தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளவரசன் ப்ருத்திவி (6)

இளவரசன் ப்ருத்திவி (6)

இளவரசன் ப்ருத்திவி (6)


PUBLISHED ON : மார் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்-: வைரமோதிரத்துடன் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றான் இம்புலி. காட்டுப் பாதையில் சென்றபோது, 'அண்ணே!' என்று ஒரு குரல் அழைத்தது. இனி -

''அண்ணே... அண்ணே பயப்படாத! பேய், பிசாசு இல்ல; மனுஷன் தான். என்னை நீங்க பார்த்ததில்ல; ஆனா, எனக்கு உங்களை நல்லா தெரியும். உங்க முதலாளி நிலத்தில விளையும் நெல் அத்தனையும், எங்க முதலாளி, ராம் தேவ்சிங் தானே வாங்குகிறார்.

''நீங்க விக்க வரும்போது, நான் உங்கள பார்த்திருக்கேன். எந்த வம்பு தும்பும் பண்ணாமே, எங்க முதலாளி கொடுத்த பணத்தை வாங்கிட்டு போற ஒரே ஆள், நீங்க தான். மற்றவர்களை மாதிரி எந்த அடாவடித்தனமும் பண்ண மாட்டீங்களே,'' என்று, நீளமாக பேசியபடியே வந்தான் கமால்.

''முதலாளி, ராம் தேவ்சிங் ஐயாவின் வலது கரம் நான் தான். முக்கிய பொறுப்பெல்லாம் என்னை நம்பி கொடுத்திருக்கிறார். இப்ப பாருங்க அண்ணே... இவரு ஏதோ ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டாரு... அது விஷயமா, பந்திப்பூர் தலைவரை சந்திச்சு, விபரத்தை சொல்ல சொல்லிருக்காரு...'' என்று, உடன் வந்தவரை காட்டினான்.

சட்டென்று, இம்புலிக்குள் ஒரு கீற்று மின்னல்.

''பந்திப்பூர் தலைவரை உங்களுக்கு நல்லா தெரியுமா...'' என்று கேட்டான் இம்புலி.

''இது என்ன கேள்வி அண்ணே... ராம் தேவ்சிங் ஐயாகிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா, ஒரு நிமிஷம் கூட காக்க வைக்காம, எங்க காரியத்தை முடிச்சி தந்துட்டு தான் மற்ற வேலைய பாப்பாரு. எங்க ஐயா மேல அவ்வளவு பிரியம்.

''தலைவரால் முடியாத காரியம் ஒண்ணுமே இல்லை. ரொம்ப ரொம்ப திறமையான மனிதர். அவர் கண் அசைச்சா, நடக்காத காரியமே கிடையாது. சொல்ல போனால், நம்ம துஷ்யந்த் மகாராஜா கூட, இவர் இஷ்டத்திற்கு மீறி, எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டாரு...'' என்று ஒரேயடியாக அளக்க, இம்புலியின் மனதில் ஒரு நப்பாசை துளிர்விட்டது.

''கமால் தம்பி! நிஜமாவே தலைவரை நேர்ல பாத்து பேசுவீங்களா...'' என்றான் ஆச்சர்யத்துடன்.

கமாலின் மூளை, படுவேகமாக சுறுசுறுப்படைந்தது.

''அரண்மனைக்குள் நுழைய, யாருடைய தயவும் தேவையில்லை; எப்ப வேணும்னாலும் அவரை சந்திக்கலாம். எப்போது போனாலும், சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும் என்பார். வேறு யாரும் அவர் பக்கத்தில் உட்கார முடியாது என்னை தவிர...

''இம்புலி அண்ணே! நீயும் என்னோட வா. உனக்கு என்ன வேணும்னாலும், செய்து தர சொல்றேன்,'' என்றான்.

குழம்பி போனான் இம்புலி. 'இவனை நம்பலாமா, வேண்டாமா' என்ற குழப்பம் ஒரு புறம் இருந்தது.

''அண்ணே! உன்னை பார்த்தா எனக்கு, ரொம்ப பரிதாபமா இருக்கு. ஏதோ பெரிய சிக்கல்ல மாட்டிட்டு இருக்கன்னு நினைக்கிறேன். உன்னை காப்பாத்த நானிருக்கிறேன் அண்ணே... என் மேல் நம்பிக்கை வை அண்ணே...

