
நாகர்கோவில் அருகே, தெங்கம்புதுார், சொத்தவிளை, அரசு தொடக்கப் பள்ளியில், 1989ல், 5ம் வகுப்பு படித்த போது தலைமை ஆசிரியராக இருந்த ராமச்சந்திரன் மிகவும் கண்டிப்பானவர்; வகுப்புகளை கண்காணிக்க அடிக்கடி ரோந்து வருவார். அப்போது படிக்காமல் அரட்டை அடிப்போரை திட்டுவார்; அவரை கண்டால் நடுங்குவோம்.
ஒருமுறை, விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து படித்து கொண்டிருந்தேன். சக மாணவன், தமாசு ஒன்றை கூற, 'கெக்கே... புக்கே...' என சிரித்தேன். அதை கவனித்து, 'இது நக்கல், நையாண்டி செய்து சிரிப்பதற்கான இடம் அல்ல; இனிமேல் இதுபோல் பார்த்தால், தோலை உரிச்சிடுவேன்...' என எச்சரித்தார்.
அன்று முதல் சிரிப்பதை மறந்து விட்டேன். சக மாணவர்களும் பயந்திருந்தனர். ஆண்டு இறுதியில், மாணவர்கள் குழு புகைப்படம் எடுக்க பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பணிக்கு வந்தவர், என் தந்தையின் நண்பர். என்னை நன்கு அறிந்தவர்.
புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தபடி மாணவர்கள் நடுவில், தலைமை ஆசிரியரும் அமர்ந்திருந்தார். கேமராவை சரி செய்தபடி, 'ஸ்மைல் ப்ளீஸ்...' என கூற, எந்த சலனமும் இன்றி, 'உர்...' என நின்றோம். மறுபடி கூறிய போதும் சிரிக்கவில்லை.
பொறுமை இழந்து, 'தம்பிகளா... கொஞ்சம் சிரிங்கப்பா... மகேஷ்... உனக்கு என்ன ஆச்சு...' என குறிப்பாக என்னை கேட்டார் புகைப்பட கலைஞர். நறுக்கு தெறித்தாற்போல், 'அண்ணே... சிரித்தால், நாங்க தோல் இல்லாம தான் இருக்கணும்...' என கூறினேன். அந்த இடம் சிரிப்பால் அதிர்ந்தது.
என் வயது, 43; சிரிப்பு மழையால் நனைய வைத்த அந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் மகிழ்ச்சி தருகிறது.
- மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.
தொடர்புக்கு: 94870 56476