PUBLISHED ON : ஏப் 14, 2017

சென்றவாரம்-: சின்னியின் வீட்டுக்கு வந்த முனவர், இம்புலியுடன் வெளியே வந்தார். இனி -
மெதுவாக நடந்து, இருவரும் ஷிப்ரா நதிக்கரையை அடைந்தனர்.
“இம்புலி! உன்னிடம் சில முக்கியமான விஷயங்கள் பற்றி கூறவேண்டும். அதனால் தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன்.
“இறைவன் என்னை உன் வீடு தேடி செல்லுமாறு பணித்ததின் நோக்கம் என்னவென்று, எனக்கு இப்போது தான் புரிகிறது. உன் எதிர்காலம் மிகவும் சிறப்பானது. ஆயினும், அந்த சிறப்பை அடைய, நீ சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளமாக உள்ளன.
''மனிதனின் வாழ்க்கையே சோதனைகளும், சாதனைகளும் நிரம்பியதுதானே.
''இம்புலி... இன்னும் சில காலங்களில், உன்னை நோக்கி பல சோதனைகள் வரத்துவங்கும். அவற்றையெல்லாம் சந்திக்க உனக்கு அதீத மனவலிமையும், மனப்பயிற்சியும் தேவை.
“சிறிது நாட்களில் இந்நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கும். மகிழ்ச்சி கூடக் கூட ஆகாசக்கூரையில் கருமேகங்கள் சூழ ஆரம்பிக்கும்... அதன் முதல் களப்பலியாக ஆட்சி பீடம் சற்று அசையும்... இப்படி தான் சோதனைகள் ஆரம்பிக்கும்...
''உன்னை அறியாமலேயே சில பொறுப்புகள் உன்னை வந்தடையும். உன் சொந்த மகனை வளர்க்கும் பாக்கியம் அற்ற உனக்கு, உன் வீட்டு பூஜையில் நீ வைத்து வணங்கிக்கொண்டிருக்கும் அந்த அரச லச்சினைக்கு நிஜமான சொந்தக்காரன், ஒரு பச்சிளம் குழந்தையாக உன் வீடு தேடி வருவான். அக்குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பும் உன்னுடையது.
“இதையெல்லாம் கேட்டு கலங்காதே... எப்போதும் நான் உனக்குத் துணை இருப்பேன். நான் உன்னோடு பகிர்ந்து கொண்ட இந்த ரகசியங்களை வேறு யாரிடமும், சின்னியிடம் கூட சொல்லமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்துகொடு!” என்று கையை நீட்டினார்.
அவர் கரங்களை தன் இரு கைகளாலும் பற்றி சத்தியம் செய்தான்.
“இந்த சவால்களை எல்லாம் சமாளிக்க, நான் உனக்கு சில எளிய மந்திரங்களை சொல்லி தருகிறேன். இந்த மந்திரங்கள் உனக்கு அதீத மனவலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். நான் சொல்லித்தர போகும் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை, தினமும் காலையும், மாலையும் மனம் ஒன்றி சொல்லிவா, உன்னுள் ஒரு சக்தி வளருவதை நீயே உணர்வாய்!” என்றார்.
அவனுள் ஒரு சிறு மாறுதல் ஏற்படுவதை உணர்ந்தான் இம்புலி.
“புறப்படலாம் இம்புலி. நான் சொன்னதை யெல்லாம் நன்றாக நினைவில் வைத்து கொள். என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு,” என்று சொல்லி புறப்பட்டார்.
சிறிது தூரம் சென்றவுடன், தின்பண்டங்களை சுமந்தபடி ஒரு வண்டிக்காரன், இவர்கள் செல்லும் திசை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“அய்யா! என் மகளுக்கு பலகாரம் வாங்கிகொள்கிறேன். பலகாரம் இல்லாமல் போனால் என்னை உள்ளே விடமாட்டாள்!” என்றான் இம்புலி.
“உம்... தேவையானதை வாங்கி கொள்,” என்றார்.
