PUBLISHED ON : மே 18, 2018

ஐரோப்பா கண்டத்தில் உள்ள, இங்கிலாந்து நாட்டின் மகாராணி விக்டோரியா. இவரது பேரன், ஐந்தாம் ஜார்ஜை, இளம் வயதில், ஒரு கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய அனுப்பினார். சம்பளம், செலவுக்கு போதாது என்பதால், இங்கிலாந்து நாணய மதிப்பில், 50 பவுண்ட் பணத்தை, மாதந்தோறும் அனுப்பிவந்தார்.
'செலவுக்கு, இப்பணமும் போதவில்லை; 100 பவுண்ட் அனுப்புங்கள்...' என்று, ஐந்தாம் ஜார்ஜ், பாட்டி விக்டோரியாவுக்கு, கடிதம் எழுதியிருந்தார். இதைப் படித்ததும், சிந்தனையில் ஆழ்ந்தார், மகாராணி.
அதிகமாக பணம் அனுப்ப அவர் விரும்பவில்லை; அனுப்பாமல் இருக்கவும் முடியவில்லை. 'பேரன் வருந்துவானே' என்ற வேதனை ஒருபுறம். 'அதிகம் செலவு செய்து கெட்டுப்போவானோ' என்ற கவலை மறுபுறம்; குழப்பத்தில் தவித்தார்.
பேரனை எண்ணி, அறிவுரை கூறி கடிதம் எழுதுவதும், அதை அனுப்பாமல் கிழித்துப் போடுவதுமாக சில நாட்கள் கடந்தன.
உலகை ஆளும் மகாராணி, வருங்கால மன்னனான தன் பேரன் பணம் இன்றி தவிப்பதை கண்டு சும்மா இருக்கலாமா... வேறு வழி தெரியாமல் பணம் அனுப்ப முடிவு செய்தார். அதற்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது; பணம் அனுப்பவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தார்.
பெருஞ் செல்வ குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தாலும், சிக்கனமாக வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அப்படி வாழ்வதற்கான விதிகளையும் வழி முறைகளையும் ஒரு கடிதத்தில் விளக்கமாக எழுதினார். அதை, தபாலில் அனுப்ப உத்தரவிட்டார்.
கடிதம் அனுப்பிய பின், மீண்டும் சங்கடம் ஏற்பட்டது. திருப்பி வாங்கி வர பணியாளை ஏவினார். ஆனால், அதற்குள் கடந்த போய்விட்டது தபால்; திரும்ப பெற முடியவில்லை.
விக்டோரியா மகாராணிக்குப் பெருங்கவலை!
'பேரன் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ... கடிதத்தை பார்த்ததும் என்ன நினைப்பானோ' என்ற நினைப்பில் ஆழ்ந்தார். அந்த வாரம் முழுவதும், அவர் சரியாக உண்ணவில்லை; உறங்கவும் இல்லை.
பேரன் ஐந்தாம் ஜார்ஜ் எழுதிய பதில் கடிதம், 10 நாட்களுக்குப் பின், வந்தது. கை நடுக்கத்தோடு பிரித்துப் பார்த்தார். அதில், ஐந்து வரிகள் தான் எழுதப்பட்டு இருந்தன. அதில்...
'பாட்டி... இனிமேல், 50 பவுண்டு பணத்தையும் அனுப்ப வேண்டாம்; நான் பணம் கேட்கும் போதெல்லாம், கடிதத்தில் சிக்கன வாழ்க்கைக்கான விவர, விளக்கங்கள் எழுதி அனுப்புங்கள்; அது போதும்! 'சிக்கனமாக வாழ்வது எப்படி...' என்ற தலைப்பில் உங்கள் பெயரில் புத்தகமாக பிரசுரிக்க, ஒரு புத்தக வியாபாரிக்கு, 1000 பவுண்டுக்கு, கடித தகவலை விற்று விட்டேன்...' என்று எழுதப்பட்டிருந்தது.
இதை படித்ததும், மகாராணியின் முகம் எப்படி மாறியிருக்கும்... யோசித்து பாருங்களேன்!
