தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளவரசன் ப்ருத்திவி (9)

இளவரசன் ப்ருத்திவி (9)

இளவரசன் ப்ருத்திவி (9)


PUBLISHED ON : மார் 31, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்-: மைத்ரேயி, சின்னி இருவரும் பேசிக்கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தாள் சின்னி. இனி-

“எவ்வளவு நேரமா தட்டுறது, அப்படி என்ன உள்ளே வேலை...” என்று கடுப்புடன் உள்ளே நுழைந்தான் இம்புலி.

“மாமா! முதல்ல தலையை துவட்டிட்டு துணியை மாத்துங்க, இப்படி ஈரத்துணியோட இருந்தா காய்ச்சல் வரும்,” என்று சொல்லி, ஒரு துண்டை நீட்டினாள் சின்னி.

“காய்ச்சல் என்னடி பெரிய காய்ச்சல். அந்த களவாணிப்பயல்களாலே இன்னைக்கு காலேலேர்ந்து கஷ்டம் தொடர்ந்துகிட்டே இருக்கு பாரு... அந்த திருட்டு ராஸ்கோல்கள் கிட்டேர்ந்து, நீ வாங்கின பணம், நகைகளுக்கு, நான் அல்லவா நாயா அலைய வேண்டி இருக்கு. அதை எங்கே, எப்படி தொலைச்சு தலை முழுகலாம்னு பார்த்தா, வழியே கிடைக்க மாட்டேங்குது,” என்று புலம்பினான்.

“மாமா! மொதல்லே தலையை துவட்டுங்க; உடையை மாத்திட்டு வாங்க; நான் சூடா ஆகாரம் தர்றேன், அப்புறம் மற்றதை பேசலாம்...” என்றாள் சின்னி.

“என்னடி சமரசம் பேசறே... இப்ப என் உயிருக்கே ஆபத்து வந்துடுச்சு. என்னைய தேடி கொலை செய்ய, ஆட்களை ஏவிவிட்டிருக்கான். என் உசிரை கையிலே புடுச்சுட்டு இங்கே வந்து சேர்ந்ததே பெரிய காரியம்!”

“யாரு மாமா, உன்னை கொல்ல சதி செய்திட்டு இருக்குறது...”

“யாரா இருந்தா உனக்கு என்ன? இன்னும் சிறிது நேரத்தில், நான் கொலை செய்யப்படுவேன். அப்புறம் உன் கதி?” சொல்லிவிட்டு கதற ஆரம்பித்தான் இம்புலி.

“இம்புலி! அழுகையை நிறுத்து. உன்னை யாராலும் கொலை செய்ய முடியாது. உன் மேல் ஒரு தூசு கூட விழாது. அதுக்கு நான் உத்திரவாதம்!” என்றாள் மைத்ரேயி.

அப்போதுதான் அவளை, முதன் முதலாக கவனித்தான் இம்புலி.

“நீ யார்? எதற்காக இங்கு வந்த? அந்த களவாணிப்பயலுக உன்னை அனுப்பி, அவுனுக கொடுத்ததை வாங்கிட்டு வரச் சொன்னானுங்களா?”

“நிறுத்து இம்புலி. மேற்கொண்டு ஒரு வார்த்தை பேசாதே! அந்த சுருக்குப்பை எங்கே? அதை முதலில் சொல்!” என்று கோபமாக கேட்டாள் மைத்ரேயி.

“ஆஹா நான் சொன்னது சரியா போச்சு பார்த்தியா... நீ அந்த திருடர்களின் கையாள் தான்...''

''நான் கேட்டதற்கு பதில் சொல்லு! அந்த சுருக்குப்பை எங்கே... அதை அந்த பஞ்சாயத்து தலைவன் கிட்டேயா குடுத்தே?” என கேட்டாள் மைத்ரேயி.

“ஆமாம். அதுல என்ன தப்பு? திருட்டு சொத்து எனக்கு வேணாம்...'' என்று மிடுக்காக கூறினான் இம்புலி.