வண்டியை நிறுத்தி மகளுக்கு தேவையான வற்றை வாங்கிக் கொண்டு, இம்புலி அவரிடம் விடை பெற்றான்.
அரண்மனையில்- -
முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் அரண்மனைக்குள் வந்த, திரிகால ஞானியை ஓடோடி சென்று வரவேற்றனர்.
கவலை சூழ்ந்த முகத்துடன் வந்தவர், சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு, பனை ஓலையும், எழுத்தாணியும் கொண்டுவர சொல்லி விட்டு, பக்கத்து அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டார். மன்னருக்கு, மந்திரிக்கு என்று, தனித்தனியாக இரண்டு ஓலை சுவடுகளில் வரவிருக்கும் நாட்களைப் பற்றி, மிகவும் விரிவாக, ஒரு சிறு விவரம் கூட மறைக்காமல் எழுதி முடித்தார்.
'மன்னா! சில கொடூரமான துக்கங்களை ஜீரணித்து கொள்ள வேண்டிய நிர்பந்தமான காலகட்டத்தை நீ நெருங்கி கொண்டிருக்கிறாய். மனம் தளராதே... அரியணையிலிருந்து நீ இறக்கப்படுவாய். இந்த இழப்பு கூட சில காலத்திற்கு தான். தெய்வத்தை இறுக்கி பிடித்து கொள்.
'அவன் உன்னை கைவிடவே மாட்டான். இந்த சோதனை காலத்தில், உன் மந்திரி ராஜேந்திரன் கூட உனக்கு எதிரியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவன், ஒருநாளும் உனக்கு எதிரி இல்லை. இதை நீ நன்றாக நினைவில் வைத்துக்கொள். உன் நம்மைக்காக... உன் நாட்டின் நன்மைக்காக தான் அவன் உனக்கு எதிரியை போல் நடிப்பான். நாட்டின் நிலைமை அப்படி மாறிவிடும்.
'அவனால் உன்னை தினமும் சந்திக்க முடியாது. ஏன் உன்னை தனியே சந்திக்க பல மாதங்கள் கூட ஆகலாம். நீ கலங்காதே... எனினும் அவனின் கை ஆட்களில் ஒருவன் அவ்வப்போது உனக்கு செய்திகளை கொண்டு வருவான்.
'எவ்விதத்திலும் நீ உன்னை சேதப்படுத்திக் கொள்ளாமல், தெய்வ நம்பிக்கையுடன் வாழ்க்கையை மேற்கொள்... இறைவன் விரும்பும் போது, நான் வந்து உன்னைத் தனிமையில் சந்திப்பேன். கலங்காதே...' என்று இன்னும் பல முக்கியமான செய்திகள் அடங்கிய ஓலைச்சுவடியை, மன்னரிடம் கொடுத்தார் மாமுனி.
“ராஜேந்திரா! மன்னரின் மறுபாதி நீ என்பதை மறந்து விடாதே... நான் அடிக்கடி நேரில் வந்து உன்னை சந்திப்பது இயலாத காரியம். ஆயினும் எப்போதும் என் உயிர் உன்னுடன் உறவாடும். சுவடியில் அனைத்து விபரங்களையும் மிக விரிவாக குறிப்பிட்டுள்ளேன்; அதன்படி செயல்படு. மிக சிறப்பான, மகிழ்வான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. மைத்ரேயி, கபிலன், இம்புலி இந்த மூவரும் உன் நாடகத்தின் தீவிர அங்கத்தினர்கள்; உன் ஒப்பற்ற நம்பிக்கைகள்.
''ஜாக்கிரதை... வேறு யார் கண்ணிலோ பட்டுவிட்டால் மிக விபரீதங்கள் தான் சீறிப்பாயும்,” என்று சொல்லி விட்டு, மேலும் பல முக்கிய ரகசியங்கள் அடங்கிய ஓலையை, மந்திரியிடம் கொடுத்து விட்டு சென்றார் மாமுனி.
