PUBLISHED ON : நவ 12, 2022

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2001ல், 9ம் வகுப்பு படித்தபோது, நடந்த சம்பவம்!காலாண்டு தேர்வு அறிவியல் பாடத்தில், 35 மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தேன். அம்மாவிடம் இதை சொல்ல பயந்து, 'பேப்பரை இன்னும் ஆசிரியர் திருத்தவில்லை...' என்று கூறி, இரண்டு நாட்கள் சமாளித்தேன்.
மூன்றாம் நாள், 'தேர்வில், 53 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்...' என தவறான தகவல் கூறினேன். பெற்றோர் -- ஆசிரியர் சந்திப்பின் போது, என் பொய் வெளிச்சத்துக்கு வந்தது. ஆசிரியை முன், மிகுந்த வேதனையில் அழுது விட்டார் என் அம்மா.
கனிவுடன், 'இனி நன்றாக படிப்பாள்... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்று தேற்றினார் ஆசிரியை. வீட்டிற்கு வந்ததும், அம்மாவிடம் மன்னிப்பு கேட்டேன். அப்போது, 'முதல் நாளே நீ உண்மையை சொல்லியிருந்தால், அன்றோடு முடிந்திருக்கும். பொய் சொல்லியதால், அதற்கும் சேர்த்து திட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதல்லவா... மன உளைச்சல் வேறு. இனி இப்படி செய்யாதே...' என்று அறிவுரைத்தார். அது பசுமரத்தாணி போல் பதிந்தது.
என் வயது, 33; அந்த சம்பவம் நல்ல பாடமாக அமைந்தது. வாழ்வில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும், உண்மையை சொன்னால் விடுபட வழி கிடைக்கும் என்பதை கற்றுக் கொண்டேன்.
- பா.நாகலட்சுமி, சென்னை.
