
முன்கதை: கிராமத்தில் நீச்சல் கற்ற சிறுவன் மிகிரனும், சிறுமி சிற்பிகாவும், சர்வதேச போட்டிக்கு பயிற்சி பெற்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் நீந்திய போது, நீர்ச் சுழலில் சிக்கி, கடல் கன்னி நகரத்துக்கு வந்தனர். அங்கு மன்னர் அளித்த வரவேற்பில், கடல் உயிரினங்களுடன் ஆடிப்பாடினர். அப்போது, கறுப்பு நிற வஸ்து, கடலடியில் வந்தது. இனி -
அந்த கறுப்பு நிற வஸ்து, ஒரு நீர் மூழ்கிக் கப்பல்.
நீர் மூழ்கி கப்பலில் சிக்கி, சிதைந்து விடாமல் இருக்க, கடலின் அடிமட்ட தரையோடு தரையாய் ஒட்டி படுத்தன கடல் வாழ் உயிரினங்கள்.
அந்த நீர் மூழ்கி கப்பல், ஒரு திமிங்கலம் மாதிரி இருந்தது.
கடலுக்கடியில், மணிக்கு, 37 கி.மீ., வேகத்தில் செல்லும் ஆற்றல் உடையது. அது இந்திய கப்பற்படைக்கு சொந்தமானது; ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
நீர் மூழ்கி கப்பல் கடந்து சென்ற உடனே, உயிரினங்கள் ஈர சேற்றிலிருந்து எழுந்தன.
'தப்பிச்சோம்டா சாமி...'
குதுாகலித்தது கூம்பு நத்தை.
''ஜில்லி... ஒரு சந்தேகம்...''
கேட்டான் மிகிரன்.
'என்ன...'
''நீர்மூழ்கி கப்பலின் ரேடார் கண்களுக்கு கடல் கன்னி நகரம் சிக்கி விடாதா...''
'கவலைப்படாதே... எந்த ரேடார் கண்களிலும் கடல் கன்னி நகரம் சிக்காது...
'எத்தனை நிலநடுக்கம் ஏற்பட்டாலும், எத்தனை எரிமலைகள் வெடித்தாலும், கடல் கன்னி நகரத்திற்கு ஒரு துளி சேதாரமும் ஆகாது...'
''வாழ்க கடல் கன்னி நகரம்...''
'மிகிரன்... சிற்பிகா... இன்று, நாம் கடல் கன்னி நகரத்தின் ஒரு பள்ளிக்கு செல்ல இருக்கிறோம்... தயாராக இருங்கள்...'
அதன்படி புறப்பட்டு பள்ளிக்குள் பிரவேசித்தனர்.
ஒரு கடல் கன்னி ஆசிரியை, மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
மாணவ, மாணவியரில் எல்லா கடல் வாழ் உயிரினங்களும் இருந்தன.
தலைமையாசிரியை ஒரு ஆமை. அதை சந்தித்து பேசிய பின், மூவரும் வெளியே வந்தனர்.
''ஜில்லி... எங்களுக்கு ஒரு உதவி செய்வாயா...''
'சொல் மிகிரா...'
''கடல் கன்னி நகரத்தின் ஒவ்வொரு குடிமகனையும், மகளையும் சந்தித்து, கை குலுக்கி வாழ்த்து கூற விரும்புகிறோம்...'' என்றான் மிகிரன்.
'அவ்வளவு தானா... மன்னரிடம் கூறினால் அறிவிப்பு செய்து விடுவார். மன்னர் சபைக்கு அனைவரையும் வர சொல்லி விடலாம். நீங்கள் எளிதாக சந்தித்து விடலாம்...'
''ஜில்லி... உங்கள் நகரத்தில் குற்றம் புரிந்தோருக்கு, அதிக பட்ச தண்டனை எவ்வளவு தருகிறீர்...''
'மரண தண்டனை... ஒரு கைதிக்கு, மரண தண்டனை தருவதை நேரில் பார்ப்போம்... வாருங்கள்...'
சிறை கூடத்துக்கு போயினர்.
அங்கு ஒரு கைதி நின்றிருந்தான்.
ஒரு ஆறடி நீளமுள்ள மின்சார ஈல் கைதிக்கு எதிரே நின்றிருந்தது.
'அதன் பெயர் எலக்ட்ரோ போரஸ் எலக்ட்ரிகஸ்...'
அறிமுகப்படுத்தியது ஜில்லி.
''ஓவ்...''
'அந்த ஈலிடமிருந்து, 860 வோல்ட் மின்சாரம் வெளிப்படும்...'
சிறை அதிகாரி கையை உயர்த்தி, 'மூன்று... இரண்டு... ஒன்று... பூஜ்ஜியம்...' என கத்தினார். மின்சார ஈல், 860 வோல்ட் மின்சாரத்தை கைதி மீது பாய்ச்சியது.
கைதி சுருண்டு விழுந்து செத்தான்.பரிசோதித்து இறந்ததாய் அறிவித்தார் மருத்துவர்.
''ஈலின் மின்சாரம் அருகில் இருந்த சிறை அதிகாரி மற்றும் மருத்துவரை தாக்காதா...''
'இருவருமே பாதுகாப்பு ஆடை அணிந்திருக்கின்றனர்...'
''தகவலுக்கு நன்றி ஜில்லி...''
மூவரும் மாளிகைக்கு திரும்பியதும், 'மிகிரன்... சிற்பிகா... நீங்களிருவரும் இங்கேயே இருந்து விடுங்களேன்...' என்றது ஜில்லி.
''பெற்றோரை பார்க்க வேண்டுமே...''
'இன்னும், எத்தனை நாள், எங்கள் நகரத்தில் இருப்பீர்...'
''ஒன்றிரண்டு நாட்கள் இருப்போம்; அதன்பின், கரைக்கு திரும்பி விடுவோம்...''
'பிரிவுத்துயரை தாங்க முடியாதே...'
நெகிழ்வுடன் கூறியது ஜில்லி.
''எல்லா உறவுகளும், நட்புகளும் ஒரு நாள் பிரிய தானே வேண்டும்...''
'நான் வேண்டுமானால், உங்களுடன் வந்து விடவா...'
''உன் பெற்றோருக்கு என்ன பதில் கூறுவது, அவரவர் இடத்தில்... அவரவர் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்...''
அப்போது முரசறையும் ஒலி கேட்டது. அறிவிப்பாளர் கூவினர்...
'நம் கடல் கன்னி நகரத்துக்கு விருந்தாளியாக வந்த மிகிரனும், சிற்பிகாவும் குடிமக்களை சந்தித்து, அளவளாவ விரும்புகின்றனர். அதனால், நாளை காலை, 8:00 மணிக்கு அனைவரும் அரண்மனை வாசலில் கூடுங்கள்...'
டம...டம...டம...டம...டம...டம...
மிகிரனும், சிற்பிகாவும் துாங்கப் போயினர்.
கண்களில் துளிர்த்த கண்ணீரை, யாரும் பார்க்காத வண்ணம் துடைத்தது ஜில்லி.
- தொடரும்...- ஆர்னிகா நாசர்