“என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நீ மேலும் மேலும் களவாணிப்பயலுக என்று சொன்னால்... உன்னை, நானே கழுத்தை நெறித்து கொலை செய்துவிடுவேன் ஜாக்கிரதை!” என்றாள் மைத்ரேயி.

“அட அத்தினி பெரிய மனுசியா நீ... எங்கே என் மேலே உன் கை படட்டும்... மரியாதையா வெளியே போயிடு. உன்னை யாரும் இங்கே வெத்தல பாக்கு வெச்சு அழைக்கலே...” என்று கோபமாக கத்தினான்.

“நிறுத்து மாமா! உன் பேச்சை. யாரை பாத்து என்ன வார்த்தை சொல்லுறே?” இவங்க அரண்மனையிலே இருந்து, மகாராஜா சொல்லி வந்துருக்காங்க.

“காலைல வந்து, உனக்கு சரியா மண்ணுலே உக்காந்து, பேசி என்னை தங்கச்சின்னு பாசமா கூப்பிட்டு, அந்த சுருக்குப்பை வழிய பணத்தையும், மோதிரத்தையும் கொடுத்தாங்களே... அவங்கள நீ நா கூசாமே களவாணின்னு சொல்றியே... அவங்க தான் நம்ம துஷ்யந்த மகாராஜாவும், மந்திரியும்...

“சின்னி... சின்னி! என்ன சொல்ற நீ...” என்று அதிர்ந்தான் இம்புலி.

“மாமா நான் சொல்வது முற்றிலும் உண்மை!” என்றாள் சின்னி.

“அய்யோ! எப்பேர்பட்ட பாவி நான். மகாராஜாவையா நான் இப்படி எல்லாம் திட்டினேன். இனி ஒரு நிமிடம் கூட இந்த பாவி உசுரோடு இருக்கக்கூடாது. உன் கையாலேயே என் கழுத்தை நெறிச்சு கொன்னுடு தாயீ...” என்று மைத்ரேயியின் காலில் விழுந்தான் இம்புலி.

“நீ தெரியாமல் பேசிவிட்டாய்... அதில் ஒன்றும் தப்பு இல்லை. முதலில் நீ எழுந்திரி...” என்றாள்.

“தாயி இப்போ அந்த சுருக்குப்பை, வஜ்ரவேலிடம் தான் இருக்கிறது. நானும், சின்னியும் நாளை காலை வருவோம். அதுவரை, நீ இதை திறக்கக்கூடாது என்று சத்தியம் வாங்கி வந்திருக்கேன். என் நண்பன் சத்தியத்தை மீற மாட்டான். நான், நாளை காலை போய், அதை வாங்கிவந்துவிடுகிறேன்,” என்றான் இம்புலி.

“இப்போ புரியுதா இம்புலி. அந்த மோதிரம் தான், உன்னை உயிரோடு தப்பிக்க வைத்திருக்கிறது. அதன் அருமை உனக்கு போகப் போக புரியும். அந்த சுருக்குப்பையும், மோதிரமும் உன் வீட்டில் தான் இருக்க வேண்டும்.

''மகாராஜாவே நேரில் வந்து கொடுத்துட்டு போனதின் நோக்கம் என்னன்னு யாருக்குமே புரியாத புதிர். உன் வீட்டில் இருக்க வேண்டிய அந்த அபூர்வ பொக்கிஷத்தை, நீ எப்படி மற்றவர் வீட்டில் கொண்டு போய் வைக்கலாம். அது பெரிய தெய்வக் குத்தம் இம்புலி. உடனே புறப்படு. நாம் இருவரும் போய் அதனை வாங்கி வந்துடலாம்,” என்றாள் மைத்ரேயி.

“அக்கா! மழை நிற்கவில்லை; நடுராத்திரி. காலையிலே நானும் வரேன். நாம போய் எடுத்துட்டு வந்துடலாம்,” என்றாள் சின்னி.