''என்னிடம் சொல்ல இஷ்டமில்லை என்றால் வேண்டாம். நான் தலைவரிடம் அழைத்து போகிறேன். அவரிடம் நீ, தைரியமாக உன் மனதில் உள்ளதை கொட்டலாம். உடனே, அவர் உதவிக்கரம் நீட்டுவார். இது சத்தியம்!'' என்று, மிக தோழமையுடன் சொல்லி, மிக கவனமாக அவனை தன் வலையில் விழ வைத்தான் கமால்.

தலைவரின் மாளிகை வாயிலை அடைந்தனர் மூவரும். இதற்கு முன், இதைப்போன்ற பெரிய கட்டடங்களை பார்த்திராத இம்புலி, அப்படியே பிரமித்து நின்றான்.

''அண்ணே! என்ன இப்படி பிரமிச்சுப் போய் நிக்குறே. கட்டட முகப்பை பார்த்து பிரமிச்சுட்டா எப்படி... உள்ளே வந்து பார். அப்படியே அசந்து போயிடுவ,'' பேசிக்கொண்டே முன்னேறினான் கமால்.

உள்ளே ஆள்நடமாட்டமே இல்லை... வராந்தாவில், சின்னதாக ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

''அண்ணே! தலைவர் ஊர்ல இல்ல போலிருக்கு. அவர் இருந்தா, கசகசவென்று ஒரு கும்பல், தங்கள் குறைகளை சொல்ல, போட்டி போட்டு நிற்கும். எப்படியும் இரவுல வெளியூர்ல தங்கமாட்டாரு...

''ஒருவேளை உடம்பு சரி இல்லையோ என்னவோ... கவலைப்படாத அண்ணே... இப்படி உட்காரு... உள்ள போய் விபரம் தெரிஞ்சுக்கிட்டு வர்ரேன். வர கொஞ்ச நேரம் ஆனாலும் பதறாத. யாரேனும் வந்து, நீ யார், இங்கே ஏன் உட்கார்ந்திருக்கேன்னு அதிகப் பிரசங்கித்தனமாக கேட்டா, 'நா கமாலின் ஆள்' என்று சொல். கேள்வி கேட்டவன், 'கப்சிப்' என்று திரும்பி விடுவான்,'' என்று சொல்லி உள்ளே போய்விட்டான்.

தனியே விடப்பட்ட இம்புலிக்கு, சற்றே பயம் துளிர்விட ஆரம்பித்தது. சற்றே வெளிச்சம் குறைந்த அறையின் மூலையிலுள்ள நாற்காலியில் அமர்ந்தான். அடிக்கடி இடுப்பில் கட்டியிருந்த சுருக்குப்பையை, தடவிப்பார்த்து கொண்டான்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

ஆவி பறக்கும் டீயும், நான்கு சமோசாக்களும் நிரம்பிய டிரேயை அவன் முன் நீட்டி, ''இதை சாப்பிடுங்கள். இன்னும் சிறிது நேரத்தில், கமால் சார் வந்து விடுவார்,'' என்று சொல்லி, மறைந்தான் ஒருவன்.

சட்டென்று குழப்பம் நீங்கினான் இம்புலி. 'நான் தான் கமாலை தவறாக எடைபோட்டு விட்டேன். என் மேல தான் அவனுக்கு எத்தனை ஈடுபாடு. தலைவருடன் பேசி முடித்துவிட்டு வருகிறேன் என்பதை, எத்தனை சூசகமாக சொல்லி இருக்கிறான்!'

சூடான டீயும், சமோசாக்களும், அவனுடைய வீண் பயத்தை போக்கின.

சற்று காலாற நடக்கலாம் என்று எண்ணியவன், இருட்டை ஒட்டியபடியே நடக்க, ஒரு திருப்பத்தில், சற்றே திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த பேச்சுக்குரல்களை கேட்டவன், சட்டென்று பின் நகர்ந்து மறைவில் நின்றான் இம்புலி.

''வாப்பா கமால். வந்து வெகு நேரமாகிவிட்டதா?''

''ஆமாப்பா... நிஜமாவே தலைவர் வெளியூர் போயிருக்காரு, வர, மூன்று நாளாகும்ன்னு ரசூல் சொன்னானே...''

