
சென்னை, தாம்பரம், கிறிஸ்து ராஜா உயர்நிலைப் பள்ளியில் 1964ல், 11ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல, இரண்டு பேருந்துகளில், மாணவியர் கிளம்பினோம். அங்கு சென்றதும், தனித்தனி குழுக்களாக பிரிந்து, கடலில் விளையாடி மகிழ்ந்தோம்.
அப்போது, அதீத ஆர்வத்தால் எங்கள் குழுவினர் மட்டும், தடை செய்யப்பட்டிருந்த கடற்கரைப் பகுதிக்கு சென்று விட்டோம்.
அங்கு பாறையில் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருந்தது; அதைக் கண்டு மிகுந்த பிரம்மிப்புடன் ரசித்தோம். இதைக் கண்ட ஆசிரியைகள் எங்களை கண்டித்து, கடற்கரை மணலில் முட்டி போட வைத்து தண்டனை அளித்தனர்.
அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர், எங்கள் நிலையைப் பார்த்து சிரித்தனர். மிகவும் கவலையடைந்தேன். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை அன்றுடன் விட்டேன்.
என் வயது, 73; குடும்பத்துடன், சுற்றுலா செல்லும் போதெல்லாம், இந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது, பேரக் குழந்தைகளிடம், 'இது தான் நாங்கள் முட்டி போட்ட இடம்...' என்று சுட்டிக்காட்டி சிரித்து மகிழ்கிறேன்.
- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.
தொடர்புக்கு: 93645 71134

