sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி தொடர் - சிகப்பு ஆமை (2)

மினி தொடர் - சிகப்பு ஆமை (2)

மினி தொடர் - சிகப்பு ஆமை (2)


PUBLISHED ON : ஜூலை 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஆமையினத்தை வாழ்விக்க வந்த சேதாமை இதுதான்!'' என்றது ஒரு மூதாமை.

''இது ஆமையேயல்ல; வேறினம்!'' என்றன சில.

பெண்ணாமை பொறுமையுடன் முட்டையைப் பாதுகாத்தது. பிறந்த ஆமையும் மற்ற ஆமைகளைவிடச் சிறியதாய் மெல்லிய தோடுடையதாய், சிகப்பாய் இருந்தது. பெண்ணாமைக்குத் தாய்ப்பாசம் பெரிதாயிருந்தாலும், பிள்ளையைப் பார்த்ததும் அது பெருமூச்சு விடாமலிருக்க முடியவில்லை. சேதாமை வளர்ந்தபின்னும் மற்ற ஆமைகளைவிட அது சிறந்தது என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை.

அது மிகுதியாக ஓடியாடுவதில்லை. உரத்துப் பேசுவதுமில்லை. அதை நோயுண்ட பிறவி என்றே ஆமைகள் கருதின. இள ஆமைகள் அதன் மீதேறியும் அதைக் கடித்தும் விளையாடின. இதனால் சேதாமை நாளடைவில் ஆமையினத்திலிருந்தே ஒதுங்கித் தனித்து வாழத் தலைப்பட்டது. தன்னைச் சூழ்ந்து கொக்கரித்த, இள ஆமைகளைக் கண்டு சேதாமை உண்மையில் அஞ்சவில்லை.

ஆனால், அஞ்சுவதுபோல அது பாவனை செய்தது. அதே இள ஆமைகள் முதலைகள் முன் எப்படி நடந்து கொண்டன என்றும் அது பார்த்தது. முதலை தன்னை அணுகுமுன்னே அவை ஒவ்வொன்றாகத் தோட்டுக்குள் ஒடுங்கின. முதலை தின்றவைபோக மீந்தவை மீண்டும் கிளர்ச்சியுடன் திரிந்தன. இவ் இள ஆமைகள் வீரமுடையவையல்ல; இனப் பற்றற்றவை என்று கண்டு, சேதாமையின் உள்ளம் உருகிற்று.

அனுபவமிக்க ஆமைகள் கூட ஓட முயன்றனவேயன்றி, வேறு புதுவழி காணவில்லையே என்று அது கவலையடைந்தது. அது செயலற்றுத் தன் வளைக்குள்ளேயே கிடந்து ஆர அமரச் சிந்தனை செய்தது. அதன் மூளையில் புதிய சிந்தனை ஒன்று தோன்றிற்று. அது நேரே முதலையரசன் வாழ்ந்த பெருங்கரை நோக்கிச் சென்றது. வாயில் காவலர்களைச் சட்டை பண்ணாமல் அது அரசன் அருகிலேயே சென்று கல்லையும், மண்ணையும் வாரி இறைத்து ஆரவாரம் செய்தது.

அஞ்சி அஞ்சிப் பதுங்கும் ஆமையினத்தில் எவரும் இதுவரை இத்தகைய செயலைச் செய்ததில்லை. முதலையரசனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வாயை அகலத் திறந்து கோரப்பற்களைக் காட்டி அச்சுறுத்திய வண்ணம் முதலை அரசு, ஆமையை நோக்கிப் பாய்ந்தது. சேதாமை சிறிதும் ஆடாமல் அசையாமல் அதை எதிர்நோக்கி நின்றது.

''யாரடா நீ? அறிவில்லாத ஆமை. முதலையினமென்றும் முதலையின் அரசனென்றும் பாராமல் வந்து அட்டகாசம் செய்கிறாய்? 'இம்'மென்னும் முன் உன்னைப் போன்ற ஐம்பது ஆமைகளை நான் விழுங்கி ஏப்பமிடக் கூடியவன் என்று தெரியாதா?'' என்று முதலையரசு வீறிட்டது.

''ஆம் அரசே! எங்கள் இனம் உருவில் சிறிய இனம். உங்கள் அளவு நாங்கள் வளர்ந்திருந்தால் வாலாட்டமாட்டீர்கள்!'' என்றது.

