தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (6) - சரண்யா

பூங்குழலி (6) - சரண்யா

பூங்குழலி (6) - சரண்யா


PUBLISHED ON : ஏப் 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: பட்டத்து யானை ஏழைப்பெண் பூங்குழலியின் கழுத்தில் மாலையிட்டது. இதைக் கண்டதும் வயதான தோற்றத்துடன் காட்சியளித்த ஒரு முதியவர், ஆக்ரோஷத்துடன் குதிரை ஏறிப் பறந்தார். இனி-

ஒரு இளைஞனுக்குரிய வேகத்தோடும், படபடப்போடும், மொட்டைமாடியிலிருந்து மடமடவென இறங்கி கீழே வந்த அந்த வயதானவர், தெருக்கோடியை அடைந்து, அங்கு ஒரு மரத்தடியில் நிறுத்தியிருந்த வெண் புரவி ஒன்றின் மீது தாவி ஏறி அமர்ந்தார்.கால் தாங்கிகளில் தன் பாதங்களை நுழைத்து ஒரு அழுத்து அழுத்த, லகானை பிடித்து இழுத்து ஒரு சுண்டு சுண்டினார்.வெள்ளைக் குதிரை, நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்று, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அமைச்சரின் அரண்மனையின் வாயிலில் போய் நின்றது.அதிலிருந்து இறங்கிய அந்த வயோதிகர், உள்ளே செல்லும் வழியிலேயே... தனது பொய்தாடி, மீசை, கிழிந்த அழுக்கான வஸ்திரங்களை களைந்து எறிந்து கொண்டே சென்றார்.வயோதிகர் இப்போது, அமைச்சர் அறிவுமதியாக இருந்தார். அவர் முகம் ஆக்ரோஷமாக இருந்தது. கண்கள் சிவப்பேறியிருந்தன. நெஞ்சு படபடத்தது.''யாரங்கே?'' என்று கூவினார் அவர்.கையில் ஈட்டியுடன், இரண்டு காவலாளிகள் விரைந்தோடி வந்து, ''வணக்கம் அமைச்சர் பெருமானே!'' என்றனர்.''பட்டத்து யானையை பராமரிக்கும் யானைப் பாகனை உடனே அழைத்து வாருங்கள்!'' என்று கத்தினார் அமைச்சர் அறிவுமதி.இருவரும், ''உத்திரவு அமைச்சர் பெருமானே!'' என்று சொல்லி பின்னோக்கிச் சென்றனர்.அமைச்சர் அறிவுமதி, இடது உள்ளங்கையில், வலது கைமுஷ்டியால் குத்திக்கொண்டு அங்குமிங்கும் நடந்தார். 'எவ்வளவு படித்து படித்துச் சொல்லியும், சொன்னது சொன்ன மாதிரி கொஞ்சம் கூட நடக்கவில்லையே...' என்ற கோபம் அவர் முகத்தில் தெரிந்தது.''வணங்குகிறேன் அமைச்சர் பெருமானே!'' என்ற குரல் கேட்டு, அமைச்சர் அறிவுமதி திரும்பிப் பார்த்தார்.பட்டத்து யானைப் பாகன், மார்பின் குறுக்கே இருகைகளையும் கட்டிக்கொண்டு, என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில், உடல் நடுநடுங்க நின்று கொண்டிருந்தான்.''உன்னையே நம்பியிருந்த என்னை மோசம் செய்து விட்டாயே பாவி... அரச பீடத்தை அடைய ஒரு அதிர்ஷ்ட சூழ்நிலையை உருவாக்கியிருந்தேனே... அதை கெடுத்து விட்டாயே... பட்டத்து யானையிடம் தினசரி என் மகன் பேரறிவாளனை அனுப்பி, பழகச் செய்து, அவனுக்கே அது மாலையிடும்படி பழக்கப்படுத்த உன்னிடம் சொல்லி இருந்தேனே...''பேரறிவாளனும், நாள் தவறாமல் யானை கொட்டடிக்கு வந்தானே... பட்டத்து யானையை அவன் கழுத்தில் மாலையை சூட்டும்படி நீ பழக்கப்படுத்தவில்லையா? அது ஏன் பேரறிவாளனுக்கு மாலை சூட்டவில்லை?'' என்று அவன் கேசத்தை பிடித்து உலுக்கியபடி கேட்டார் அமைச்சர் அறிவுமதி.''