PUBLISHED ON : மே 13, 2011

இதுவரை: பூங்குழலி பட்டத்துயானையால் இளவரசியாக தேர்வு செய்யப்பட்டாள். அவளுக்கு கல்வி கற்க போலி குருவை அழைத்து வந்தார் இனி-
''பூங்குழலி கல்வி கற்க ஒரு நல்ல குருவை ஏற்பாடு செய்யுங்கள்!'' என்று அரசர் அமரசிம்மன் சொன்னதும், அமைச்சர் அறிவுமதி, பூங்குழலிக்கு இருக்கும் அறிவை மழுங்கடிக்கும்படி என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
ஒரு மோசமான குருவை அழைத்துவர வேண்டும். அப்படி ஒரு குரு கிடைக்காவிட்டால், தானே ஒருவரை குருவாக நடிக்க வைக்க வேண்டும். அவர் பூங்குழலிக்கு கல்வி கற்பிக்க வேண்டும். நல்ல கல்வி முறைகளை அவளுக்கு கற்றுத்தரக் கூடாது. அதையும், அந்த போலி குருவாக வருகிறவரிடம் முன்கூட்டியே சொல்லி அழைத்து வர வேண்டும். எப்படியும் சிறுமி பூங்குழலியை அரசகுமாரியாக தகுதியற்றவளாக்க வேண்டும்.
ஒருவனை ஏற்பாடு செய்து அழைத்து வந்தார் அமைச்சர் அறிவுமதி.
தாடி, மீசை, ஜடாமுடியுடன், நெற்றியில் விபூதி பூசி, நடுவே குங்குமம் இட்டு, காவி வஸ்திரம் அணிந்து, கையில் கமண்டலம் ஏந்தி, காலில் மர ஜோடி அணிந்து வந்தார் குரு. அவரை பார்த்ததுமே, காலில் விழுந்து கும்பிட வேண்டும் போலிருந்தது.
அரசர் அமரசிம்மன், ''வாருங்கள் குருவே! இவ்வாசனத்தில் அமர்க!'' என்று ஒரு இருக்கையை காட்டினார்.
''நீடூடி வாழ்வாயாக மன்னா!'' என்று கைதூக்கி மன்னரை ஆசீர்வதித்த குரு, தம் கக்கத்தில் இடுக்கி வைத்து கொண்டு வந்திருந்த புலித்தோலை எடுத்து, ஒரு உதறு உதறி, கமண்டலத்திலிருந்து சிறிது நீர் எடுத்து அந்த இருக்கையில் தெளித்து, பின் அதில் புலித்தோலை விரித்து உட்கார்ந்து, கால் மீது காலை போட்டுக் கொண்டார்.
''எப்படி என் ஆர்ப்பாட்ட ஆரம்பம்?'' என்பது போல, அமைச்சர் அறிவுமதியை ஒரு பார்வை பார்த்தார்.
'பிரமாதம்' என்பது போல கண் சிமிட்டினார் அமைச்சர்.
அரசர் அமரசிம்மனும், மகாராணி மாணிக்கவல்லியும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள், 'குருவிடம் அடக்கமில்லையே!' என்று கேட்டுக்கொள்வது போலிருந்தது.
''என்னிடம் கல்வி கற்கப்போகிற பெண் யார்?'' என்று கேட்டார் குரு.
''நான் தான் குருவே!'' என்று கூறியபடி, அவரெதிரே வந்து நின்று கை கூப்பினாள் பூங்குழலி.
''சிறுமி! சின்னஞ்சிறு சிறுமி!'' என்றார் போலி குரு.
''சின்னஞ்சிறு திருஞானசம்பந்தம் தானே தேவாரம் பாடினார்? அவருக்குத்தானே அன்னை உமாமகேஸ்வரி அமுதப்பால் ஊட்டினாள்? சின்னஞ்சிறு உளிதானே மலையை பிளக்கிறது; கற்குள்லிருந்து சிலையைக் கொண்டு வருகிறது? சிறுதுளி தானே பெரு வெள்ளமாகிறது குருவே!'' என்றார் பூங்குழலி.
எல்லாரும் கரலொலி எழுப்பி, பூங்குழலிக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
''உனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமா?''
