PUBLISHED ON : மார் 10, 2017

நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி. என்னுடைய தமிழ் ஆசிரியர் சொக்கலிங்கம், 'லகரம், ளகரம், ழகரம்' உச்சரிப்பதில், யார் தவறு செய்தாலும், ஒற்றுப் பிழை வந்தாலும், அவருக்கு எப்படி கோபம் வரும் என்றே சொல்ல முடியாது. தமிழ் மொழியின் மீது அவ்வளவு பற்று.
ஒரு சமயம், எங்கள் பள்ளிக்கு, 'இன்ஸ்பெக் ஷன்' செய்ய வந்தார் கல்வி அதிகாரி. எங்கள் போதாத நேரம், அந்த அதிகாரி, தமிழ் புத்தகத்தில் ஒரு பக்கத்தை தோழியிடம் கொடுத்து, வாசிக்க கூறினார்.
எங்களுக்கு ஒரே நடுக்கம், இன்றைக்கு என்ன நடக்க போகிறதோ என்று பயந்து கொண்டிருந்த நேரத்தில், அவள் வழக்கம் போல், அவள் பாணியில் வாசித்தாள்.
எங்கள் ஆசிரியருக்கு வந்ததே கோபம். வகுப்பறையில் அதிகாரி இருப்பதை கூட மறந்து, 'எரும எரும என்ன படிக்கிற வந்தார்கல்; சுடுகாட்டுல கொண்டு போய் உன்னை கொளுத்தினார்கல்...' என்று திட்டி முடித்தார்.
வந்திருந்த அதிகாரி, ஒரு நிமிடம் வாயடைத்து நின்று, பின், காரணத்தை கேட்டார். உடனே நான், 'ஆசிரியரின் தமிழ்ப்பற்றையும், தமிழ் உச்சரிப்பை யார் சிதைத்தாலும் விட மாட்டார்' என்று தெளிவாக சொன்னேன். ஆசிரியரின் தன்னலமற்ற சேவையை எடுத்து சொன்ன என்னை, பாராட்டினார் அதிகாரி.
பிள்ளைகளிடம் இப்படி நடந்து கொள்கிறாரே என்று தவறாக எண்ணாமல், அவருடைய கடமை உணர்ச்சியையும், தமிழ் மீது, அவருக்குள்ள ஈடுபாட்டையும் கண்டு, அவரை புகழ்ந்து பாராட்டி, பதிவேட்டில், அவரை பற்றி நல்ல, 'ரிமார்க்' எழுதிவிட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியை, இப்போது நினைத்தாலும், சிரிப்பும், நெகிழ்ச்சியும் தான் என்னுள் எழும். இன்று நான் தமிழை பிழையின்றி எழுதவும், படிக்கவும் அவரே காரணம். எழுத்தறிவித்த அந்த இறைவனுக்கு இக்கடிதம் சமர்ப்பணம்.
- கு.கோப்பெருந்தேவி, மவுலிவாக்கம்.
