PUBLISHED ON : ஏப் 22, 2011

காட்டில் சிங்கம் ஒன்று சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த நரி ஒன்று சிங்கத்தின் நிலையைப் பார்த்தது. தன் உயிரைப் பொருட்படுத்தாமல் சிங்கத்தைக் காப்பாற்றியது.உயிர் பிழைத்த சிங்கம், ''நரியே! உன்னால்தான் நான் உயிர் பிழைத்தேன். இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். இன்று முதல் நீ என் உயிர் நண்பன். உனக்காக எதையும் செய்வேன்!'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது.அதன் பிறகு அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாயின. ஒன்றாகவே வேட்டைக்குச் சென்றன. கிடைத்த இறைச்சியை மகிழ்ச்சியாக உண்டன. இப்படியே சில ஆண்டுகள் சென்றன.சிங்கத்திற்குத் திருமணம் ஆனது. அதற்குக் குட்டிகள் பிறந்தன. அதன் அருகிலேயே நரி தன் மனைவியோடும் குட்டிகளோடும் வாழ்ந்து வந்தது. சிங்கத்தின் மனைவிக்குத் தங்கள் அருகே நரி குடும்பத்துடன் வாழ்வது பிடிக்கவில்லை. தன் எண்ணத்தை அது குட்டிகளிடம் சொன்னது.அந்தக் குட்டிகள் இதை நரிக் குட்டிகளிடம் தெரிவித்தன. நரிக் குட்டிகள் தாயிடம் சொல்லின. தாய் அதை நரியிடம் சொன்னது. சிங்கத்திடம் சென்ற நரி நடந்ததை எல்லாம் சொன்னது.''நானும் என் குடும்பத்தினரும் இங்கிருந்து செல்லப்போகிறோம்!'' என்றது.இதைக் கேட்டு வருந்திய சிங்கம், ''என் உயிரைக் காப்பாற்றிய நண்பன் நீ. உனக்காக நான் எதையும் செய்வேன். என் மனைவியைக் கண்டித்து வைக்கிறேன். இனி அப்படி நடந்து கொள்ள மாட்டாள். நீ எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இரு!'' என்றது.அதற்கு நரி, ''நண்பா! நம் நட்பின் பெருமை நமக்குத்தான் தெரியும். நாம் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக இருப்போம். நம் நட்பை அடுத்தவர்களுக்குப் புரிய வைப்பது கடினம். வற்புறுத்துவதால் வீண் வெறுப்புதான் வளரும். நாம் பிரிந்து செல்வதே நல்லது!'' என்றது.சிங்கம் வற்புறுத்தியும் கேளாமல் தன் குடும்பத்துடன் அங்கிருந்து சென்றது நரி. யாரையும் வற்புறுத்தக் கூடாது. அப்படி செய்தால் வெறுப்புதான் வரும்.***
