
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 7ம் வகுப்பு படித்தேன். புதிதாக பொறுப்பேற்றிருந்த தலைமை ஆசிரியர் ஐ.சின்னப்பன் கண்டிப்பு மிக்கவர்.
ஒழுக்கத்தை கடைபிடித்ததால், புகழ் பெற்றவர். ஒவ்வொரு வகுப்பாக வந்து, ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவதை கண்காணித்து விசாரிப்பார். அவர் மீது மரியாதையும், பயமும் கொண்டிருந்தோம்.
அப்போது, மாணவர்கள் வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டும் சீருடை அணிவது நடைமுறையாக இருந்தது. அதை மாற்றி, 'வகுப்பு நாட்களில் முழு சீருடையில் தான் வர வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
கடைபிடிக்க தவறியவர்களை, இறைவணக்க கூட்டத்தில் கண்டித்தார். கடுமையாக முயன்று அமல்படுத்தினார். இந்த செயல், வகுப்புக்கு வராமல் சுற்றித்திரிந்த மாணவர்களை அடையாளம் கண்டு ஒழுங்கு படுத்த உதவியது.
கடிவாளம் போட்டதால், படிப்பில் கவனம் செலுத்தினர் மாணவர்கள். ஒழுக்கமும் மேம்பட்டது. இவ்வாறு சீர்திருத்தங்கள் செய்தவர் ஓய்வு பெற்ற போது, பிரிய மனம் இன்றி, கதறி அழுதனர் மாணவர்கள்.
தற்போது, என் வயது, 41; தபால் துறையில் ஊழியராக பணிபுரிகிறேன். மாணவர்கள் நலனில் அக்கறை காட்டிய அந்த தலைமை ஆசிரியரை நினைத்த உடன் கண்கள் பனிக்கிறது. அவரிடம் படித்ததை பெருமையாக எண்ணுகிறேன்!
- கோ.குப்புசுவாமி, கள்ளக்குறிச்சி.
தொடர்புக்கு: 98401 46754