தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அருவி + குளியல் = ஆபத்து!

அருவி + குளியல் = ஆபத்து!

அருவி + குளியல் = ஆபத்து!


PUBLISHED ON : ஏப் 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் நாதபுரி என்ற நாடு இருந்தது. அந்த நாட்டை மச்சக்காளை என்ற மன்னர் ஆட்சி செய்தார். மன்னர் மிகவும் நல்லவர். துன்பப்படுகிற உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வார்.ஒருநாள் அவர் தனது மந்திரியான மணிவர்மனையும், வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். காட்டில் நுழைந்த நேரம் அவர் ஓர் அருவியைக் கண்டுவிட்டார்.தெள்ளத் தெளிவாகவும் குளிர்ச்சியோடும் இருக்கிற அந்த அருவி நீரைப் பார்த்ததும், அதில் இறங்கி குளிக்க வேண்டுமென்று அவருக்கு ஆசை வந்தது. உடனே, தன்னுடைய ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவர் தன்னோடு வந்த மந்திரியாரையும், காவலர்களையும் நோக்கினார்.''எனக்கு இந்த அருவியில் குளிக்க வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. என்னோடு நீங்களும் இந்த அருவியில் குளிக்கலாம். நாமெல்லாம் இந்த அருவியில் குளித்து முடித்த பின்னர் மீண்டும் வேட்டையைத் தொடரலாம்!'' என்றார் மன்னர்.மந்திரியார் அந்த அருவியை ஏறிட்டுப்பார்த்தார். அருவி நீர் பெரியப் பள்ளத்தாக்கில் விழுந்து கொண்டிருந்தது. அந்த அருவியில் குளித்தால் கண்டிப்பாக ஆபத்து வரும் என்பதை மந்திரி அறிந்து கொண்டார். உடனே அவர் மன்னரை நோக்கினார்.''அரசே! அருவி நீரில் குளித்தால் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், இந்த அருவியோ மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இந்த அருவியில் நாம் குளித்தோமானால் நிச்சயமாக ஆபத்தில் சிக்கிக் கொள்வோம்!'' என்றார்.மந்திரியாரின் எச்சரிக்கையினை மன்னர் அலட்சியம் செய்தார். அவருக்கு அந்த அருவியில் கண்டிப்பாக குளித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.மன்னர் தன்னுடைய ஆடைகளைக் கூட களைந்து கொள்ளாமல் அருவி நீரில் குதித்தது கண்டு மந்திரியாரும், காவலர்களும் திடுகிட்டனர். அருவியில் குதித்த மன்னர் குதித்த வேகத்திலேயே வெள்ளத்தோடு சேர்த்து இழுத்துச் செல்லப்பட்டார்.மந்திரியாரும், காவலர்களும் என்ன செய்வதென்றுத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். அதற்குள் அருவி நீரில் அடித்துச் செல்லப்பட்ட மன்னரோ காட்டாற்றில் மூழ்கினார். மந்திரியாரும், காவலர்களும் மன்னரைக் காப்பாற்ற முடியாத கவலையுடன் அரண்மனைக்குத் திரும்பினர்.காட்டாற்றில் தண்ணீரோடு இழுத்துச் செல்லப்பட்ட மன்னர் ஒரு தீவில் கரை ஒதுங்கினார். காட்டை ஒட்டியடி அமைந்திருந்த அந்தத் தீவில் ஏராளமான காட்டு மனிதர்கள் வசித்து வந்தனர். அவர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கிய மன்னரை அதிசயமாகப் பார்த்தனர். உடனே அவரை தூக்கியபடி தங்களின் கூடாரத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கே அவருக்குத் தேவையான சிகிச்சைகளை எல்லாம் செய்தனர்.