நீங்கள் சொன்னபடி தான் பட்டத்து யானையையும் பழக்கியிருந்தேன் அமைச்சர் பெருமானே... அதுவும் மந்திரிகுமாரருக்கு தினம் மாலையிட்டே வந்தது. நானும், நீங்கள் கூறியதுபோல், பட்டத்து யானை, மந்திரிகுமாரரையே மாலையிட்டு தேர்ந்தெடுக்கும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தேன் அமைச்சர் பெருமானே...'' என்றான் யானைப் பாகன்.''பிறகு எப்படி, என் குமாரனுக்கு மாலையை சூட்டாமல் யாரோ ஒரு ஏழைச் சிறுமிக்கு மாலையிட்டது?''''அது, அமைச்சர் குமாரர் செய்த ஒரு காரியத்தால் தான் அமைச்சர் பெருமானே?''''என் மகன் பேரறிவாளன் செய்த ஒரு காரியத்தாலா, யானை அவனுக்கு மாலையிடாமல், ஒரு பெண்ணுக்கு மாலையிட்டது?''''ஆம் அமைச்சர் பெருமானே!''''அவன் அப்படி என்ன செய்துவிட்டான் யானைப் பாகனே?''''அமைச்சர் பெருமானே! அமைச்சர் மகனாக தினசரி அணியும் உடைகளோடு கொட்டடிக்கு வந்து கொண்டிருந்த தங்கள் குமாரர், பட்டத்து யானை வரும் வழியில் நிற்கவில்லை அமைச்சர் பெருமானே?''''பின் எப்படி நின்றான்?''''தன் மீசையை மழித்து, தலை முடியை மிகவும் சிறிதாக வெட்டி, சாதாரண வேட்டி சட்டை அணிந்து, அவரை பார்த்தால், தங்கள் குமாரர் தான் அவர் என்பதை என்னாலேயே அடையாளம் காண முடியாதபடி காட்சியளித்தார் அமைச்சர் பெருமானே!''மனிதரான எனக்கே அவர் தோற்றத்தை பார்த்து, அவர் தான் தங்கள் குமாரர் என்பதை கண்டுபிடிக்க முடியாதபோது, பட்டத்து யானையால் எப்படி கண்டுபிடிக்க முடியும் அமைச்சர் பெருமானே? ஒவ்வொருவரும், ஏகப்பட்ட உணவுப் பொருட்களை கையில் வைத்துக்கொண்டு நின்றபோது, கையில் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்தபடி நின்று கொண்டிருந்த ஒரு ஏழைப் பெண்ணின் உண்மையான பரிவையும், அன்பையும் கண்டு பட்டத்து யானை மகிழ்ச்சியடைந்து, அவள் கழுத்தில் மாலையை அணிவித்துவிட்டது அமைச்சர் பெருமானே!'' என்றான் யானை பாகன்.அண்டங்கள் அதிரும்படி, அடிவயற்றிலிருந்து, ''பேரறிவாளா!'' என்று கத்தினார் அமைச்சர் அறிவுமதி.''அழைத்தீர்களா தந்தையே?'' என்று கேட்டபடி வந்தான் பேரறிவாளன்.அமைச்சர் அறிவுமதிக்கே, 'அது தன் மகன் பேரறிவாளன்தானா?' என்ற சந்தேகம் வந்துவிட்டது. உடை, உருவம் எல்லாம் மாறியிருக்கிறது.''ஏன் உன் உருவத்தை, உடையை மாற்றி, வரவிருந்த பேரதிர்ஷ்டத்தை இழக்கும்படி செய்துகொண்டாய் பேரறிவாளா?''''நான், பட்டத்து யானைக்கு பழக்கமான அமைச்சர் மகன் பேரறிவாளனாக சென்றிருந்து, அது எனக்கு மாலை சூட்டியிருந்தால், மக்களும், மன்னரும், மற்றவர்களும் என்ன பேசுவர் தந்தையே? சூழ்ச்சி செய்து, பட்டத்து யானை எனக்கு மாலையிட செய்து விட்டீர்கள் என்றல்லவா உங்களைப் பற்றி பேசுவர்.''அதன்பின், அரசரின் கோபம் உங்கள் மீதும், என் மீதும் பாயுமல்லவா? அது நம் வாழ்வையே அழித்துவிடும் அல்லவா? அதை தவிர்க்கவே, பட்டத்து யானை என்னை அடையாளம் காண முடியாதபடி, என் தோற்றத்தை, உருவத்தை மாற்றிக்கொண்டு சென்றேன் தந்தையே?'' என்றான் பேரறிவாளன்.வெளியே, ''எதிர்கால அரசி பூங்குழலி வாழ்க! வாழ்க!'' என மக்கள் மகிழ்ச்சியில் கூவுவது கேட்டது.(-தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us