தனித்தனியே அமர்ந்து அந்த ஞானி கொடுத்துவிட்டு சென்ற ஓலை சுவடியை படித்த மன்னரும், மந்திரியும் வெகுநேரம் தங்களுக்குள் உறைந்து போயினர். பின், கனத்த மனதுடன் மன்னரின் கரங்கள் மந்திரியின் கரங்களை மிகவும் அழுத்தமாக பற்றிக்கொள்ள, அந்த அழுத்தம் ஓராயிரம் செய்திகளை கூறின.
மன்னர் துஷ்யந்தனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவிக்கு திருமணமாகியும், வெகுநாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாததால், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர் தான் துஷ்யந்தன்.
பிறந்த சில ஆண்டுகளுக்கு பின், முதல் மனைவிக்கு சித்ரசேனன் என்ற மகன் பிறந்தான். அவலட்சணத்தின் மொத்த உருவான அவனை, இவன் அரசனின் மகனா என்று அனைவரும் சந்தேகிக்கும் நிலைமையை ஏற்படுத்தினான்.
உருவத்தில் மட்டும் அவலட்சணமில்லை. நாளாக நாளாக அவனின் பிடிவாதமும், பொறாமையும் போட்டி போட்டு வளர்ந்தன என்பதே நிஜம். இளவரசன் துஷ்யந்தன், அழகு, அமைதியான, நேர்மையான, அன்பான குணங்கள் நாட்டு மக்களிடம் அக்கறை என்று நற்பண்புகளின் இருப்பிடமாக இருந்தார்.
'என் மகனுக்குத்தான் முடி சூட்ட வேண்டும்' என்று மன்னரிடம் மல்லுக்கு நின்றாள், முதல் மனைவி தேவி.
அதற்கு சற்றும் ஒப்புக்கொள்ளவில்லை மன்னர்.
கடைசியாக, மன்னரின் பிடிவாதம் தான் வென்றது. துஷ்யந்தனுக்கு முடி சூட்டி, மகிழ்ந்த மன்னன், சில நாட்களுக்கு பின் திடீரென இறந்துவிட்டார்.
மூத்த மனைவி தேவியின் மனதில் பொறாமையும், வஞ்சனையும் நங்கூரம் போட்டது.
எப்படியாவது துஷ்யந்தனை ஒழித்து கட்டவேண்டும், அவன் இடத்தில், என் மகன் சித்ரசேனன் அமர வேண்டும், இதுதான் அவளின் நிரந்தரகனவு. தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்க்க ஆரம்பித்தாள்.
இதற்கிடையில் துஷ்யந்தனின் மனைவி இந்துஜா தாய்மை அடையும் நிலையில் இருக்கிறாள் என்ற செய்தி கேட்டு அப்படியே நிலைகுலைந்து போனாள் பெரிய அரசி.
'நான் துஷ்யந்தனையே ஒழிக்க வேண்டும் என்று நினைத்து, செயல்பட துவங்க இருக்கும் வேளையில், அவனுக்கு ஒரு பிசாசு வாரிசாக வரப்போகிறதாதே... அப்படியானால் என் மகனின் அரியணை ஆசை என்னவாகும்...' யோசித்து யோசித்து மண்டையை குழப்பிக்கொண்டாள் பெரிய அரசி. கடைசியாக அவளுக்குள் ஒரு மின்னல்...
'ஓ! அந்தப் பெண் மைத்ரேயி, துஷ்யந்தனின் மனைவியிடம் தானே வேலை பார்க்கிறாள்... எப்படியேனும் அவளை வளைத்து விட்டால் போதும். நான் நினைத்த காரியம் அனைத்தும் நன்றாக நிறைவேறி விடும்...' என்று எண்ணி செயல்படத் துவங்கினாள்.
மறுநாள்- -
அதிகாலையில் மகாராணி தேவியிடம் இருந்து மைத்ரேயிக்கு அழைப்பு வர, ஒரு நிமிடம் குழம்பி போனாள்.
- தொடரும்...
