூங்குழலியின் தோழிகளான கங்காவும், காவிரியும், உடனே வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம், ''கங்கா, காவிரி உங்கள் பிரியமான தோழி காணாமல் போய்விட்டாள். அவள் எங்கே சென்றிருப்பாள் என்று உங்களால் ஊகித்து சொல்ல முடியுமா?'' என்று கேட்டார் அரசர் அமரசிம்மன்.
''அரசே... பூங்குழலி தனித்துச் செல்லும்படியான இடம் எதுவுமில்லை. அரண்மனையிலேயே தான் இருப்பாள். குருகுலக் கல்வி முடித்த பிறகு பூங்குழலியை நாங்கள் சந்திப்பதும், உரையாடுவதும் குறைந்துவிட்டது. அதனால், அவள் எங்கே சென்றிருக்கக்கூடுமென்று எங்களால் யூகித்துக் கூறக்கூட முடியவில்லை!'' என்றாள் கங்கா.
''அரசே! பூங்குழலி கிடைத்து விடுவாள் கவலைப்படாதீர்கள். ஏதோ ஒரு போதாத காலம் அவளை நம்மிடமிருந்து பிரித்திருக்கிறது,'' என்றார் ராஜகுரு.
''நம் வீரர்கள் எப்படியும் இளவரசி பூங்குழலியை கண்டுபிடித்து, கொண்டு வந்து விடுவர் அரசே!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.
நாட்டின் நாலாபுறமும் பூங்குழலியைத் தேடிச்சென்ற வீரர்கள் வெறும் கையுடன் திரும்பி வந்தனர். ''நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கூட தேடி பார்த்துவிட்டோம் அரசே! இளவரசியாரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை,'' என்றனர்.
''பூங்குழலியின் தந்தை பொன்னன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்தீர்களா வீரர்களே?'' என்று கேட்டாள் மகாராணி மாணிக்கவல்லி.
''தன் பெண் ராஜபோகத்தோடு சுகமாக வாழ, தான் ஒரு தடையாக இருக்கக்கூடாதென்று வடக்கே சென்று பிரவாகமெடுத்து ஓடும் ஒரு நதியில் அவர் ஜலசமாதியாகிவிட்டாராம் அரசே!'' என்றார் உளவுப் பிரிவுத் தலைவர்.
''பூங்குழலியின் சிற்றன்னை?''
''இளவரசியும், அவர் தந்தை பொன்னனும் அவர்களை விட்டுப் பிரிந்து வந்த சில தினங்களிலேயே சிற்றன்னை விஷம் குடித்து இறந்து விட்டாராம்!'' என்றார் அவர்.
அரசர் மிகவும் மனத் துயரத்துக்குள்ளானார்; அரசியும் அப்படியே-
நாட்கள் ஓடின. மாதங்கள் ஆயின.
''பூங்குழலி கிடைக்கவில்லையே... என்ன செய்வது அமைச்சரே?'' என்று விக்கியழுதபடி கேட்டார் அரசர் அமரசிம்மன்.
''அரசே ஒரு யோசனை!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.
''சொல்லுங்கள் அமைச்சரே!''
''இளவரசி பூங்குழலியை எவர் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்களோ அவர்களுக்கு பூங்குழலியை மணமுடித்து கொடுக்கப்படும் என்று நாடு முழுவதும் அறிவித்தால் என்ன?'' என்றார் அமைச்சர் அறிவுமதி.
அவருடைய யோசனை நன்றாகத்தான் இருந்தது.
மகாராணி, ராஜகுரு ஆகியோரை கலந்தாலோசித்தார் அரசர் அமரசிம்மன்.
இளவரசி பூங்குழலியை மணந்து கொண்டு இந்நாட்டை ஆள, தகுதியற்றவனான ஒருவன் பூங்குழலியை கண்டுபிடித்துக் கொண்டுவந்துவிட்டால் என்ன செய்வது?
''பட்டத்து யானை ஒரு அரசகுமாரியை தேர்ந்தெடுத்தபோது நாம் எதையும் யோசித்து பார்க்கவில்லையே அரசே! சாதாரண கல்லாக இருந்த பூங்குழலியை பட்டைத்தீட்டி வைரமாக்கவில்லையா! அதுபோல் எவர் பூங்குழலியை அழைத்து வந்தாலும் அவரையும் ஒரு அரசகுமாரராக உருவாக்கலாமே?'' என்றார் அமைச்சர் அறிவுமதி.
''அரசே! அமைச்சர் கூறுவதும் சரியே! அதன்படியே செய்வோம். இளவரசியை கண்டுபிடித்து கொண்டு வந்துவிட்டால் அவளை நமக்கு மணம்முடித்து வைப்பதோடு நாட்டை ஆளும் பாக்கியமும் கிடைக்குமே என்று இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன் வருவரே!'' என்றார் ராஜகுருவும்.
''அப்படியே செய்யலாம் அரசே!'' என்றாள் மகாராணி மாணிக்கவல்லி.
அரசர் மீண்டும் மீண்டும் யோசித்தார். இறுதியில் எப்படியாவது பூங்குழலி மீண்டும் கிடைத்துவிட்டால் போதுமென்று நினைத்து, அவர்கள் பேச்சை கேட்பதுதான் சிறந்தது என்று முடிவு செய்து, ''அப்படியே செய்யுங்கள்,'' என்று கூறிவிட்டார்.
முரசறைந்து நாடு முழுவதும் இச்செய்தி அறிவிக்கப்பட்டது. அதைக்கேட்ட புலந்திரன் மனம் பதைபதைத்துப் போனான். ''பூங்குழலி, பூங்குழலி,'' என்று கதறி அழுதான். அமைச்சர் மகன் பேரறிவாளன் அவனை சமாதானப்படுத்தி, ''வருந்தாதே புலந்திரா! பூங்குழலியை கண்டுபிடிக்கும் வழியை ஆராய்வோம்,'' என்றான்.
அரசர் ஊண் உறக்கமின்றி படும் வேதனை எல்லார் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
''அரசே! மனக்கவலையைச் சற்று மறக்க அரண்மனையிலுள்ள பட்சிகள் கூடத்துக்கு வாருங்கள். புதிதாக ஒரு கிளி வந்திருக்கிறது. ரொம்பவும் அழகு!'' என்று அரசர் அமரசிம்மனை வற்புறுத்தினார் அமைச்சர் அறிவுமதி. அரசரும் சென்றார்.
கூண்டுக்குள் இருந்த கிளிகள் கொள்ளை அழகாக இருந்தது.
அரசரையும், அமைச்சரையும் பார்த்ததும், இறக்கைகளை படபடவென அடித்துக் கொண்டது. அமைச்சர் கூண்டினருகில் சென்றதும், அது அவரை கொத்துவது போல கம்பிகளுக்கிடையே தன் மூக்கை நுழைத்தது.
அரசர் கூட்டினருகில் சென்றதும், கிளி ஒன்று கூண்டிலுள்ள குச்சி ஊஞ்சலில் உட்கார்ந்து மிகவும் சோகத்துடன் அவரை பார்த்தது .
(- தொடரும்)
