PUBLISHED ON : மே 18, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
நெட் ஹெல்ப்!
மனிதவள மேம்பாட்டு துறையும், அதன் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக் குழு, யூ.ஜி.சி., உள்ளிட்ட அமைப்புகள், கல்வித்துறை சார்ந்த, பல்லாயிரம் வீடியோ தொகுப்புகளை உருவாக்கி, இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றன.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இந்த வீடியோக்கள் பயன்படும். யு.ஜி.சி., துவங்கிய கல்வி தகவல்களுக்கான கூட்டமைப்பு, பேராசிரியர்களை கொண்டு, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது.
கலை, அறிவியல், தத்துவம், மேலாண்மை, வணிகவியல், தகவல் தொடர்பு, சுற்றுலா, விளம்பரம், இசை என, எல்லாத்துறைகளுக்கும், வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
துறைகளில் வல்லுனர்களான பேராசிரியர்களின் விரிவுரைகள், வீடியோ தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை, 20 நிமிடங்கள் துவங்கி, 60 நிமிட அளவுள்ளவை; யு.ஜி.சி., பாட திட்டப்படி அமைந்தவை. 'நெட்' தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இந்த வீடியோ தொகுப்புகளில் கற்றுக் கொள்ளலாம்.
யூ.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கும் இந்த வீடியோக்கள் பயன்படும்.
வரலாறு, புவியியல், அரசியலமைப்பு சட்டங்கள், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறை சார்ந்த வீடியோக்கள், சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுதுவோருக்கு பயன்படும். அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், பொது மேலாண்மை போன்றவற்றை, முதன்மை தேர்வில் விருப்ப பாடங்களாக தேர்வு செய்துள்ளவர்களுக்கும், வீடியோ தொகுப்பு நல்ல வாய்ப்பு.
'Cec Ugc' என்ற, 'யுடியூப்' சேனலில், வீடியோ தொகுப்பை காணலாம்.
தேசிய அளவிலான, தகவல் தொழில் நுட்ப திட்டத்தின் கீழ், 'வித்யா மித்ரா' என்ற பெயரிலும், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
மனித உரிமைகள், குற்றவியல் போன்ற பாடப் பிரிவு சம்பந்தமான வீடியோக்கள் சமூகப் பணிகளுக்கான கல்வி என்ற பிரிவின் கீழ், யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு எழுதுவோருக்கு உதவும்.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், புத்தக வாசிப்போடு, வீடியோ தொகுப்பை பார்ப்பதையும் இணைத்துக் கொள்ளலாம். படிப்பு, சலிப்பை ஏற்படுத்தும் போது, வீடியோ தொகுப்பை பார்ப்பது வாசிப்புக்கு மாற்று பயிற்சியாக இருக்கும்.
உதாரண நிறுத்தம்!
தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் உள்ள சிங்கப்பூர், ஜீராங் நகர பஸ் நிறுத்தம், உலக பஸ் நிறுத்தங்களுக்கு, ஒரு முன்னுதாரணம். இதன் கூரை, சூரியசக்தி தகடுகளால் ஆனது. ஏராளமான மொபைல் போன்களை, 'சார்ஜ்' செய்து கொள்ளலாம். இலவச, 'வை - பை' வசதியும் உண்டு.
அங்கு பல அலமாரிகளில், புத்தகங்கள் உள்ளன. பேருந்துக்கு காத்திருப்பவர், விரும்பிய புத்தகத்தை படிக்கலாம்; திரையில், நடப்பு செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
மின் புத்தகங்களை, பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
சிறுவர்கள் விளையாட, ஊஞ்சல்கள் உள்ளன; வளர்ச்சி அடைந்த நாடுகளில், சிங்கப்பூர் சிறப்பிடம் பெறுவது இது போன்ற வசதிகளால் தான்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!