அவர்கள் அளித்த சிகிச்சைகளின் பலனாக மன்னர் மெல்ல தன் கண்களைத் திறந்தார். அந்த இடமும் அந்த இடத்தைச் சேர்ந்த மனிதர்களும் புதியவர்களாக இருக்கவே, அவருக்குச் சற்றுப் பயம் ஏற்படத் தொடங்கியது. உடனே அவர்கள் மன்னரின் கை, கால்களைக் கட்டியபடி ஒரு அறையின் உள்ளே அடைத்து வைத்தனர்.மன்னரோ அந்த அறையில் இருந்து வெளியே தப்பித்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார். அந்த அறையின் மேற் கூரையின் ஓரத்தின் எலி ஒன்று வசித்து வந்தது. அந்த எலி மன்னரின் நிலையைப் பார்த்து மன்னர் மீது இரக்கம் கொண்டது.மன்னரின் அருகே வந்த எலி தனது கூர்மையானப் பற்களால் அவர் கையில் இருந்த கயிற்றுக் கட்டுக்களை எல்லாம் அவிழ்த்துவிட்டது. எலியின் செயல் மன்னருக்கு புதுமையானதாக இருந்தது.''ஐயா! உம்மைப் பார்க்கையில் ஒரு நாட்டின் மன்னன் போன்று இருக்கின்றீர். உண்மையிலேயே நீர் ஒரு நாட்டின் மன்னன் என்றே நினைக்கிறேன். என்னுடைய எண்ணம் சரிதானே!'' என்று கேட்டது.''ஆமாம் எலியே! சந்தேகமேயில்லை... உன்னுடைய எண்ணமானது சரியாகத்தான் இருக்கிறது. உன்னுடைய செயல் எனக்குப் பெரும் வியப்பினை அளிக்கிறது. நீ மனிதர்களைப் போன்று பேசி எனக்கு உதவி செய்கிறாயே... நீ யார்?'' என்று கேட்டார் மன்னர்.''மன்னனே! நான் ஒரு படகோட்டி. இந்தத் தீவில் ஒரு முனிவர் வசித்து வந்தார். ஒருநாள் அவர் காலை நேரத்தில் சூரிய உதயத்தில் கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் முன்னே ஏராளமாக பழங்கள் இருந்தன. எனக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. அந்தப் பழங்களுக்கு ஆசைப்பட்ட நான் என்னுடைய துடிப்பினால் அவரை அடித்துத் தாக்கிவிட்டு பழங்களை எடுத்துச் சாப்பிட்டேன்.''அந்த முனிவர் என் மீது ஆத்திரமடைந்தார். என்னை எலியாக மாற்றிவிட்டார். நான் அவருக்குச் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. என் பாவங்களைப் போக்க வேண்டி நான் யாரை சந்திக்கிறேனோ, அவர்களுக்கு எல்லாம் என்னால் இயன்ற உதவியினை செய்து வருகிறேன். அதனால்தான், உங்களைப் பார்த்த உடன் உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்!''மன்னனே! இந்தக் காட்டு மனிதர்கள் அவர்களின் குல தெய்வத்திற்குப் பூஜை செய்து வருகின்றனர். இந்தத் தீவிற்கு தப்பி வருகிற மனிதர்களை எல்லாம் அவர்கள் காப்பாற்றிப் பிடித்துச் சென்று, அவர்களின் குல தெய்வத்திற்குப் பலியிட்டுவிடுவர். இப்போது நீரும் அவர்கள் பிடியில் சிக்கிக் கொண்டீர்கள்.''எனவே, உம்மை பலியிட அவர்கள் முடிவு செய்திருப்பர். ஆனால், அங்கம் குறைபடாமல் உடலில் எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில் இருக்கிற மனிதரைத்தான் அவர்கள் பலியிடுவர். எனவே, நான் உங்கள் கைப் பெருவிரலைக் கடித்துத் துண்டாக்கி விடுகிறேன். உங்களுடைய அங்கம் குறைபட்டிருக்கிற காரணத்தால் அவர்கள் உங்களை குல தெய்வத்திற்குப் பலியிட மாட்டார்கள்.''