தன் இனத்தைக் கோழை இனம் என்று குறித்தது கேட்க, முதலையரசனுக்குப் பொறுக்கவில்லை. ஆமையுடன் சரிசமமாகப் பேசவும் அதற்கு மனமில்லை. அது ஆமையைத் தன் நீண்ட அலகில் பொறுக்கி விழுங்கத் தொடங்கிற்று. சேதாமை மற்ற ஆமைகள் போலத் தலையையும், கைகாலையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை. அதனால், அது அவ்வளவு விரைவாக உள்ளே சென்றுவிடவில்லை.

தன் கால் கைகளில் முதலையின் பற்கள் படாமல் ஒதுங்கிக் கொண்டு, அது முதலையின் உள்ளிடத்தைச் சோதனையிட்டுக் கோண்டே மெல்ல உள்ளே சென்றது. ஆமையினத்தைப் போலவே, முதலைக்கும் புறத்தோடுதான் கோரமாயிருந்ததே தவிர, அகத்தே எல்லாம் மென்மையாகத்தான் இருந்தது. சேதாமை இதைக் கவனித்து, இடுங்கிய தொண்டைப் பகுதி வந்ததும், முதலையின் உட்கழுத்தை எட்டிப்பிடித்துக் கவ்விக் கொண்டது. கைகால்களால் அது கழுத்தின் உட்புறத் தோலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. சேதாமையை விழுங்கி அதன் கதையை முடித்துவிட்டதாக எண்ணிய முதலை யரசன் வலி பொறுக்கமாட்டாமல் அலறிற்று.

''குறும்புக்கார ஆமையே! ஏன் தொண்டையில் ஒட்டிக் கொண்டிருக்கிறாய்? உள்ளே போ விரைவில்!'' என்று ஆங்காரத்துடன் ஆணையிட்டது. ஆனால், ஆமை பேசவில்லை. சொன்னபடி செய்யவுமில்லை. தன் கூரிய பற்களை தொண்டையில் மெல்லிய சதையினுள் மேலும் பாய்ச்சி அழுத்திற்று.

முதலை வேதனையால் துடித்து, வாலைச் சுழற்றிச் சுழற்றி அறைந்தது. புரண்டு புரண்டு அலறிற்று. ''என்னைச் சாகடிக்க வந்த எமனே! உள்ளே போ இல்லை என்றால் உன் இனத்தையே கொன்றுவிடுவேன்!'' என்று உலுக்கிற்று.

சேதாமை பிடியைச் சற்றும் விடாமலே உள்ளிருந்து சிரித்தது. ''என் இனத்தவர் எத்தனை பேரை நீரும், உம் இனத்தாரும் காரணமில்லாமல் கொன்றிருக்கிறீர்கள். அதற்கு நான் பழிவாங்காமல் போகப் போவதில்லை. மேலும், உம் கோபம் இப்போது என்னை எதுவும் செய்ய முடியாது. நான் செத்தாலும் என் இனத்தின் பழியை உம்மீது தீர்க்க உறுதி கொண்டுவிட்டேன்!'' என்றது.

முதலையரசு நம்பிக்கையிழந்து உயிர்வதைப்பட்டு மண்ணில் புரண்டு புரண்டு அழுதது. அரசன் நிலைகண்ட பரிவார முதலைகள் வந்து நயந்தும், அச்சுறுத்தியும், ஆசை காட்டியும் சேதாமையின் உறுதியைக் கலைக்கப் பார்த்தன.

''ஆமையரசே! எம் முதலையரசுக்கு ஒப்பாக உம்மையும் அரசாக மதித்து நடத்துகிறோம். எம் அரசைப் பாதுகாத்து வெளியே வாருங்கள்!'' என்று அமைச்ச முதலை கெஞ்சிற்று.

''ஆமையினத்துக்கு உங்கள் தயவால் நான் அரசாக விரும்பவில்லை. அடிமையினத்தின் அரசாவதைவிட ஆதிக்க அரசை ஒழிப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் என் இனத்துக்குச் செய்த பழிக்கு உம் அரசன்மீது பழி தீர்த்துக் கொள்ளாமல் விடப் போவதில்லை!'' என்றது சேதாமை.

