PUBLISHED ON : நவ 12, 2022

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், வலையபூக்குளம், கே.வி.சாலா நடுநிலைப் பள்ளியில், 1980ல், 2ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் பாக்கியம். மனக்கணக்கு போட அடிக்கடி பயற்சி தருவார்.
ஒரு நாள், 'ஒரு மரத்தில், 100 குருவிகள் உள்ளன; அதில், ஒன்றை வேடன் சுட்டு விட்டான். மீதம் எத்தனை இருக்கும்...' என்றார். சிலேட்டில், 99 என எழுதி காட்டினேன்.
எனக்கு தவறு என்றும், பக்கத்தில் இருந்தவளுக்கு சரி என்றும் போட்டார்.
ஆத்திரத்தில், 'என்ன டீச்சர்... நீங்கள் தானே, 100ல் ஒன்று குறைந்தால், 99 என்று சொன்னீர்கள்; இப்போது, 'பூஜ்ஜியம்' சரி என, போட்டிருக்கிறீர்களே...' என்றேன்.
சிரித்தபடியே பள்ளி மைதானத்துக்கு எங்களை அழைத்துச் சென்று, 'அந்த மரத்தில், எத்தனை காகங்கள் உள்ளன...' என்று கேட்டார். உற்று பார்த்து, 'ஐந்து...' என்று கூறினோம்.என்னை அழைத்து, அந்த மரத்தில் கல் வீச சொன்னார். எறிந்த பின், 'காகங்கள் இருக்கிறதா...' என்று கேட்டார். அனைத்தும் பறந்து விட்டதால் சந்தேகமின்றி, 'எதுவுமில்லை...' என்றேன். புன்னகையுடன், 'ஆபத்து வரும்போது, காப்பாற்றி கொள்ள உயிரினங்கள் அந்த இடத்தை விட்டு அகன்று விடும்...' என புரிய வைத்தார்.
எனக்கு, 49 வயதாகிறது; அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். வகுப்பறையில் இதே போன்ற, புதிர் கணக்குகள் கற்றுத்தந்து மாணவ, மாணவியரை அறிவூட்டுகிறேன்.
- த.பரிமளா, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 94887 43587