நீ எங்கே செல்ல விரும்புகிறீர்களோ அந்த இடத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்து விடுவர். இது அவர்களின் வழக்கமாகும். எனவே, நீங்கள் உங்களுடையப் பெருவிரலை இழந்தால்தான் உங்களுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்!'' என்றது எலி.எலியின் யோசனையை சிறிது நேரம் நினைத்துப் பார்த்தார் மன்னர். அதுதான் நல்ல முடிவு என்று அவருக்குத் தோன்றியது. உடனே எலியின் முன்னே தனது இடது கை கட்டை விரலை நீட்டினார்.உடனே லபக்கென்று மன்னரின் இடது கை கட்டை விரலை கடித்து எடுத்துக் கொண்டது எலி. அந்தக் கட்டை விரலை எவரும் அறிந்து கொள்ளாத வகையில் ஓரிடத்தில் போட்டுவிட்டு வந்தது எலி. மன்னரோ பாதியாக இருக்கும் விரலில் வடிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டார். விரலின் வேதனையை சகித்துக் கொண்டார்.மறுநாள் காட்டுவாசிகள் எல்லாரும் பெரும் கூட்டமாக மன்னர் அடைப்பட்டிருந்த அறைக்கு வந்தனர். மன்னர் மயக்கத்தில் இருப்பதை போன்று நடித்தார். உடனே காட்டு மனிதர்களில் ஒருவன், ''இவன் இங்கிருந்து தப்பிக்க வேண்டிப் போராடியிருப்பான். அவனாகவே அவனது கை கட்டுக்களையும், கால் கட்டுக்களையும் அவிழ்த்திருப்பான். அந்த நேரத்தில் இவனது பெருவிரல் கூட அறுபட்டிருக்க வேண்டும்!'' என்றான்.உடனே மற்றவர்கள் எல்லாரும் மன்னரின் இடது கையை நோக்கினர். மன்னரின் கட்டைவிரல் பாதியாக ரத்தம் உறைந்த நிலையில் இருந்தது. உடனே அவர்களின் தலைவன், ''இவனை நாம் நமது குல தெய்வத்துக்குப் பலி கொடுக்க முடியாது. எனவே, இவனை நாம் அனுப்பிட வேண்டியதுதான். இவன் நம் தீவுக்கு அருகாமையில் இருக்கும் காட்டில் இருக்கிற மலையருவியில் விழுந்து, காட்டாற்றில் இழுக்கப்பட்டு நம் தீவில் கரை ஒதுங்கியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். எனவே, நீங்கள் எல்லாரும் காட்டில் உள்ள மலையருவியின் பக்கத்தில் விட்டபடி வந்து விடுங்கள்!'' என்றான்.தலைவனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட மற்ற காட்டுவாசிகளும் உடனேயே மன்னரை விட்டுவிட்டான். மன்னரோ நிம்மதியடைந்தார். அப்போது எலி மன்னரின் கடித்த கட்டை விரலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மன்னருக்கு வழி சொல்லி அனுப்பியது.அரண்மனையில் மன்னரைக் கண்ட எல்லாருமே மகிழ்ச்சியடைந்தனர். மன்னர் மந்திரியாரை அன்போடு கட்டிக் கொண்டார்.''மந்திரியாரே! உமது அறிவுரையை நான் ஏற்று கொள்ளாத காரணத்தினால்தான் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண்டேன். இனிமேல் உமது அறிவுரையை எந்த நேரத்திலும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வேன்!'' தான் எப்படி உயிர் பிழைத்தார் என்றும், எலி தனக்கு செய்த உதவியினையும் எடுத்துரைத்தார் மன்னர். தனது கை கட்டை விரலைக் காட்டி விளக்கிக் கூறினார்.அரண்மனை வைத்தியர் மன்னரின் கட்டை விரலை சரி செய்து மருந்திட்டார். அதன் பின்னர் மன்னர் மச்சக்காளை மந்திரியாரின் ஆலோசனையைக் கேட்டே எல்லா செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us