உதவியற்றுத் தம் அரசன் துடிதுடித்துச் சாவதைக் கண்ட முதலைகள் அஞ்சி அந்த ஏரியை விட்டே ஓடின. பெருங்கரையில் நடந்த செய்திகளை முதலையுலகம் அறிந்து ஏரியை விட்டு ஓடிற்று. ஆனால், ஆமையினம் இன்னும் எதுவும் அறியவில்லை. ஆரவாரம் கேட்டுப் பல ஆமைகள் நாற்புறமும் ஓடிப் பதுங்கியிருந்தன. ஓடாதவையும் வாயும், கையும் காலும் அடக்கி, யோக நிலையிலிருந்தன.

அச்சம் தெளிந்து அவை நடமாடத் தொடங்கின. எங்கும் முதலைகளைக் காணவில்லை என்று தெரிந்தே அவற்றுக்குத் தெம்பு வந்தது. அவை ஏரியெங்கும் சுற்றி உலவின. ஒருபுறம் மலைபோல முதலையரசன் கிடப்பதைக் கண்டு வியப்படைந்தன. முதலில் அரசன் உறங்குவதாகவே எண்ணி அவை அண்டிவர அஞ்சின. நீண்ட நேரமாகியும் அது அசையாதது கண்டு ஒவ்வொன்றாக அதை அணுகி வந்தன. கல்லையும், மண்ணையும் எறிந்து பார்த்தன. சில சிறு ஆமைகள் வாலைக் கடித்துப் பார்த்தன. உயிர் இருப்பதன் அடையாளம் சிறிது கூட இல்லை. அரசு செத்துக் கிடக்கிறது என்று கண்டதும் அவை அதன் உடல்மீதேறி ஆரவாரம் செய்தன.

''ஒழிந்தது முதலையினம். வாழ்ந்தது ஆமையினம்!'' என்று நீர்ப்பரப்பு எதிரொலிக்கும்படி எக்காளமிட்டன.

'முதலையரசு எப்படி செத்தது? முதலையினம் எப்படி ஓடிற்று?' என்பது அவற்றுக்கு இன்னும் தெரியாது.

தன் இனத்தவர் கூக்குரலை உள்ளிருந்து கேட்ட சேதாமை தன் வேலை முடிந்து விட்டது என்று அறிந்து மெல்ல வெளியே வந்தது. செத்த முதலையின் வாயினுள்ளிருந்து எதிர்பாராது வந்த சேதாமையைக் கண்டதும் ஆமைகள் வியப்படைந்தன. முதலையரசனை எதிர்த்து அது செய்த போராட்டத்தையும், மற்ற முதலைகள் ஓடியதையும் கேட்டவுடன் ஆமையினத்தின் ஆரவாரம் நீர்மண்டலம் கொள்ளதாயிற்று. இரண்டு ஆமைகள் சேதாமையைத் தம் முதுகிலேற்றிக் கொண்டன. முதலையரசனின் தலைமுடியை அவை சேதாமையின் தலைமீது வைத்தன.

மற்ற ஏரிகளிலுள்ள ஆமைகளும் சேதாமையின் வீரச் செயல் கேட்டுக் கடம்பனேரிக்கு வந்தன. ஆமையுலகம் முழுவதும் சேர்ந்து சேதாமையைத் தம் தலைவனாகவும் அரசனாகவும் முடிசூட்டின.

ஆமையினத்தின் நலனுக்காகப் பல அறிவார்ந்த சட்டதிட்டங்களும், அமைப்புகளும் வாழ்க்கை ஒழுக்க முறைமைகளும் வகுத்துக் கொடுத்து, சேதாமை ஆமையினத்துக்கு ஒரு வள்ளுவர் பெருமானாக நீடித்து, அன்பாட்சியும் அறிவாட்சியும் நடத்திற்று. ஆமையினத்தின் அறிவையும் வீரத்தையும் வளர்த்து, நிலைத்த அமைதி முறைமைகளும் ஏற்படுத்தியபின், அது ஆமையுலகில் மீண்டும் குடியாட்சி நிறுவிவிட்டு மறைவுற்றது.

ஆமையினம் மீண்டும் விழாக்கள் கொண்டாடின. ஆனால், இப்போது அவற்றுக்கு அச்சம் இல்லை; அறியாமை இல்லை; பொறாமை இல்லை; பொறாமை பொச்சரிப்புப் பூசல்கள் இல்லை.

(-முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us