PUBLISHED ON : மார் 31, 2017

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குக்கிராமம் ஒன்றில், எட்டாம் வகுப்பு படித்த போது, மதிய வேளையில், வயல்புறங்களில் விளையாடி மகிழ்வோம்.
என் வகுப்பாசிரியர் மிகவும் சிடுமூஞ்சி; அடிப்பதில் மன்னர்; அவர் பிரம்பை எடுத்தாலே, கால்சட்டை ஈரமாகிவிடும்.
ஒருமுறை கரும்பு சீசனில், பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில், கரும்பு போட்டிருந்தனர். வழக்கம்போல், வகுப்பு தோழர்கள் அங்கு சென்று, கரும்பை உடைத்து வரும் போது, யாராவது வருகின்றனரா என காவல் காப்போம். அதை தெரிந்து கொண்ட கரும்பு தோட்டக்காரர், 'உங்கள் பள்ளி மாணவர்கள் தோப்பில் கரும்பை திருடுகின்றனர்' என தலைமையாசிரியரிடம் போட்டுக்கொடுத்தார். அதனால், கொஞ்ச நாட்கள் அமைதியா இருந்து விட்டு, மீண்டும் கரும்பு திருட சென்றோம்.
திரும்பி பார்த்தால், வகுப்பாசிரியர் கையில் பிரம்புடன் வந்து கொண்டிருந்தார். அவ்வளவு தான், வாத்தியார் வருவதை நண்பர்களுக்கு சொல்லிவிட்டு, நாங்கள் ஓடி விட்டோம். பயந்து நடுங்கியபடி, கரும்புடன் வந்தனர் வகுப்பு தோழர்கள். ஆசிரியரை கண்டதும், கையிலிருந்த கரும்பை கீழே போட்டு விட்டனர்.
அந்த கரும்புகளை எடுத்த ஆசிரியர் 'கரும்புன்னா எனக்கு உயிர், எனக்கும் கரும்பு தாங்கடா...' என்றாரே பார்க்கலாம். அப்போது தான் எங்களுக்கு உயிர் வந்தது. சிரித்தபடியே அவரது பையில் கரும்புகளை அடுக்கி வைத்தனர் நண்பர்கள்.
கரும்பு சாப்பிடும் போதெல்லாம் இந்த நிகழ்வு தான் என் நினைவுக்கு வரும்.
- ராணி, செல்லாங்குப்பம்.