''பின்னே... எப்படி சொல்வதாம். மது மயக்கத்தில் உள்ள தலைவர் எழுந்திருக்க, மூன்று நாள் கூட ஆகும்; எழுந்திருக்காம அப்படியே போனாலும், ஒரேயடியாய் போயிடுவார். இந்த குடிகாரனை நம்பி, வருபவர்களிடம், இதை சொன்னா அப்புறம் என் கதி... அதான், வெளியூர் போயிருக்கார்னு சொல்ல சொல்லி சமாளிச்சுட்டு வர்றேன்... அத விடு, இப்ப என்ன காரியமா வந்த?''

''நான் வந்த விஷயம் வேற; ஆன, இப்ப சொல்ல போற விஷயம் வேற...'' என்றான் கமால்.

''என்னப்பா... என்ன புதிர் போடற!'' என்றான்.

அவர்கள் இருவரும் பேசுவதை, உன்னிப்பாக கவனித்தான் இம்புலி.

''நான் கூட்டிட்டு வந்திருக்குற பய, ஒரு உதவாக்கரை; பயந்தாங்கொள்ளி; பெயர் இம்புலியாம்; பெயரில் தான் புலி. ஒரு சின்ன பூனைக்குட்டியை பார்த்தா கூட அலறி அடித்து ஓடுவான். அவ்ளோ வீரதீரன்!''

''அது சரி! அந்த பயலை எப்பிடி, எங்க புடிச்ச?''

''மதியம் சும்மா, ரோட்டில நடந்துட்டு இருந்தேன். அப்ப தான் பாத்தேன். கையில ஒரு மூட்டையுடன், அவசர அவசரமாக, மேற்கு நோக்கி போயிட்டு இருந்தான். இவ்ளோ அவசரமா இவன் எங்கே போகிறான் என்று, அவனை பின் தொடர்ந்தேன்; இவன் காட்டு பாதைக்குள் நுழைந்தான். அட, இந்த பயந்தாங் கொள்ளிப்பய தனியே காட்டுப் பாதையில், எங்கே போறான்னு குழம்பினேன்.

''ஆனது ஆகட்டும் என்று நினைச்சு, அண்ணேன்னு உறவு சொல்லி கூப்பிட்டு, இவனுடன் நடக்க ஆரம்பிச்சேன். இவன் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கியிருக்கிறான். அதற்காக, யாருடைய உதவியையோ நாடி தான் இங்கே வர்றான் என்பதை, அவன் பேச்சில் இருந்து புரிந்து கொண்டேன். அப்புறமாக, நம்ம தலைவரை பத்தி ஒரேடியாக அளந்தேன்.

''அண்ணே! என் கூட வா... உனக்கு என்ன சிக்கல் இருந்தாலும், அவர் நிமிஷத்துல தீர்த்துவிடுவாருன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன். இடுப்பை அடிக்கடி தடவிப் பார்த்துக்கிறான். அதனால, நிறைய பணத்தை கட்டிட்டு வந்திருக்கான்னு தோணுது. நீ, எப்படியும் முடிச்சுடுவேன்னு தான் கூட்டி வந்திருக்கேன்'' என்று விவரித்தான் கமால்.

''சரிடா... நல்லவேலை பண்ணி இருக்கே... இப்ப அந்தப்பய எங்கே?''

''தட்டு நிறைய சமோசாவும், டீயும் அனுப்பி, வாசல்ல உட்கார வெச்சுருக்கேன். இப்படி உபசரித்தால் தானே நம்ம கவுரவம் அவனுக்கு புரியும்... உன் தலைவன், அந்த குடிகாரன், நினைவு இல்லாம மாடில புரண்டு கிட்டு இருக்கான்னு சொல்லிட்டியே... அதுவும் நமக்கு நல்லது தான்.

''இந்த இம்புலி, உன் தலைவனை பார்த்ததில்ல. அதனால, இப்ப நீ தான் தலைவனா நடிக்க போற. ரொம்ப, 'கெத்தா' கையில ஒரு புத்தகத்தை வெச்சுட்டு, கால் மேல கால் போட்டுட்டு, அந்த சோபால உட்கார். நா அவனை கூட்டிட்டு வர்றேன்,'' என்றான் கமால்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us