“கூடவே கூடாது சின்னி. அந்த தெய்வீக பொக்கிஷம், உன்னுடன் உன் வீட்டில் தான் இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட அதனை விட்டு நீங்கள் இருவரும் பிரியக் கூடாது. இந்த மழை இருட்டெல்லாம் ஒரு பொருட்டல்ல. உன் வீடு தேடி வந்த பொக்கிஷம் அது.

''மகாராஜாவே உங்கள் இருப்பிடம் தேடி வந்து, உனக்கு கொடுத்த சீதனம் அது. நீ எத்தனை அதிர்ஷ்டசாலி. நான் திரும்பி வந்து விபரம் சொல்றேன். கதவை தாளிட்டுக்கொள்,” என்று கூறிவிட்டு, இம்புலியுடன் புறப்பட்டாள் மைத்ரேயி.

இம்புலிக்கு உடலில் புது ரத்தம் பாய்ந்தது, என்று தான் சொல்ல வேண்டும். புத்துணர்ச்சியுடன் கம்பீர நடை பயணத்தை தொடர்ந்தான்.

வஜ்ரவேலுவின் வீட்டை அடைந்த போது நட்ட நடுநிசி. இம்புலி கதவை தட்டியதும் வஜ்ரவேலுவிற்குள் ஒரு மின்னல்.

'யாரது? இந்த நட்ட நடு நிசியில் வந்து என்னை எழுப்புவது?' என்று உரக்க கத்தியபடியே, மெதுவாக கதவைத் திறக்க... அங்கே நண்பன் இம்புலியும், ஒரு பெண்ணும் நிற்பதைக் கண்டு, சட்டென்று பயம் தெளிந்து, “என்னடா இம்புலி! இந்த அகால வேளையில்...”

“மன்னிச்சுடு வஜ்ரவேல்... நான் உன்கிட்டே விட்டுச் சென்றேனே அந்தப் பை, இவங்களுடையது. இவங்க அரண்மனையில் வேலை செய்கிறவங்க. இவங்க ஒரே பிடிவாதமாக பையை வாங்கிட்டு திரும்பி வந்த உடனே நான் அரண்மனைக்கு போகணும். இல்லாட்டி விபரீதம் ஆயிடும் என்று கூறியதால், கூட்டிட்டு வந்தேன்,” என்றான்.

மறுபேச்சின்றி, அலமாரியிலிருந்த அந்தப் பையை இம்புலியிடம் கொடுத்தான் வஜ்ரவேல்.

அந்தப் பையினுள் உறங்கிக்கொண்டிருந்த சுருக்குப் பையை பார்த்ததும் தான், மைத்ரேயிக்கு உயிர் வந்தது.

“பையை திறந்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான் வஜ்ரவேல்.

“பரவாயில்லை... நான் உங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்த உதவியை என்றுமே மறக்க மாட்டேன்,” என்ற மைத்ரேயி, கரம் கூப்பி விடைபெற்றனர்.

மிக விரைவாக, மைத்ரேயியும், இம்புலியும் தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

“சின்னி! உன்னிடம் ஏதேனும் பட்டுத்துணி இருக்கிறதா, இருந்தால் எடுத்து வா,” என்றாள் மைத்ரேயி.

ஆசை ஆசையாக வாங்கிய, பச்சையும், மஞ்சளும் கலந்த பட்டுத்துணியை எடுத்து வந்து, அக்காவிடம் நீட்டினாள் சின்னி.

“சின்னி, இம்புலி அண்ணே! இருவரும் என் பக்கத்தில் உட்காருங்கள். உங்களிடம் நான் சொல்லப்போகும் விபரங்களை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. ஏனெனில், இது தேவ ரகசியம்...” என்று சொல்லியபடியே பட்டுத்துணியை விரித்தாள் மைத்ரேயி.

சுருக்குபையை நன்றாக திறந்து அப்படியே அந்தப்பட்டுதுணி மீது கவிழ்த்துக்கொட்ட, அதிலிருந்து பணக்குவியலும், பச்சையும், நீலமும், மஞ்சளும் மாறி மாறி ஒளி வீசி, கண்களை கூச செய்த அந்த பெரிய வைரமோதிரமும் வந்து விழுந்தது.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us