''இல்லை குருவே... எனக்குத் தெரிந்தது ஒன்றுமில்லை. தெரியாததுதான் நிறைய இருக்கிறது!'' என்று அடக்கத்துடன் கூறினாள் பூங்குழலி.
குருவுக்கு சரிக்கு சரியாக பதில் சொல்கிறாளே என்று அரசரும், அரசியும் மகிழ்ச்சியடைய, அமைச்சர் அறிவுமதியும், போலி குருவும், என்னவாகப் போகிறதோ... என்ற கலக்கத்தில், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அரசரிடம் திரும்பிய பூங்குழலி, ''தந்தையே... சிறியது என்று எதையும் எண்ணி நகையாடக் கூடாது. சிறு துரும்பும் பல் குத்த உதவும். இக்குரு கல்வி கற்பிக்கப் போவதைவிட, இவரே கல்வி கற்கப்போவதே மேல். குருவிற்கு கர்வமும், அலட்சியமும் கூடாது! பொதுவாக, குருதான் மாணவர்களை தன் குருகுலத்தில் சேர்த்துக்கொள்ள மாணவரிடம் கேள்வி கேட்பார். இவரை நான் குருவாக ஏற்றுக்கொள்ள, இவரிடம் நான் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். அதற்கு தாங்களும், கற்றோர் நிறைந்த இந்த அவையும் எனக்கு அனுமதியளிக்க வேண்டும் தந்தையே!'' என்று அரசரிடம் கூறிவிட்டு, அவையோரைப் பார்த்தாள் பூங்குழலி.
''கேளம்மா தாராளமாய்!'' என்பது போல, அவையோர் கைத்தட்டினர். அரசரும், 'சரி!' என்பது போல தலையசைத்தார். தானும் கைதட்டாவிட்டால், தம் மீது சந்தேகம் உண்டாகிவிடுமென்று, அமைச்சர் அறிவுமதியும் கைதட்டினார்.
''சைவர்கள் திருநீற்றுச்சாம்பலை இட்டுக்கொள்வதும், வைணவர்கள் திருமண் இட்டுக்கொள்வதும் ஏன் குருவே?'' என்று கேட்டாள் பூங்குழலி.
''ஏதாவது ஒன்றை நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காத்தான்!'' என்றார் போலி குரு.
''இல்லை குருவே! மனிதன் மறைந்ததும் எரிக்கப்படுகிறான். அப்போது, சாம்பலே மிஞ்சுகிறது. மண்ணில் புதைக்கப்பட்டபின், மண்ணோடு மண்ணாகிறான். இதை விளக்கவே, சைவர்கள் திருநீரு பூசுகின்றனர். வைணவர்கள் திருமண் இட்டுக் கொள்கின்றனர்!'' என்றாள் பூங்குழலி.
இங்கேயிருந்து தப்பித்துச் செல்ல ஏதாவது வழி தெரிகிறதா என்று நாற்புறமும் பார்த்தார் போலி குரு.
''எறும்பு சின்னஞ்சிறு ஜீவன். அதன் உடம்பில் ஒரு பாகம் வாய். அது எறும்பிலும் சிறியது. அந்த வாயைவிட சின்னது எது குருவே?'' என்று கேட்டாள் பூங்குழலி.
''நாக்கு!'' என்றார் போலி குரு.
''இல்லை! அதன் சின்ன வாய் வழியாகச் செல்லும் உணவு!'' என்றார் பூங்குழலி.
தன் தாடி, மீசை, ஜடாமுடியை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, வெளியே ஓடிவிட்டார் போலி குரு.
''கற்றுத்தேர்ந்த குரு! என்று என்னிடமே சொல்லி ஏமாற்றிவிட்டான் இவன்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.
''எல்லாவற்றிலும், அசலோடு, போலியும் கலந்துவரத்தான் செய்யும் அமைச்சரே! நாம் தான், எது அசல், எது போலி என்று கண்டுபிடிக்க வேண்டும். இது பூங்குழலிக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. ராஜகுரு மூலமாக, நல்ல குரு ஒருவரை நானே தேர்ந்தெடுக்கிறேன்!'' என்றார் அரசர்.
(- தொடரும்)
