
ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் மிகப் பெரிய பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன.
இதில் பயன்படுத்தப்படும் ஜல்லி கற்களை ரயில்வே, 'டிராக் பேல்லஸ்ட்' என அழைக்கிறது. இதுவே, ரயில் தடம் சரியான இடத்தில் நிலைக்க உதவுகிறது. ரயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வால் தண்டவாளம் நகர்ந்து விடாதபடி தடுக்கிறது. இவை, தண்டவாளங்களை இறுக்கமாகப் பிடித்து, நகராமல் பார்த்துக் கொள்ளும்.
ரயில் பெட்டிகள் மிகவும் கனமானவை. அவை தொடர்ச்சியாக இயங்கும்போது அருகில் இருக்கும் கட்டுமானங்கள் அதிரும். வீடுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொருட்கள் கூட சரிந்து விழும்.
தண்டவாளத்தில் அதிக வேகத்தில் ரயில் ஓடும் போது அதன் ஒழுங்கமைப்பில் மாற்றம் ஏற்பட வய்ப்பு உண்டு. அதனால், பெரும் விபத்துகள் ஏற்படக் கூடும். இதைத் தவிர்க்கும் பொருட்டே ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டுள்ளன.
ரயில் பாதையில் தாவரங்கள் வளர்வதையும் இந்த ஜல்லி கற்கள் கட்டுப்படுத்துகின்றன. தண்டவாளத்தில் தண்ணீரை தேங்க விடாமல் வழிந்தோட செய்கிறது. இதனால் மண் அரிப்பும் தவிர்க்கப்படுகிறது.
நீளமான கான்கிரீட் குறுக்கு மட்டங்களும் ரயில் பாதைகளில் பயன்படுகின்றன. இதை, 'ஸ்லீப்பர்' என ரயில்வே துறை குறிப்பிடுகின்றது. தண்டவாளங்கள் வளையாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓடும் ரயிலுக்கு பன்மடங்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
ரயில்கள் முதன்முதலில் ஓடத் துவங்கிய போது, 'ஸ்லீப்பர்' மரக் கட்டைகளால் உருவாக்கப்பட்டன. இப்போது கன்கிரீட்டால் தயாரிக்கப்பட்டு உள்ளது. ரயில்களின் எடை, வேகம் அதிகரித்திருப்பதால், இந்த தொழில்நுட்ப மாற்றம் அவசியமாக இருக்கிறது.
- பாலாஜி

