
தமிழகத்தின் முக்கிய விழா பொங்கல். அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கலுக்கு முந்தைய நாள், வீட்டில் பழைய பொருட்களை சாம்பலாக்குவர். இதை, போகி என்பர். பழைய வேண்டாத பொருட்களை போக்கும் பண்டிகை. இது, இந்திர கடவுளுக்கு நடத்தும் விழாவாகவும் கருதப்படுகிறது. போகி என்ற சொல் இந்திரனைக் குறிக்கும். இது மார்கழி மாத கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது.
சூரியன் உதிக்கும் போது, வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு, படையல் போடுவதே பொங்கல் திருநாளின் முக்கிய நிகழ்வு. பொங்கலுடன் கரும்பு, இஞ்சி, மஞ்சள் மற்றும் காய்கனிகள் இடம்பெறும். கருநீல நிறக் கரும்பைத்தான் பயன்படுத்துவர். இதை பொங்கல் கரும்பு என்று கூறுவர்.
சூரியனை கடவுளாக போற்றிக் கொண்டாடும் விழா பொங்கல். உழவுத் தொழிலுடன் தொடர்பு உடையது. சூரியக் கதிர் நீரை ஆவியாக்குகிறது. அது மழையாகப் பொழிகிறது. இது கண்டு வியந்து சூரியனை வணங்கினர் மனிதர். இருள் சூழ்ந்தவுடன் அச்சம் கொண்டு பயத்துடன் கடந்தான் மனிதன். அதிகாலையில் சூரிய ஒளி கண்டு மகிழ்ந்தான்.
'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசும். அப்போது, நெல் விதைத்தால் நிலத்தில் சிறப்பாக வளரும். மார்கழி கடைசியில், அறுவடைக்கு வரும். அதையொட்டி சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
மார்கழியில் பொழியும் பனி, படிப்படியாகத் தை மாதம் குறைந்து வசந்த காலம் பிறக்கும். அதை வரவேற்கும் விதமாக இந்த விழா அமையும்.
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது முதுமொழி. இது அறுவடை காலத்தில், தானியம் கிடைப்பதால் உழவர்களின் பிரச்னை தீர்வதை குறிப்பிடுகிறது.
மாட்டுப் பொங்கல்!
உழவுத் தொழிலில் முதன்மையாக இடம் பெறுவது மாடு. காளை உழுவதற்கு பயன்படுகிறது. பசுவின் சாணம் சிறந்த இயற்கை உரமாக பயன்படுகிறது. எனவே, மாடுகளுக்கு பொங்கல் வைப்பதை, மாட்டு பொங்கல் என கொண்டாடுவர். மாட்டின் கொம்புகளில் வண்ணம் பூசி, கழுத்தில் மணிப் பட்டை கட்டி, கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல்!
உறவினர்களைக் கண்டு மகிழ்வதை, தமிழகத்தில் காணும் பொங்கலாக கொண்டாடுகின்றனர். அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு வண்டியில் பயணம் செய்து மகிழ்ச்சியை பகிர்கின்றனர்.
கரும்பு கணுவிலிருந்து முளைத்து வருவதைப் போல், உறவினர்களுடன் இணைந்து வாழ்வதை குறிக்கிறது. அன்று மாட்டு வண்டியில் சிறுவர், சிறுமியர் வலம் வருவது மகிழ்ச்சி தரும்.
பொங்கலை ஒட்டி நடக்கும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. கோவில், மந்தைவெளியில் மாடுபிடிக்கும் போட்டி நடத்துவர். மதுரை அருகே அலங்காநல்லுார், பாலமேடு பகுதியில் இது பிரபலம்.
பட்டம் விடுதல், சேவல் சண்டை, தேங்காய்ப் போர் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளும் பொங்கலை ஒட்டி நடத்தப்படும். சில இடங்களில் மாட்டு வண்டிப் பந்தயமும் உண்டு.
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடுகின்றனர்.
வட மாநிலங்களில், மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகரம் என்ற சொல், சூரியனைக் குறிக்கும். இதை சூரிய விழாவாக போற்றுகின்றனர்.
தை முதல் நாள் பெருமையை பண்டைத் தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநுாறு, கலித்தொகை, புறநானுாறு ஆகியவை தெரிவித்துள்ளன. பழமை மிக்க பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்!
- முகிலை ராசபாண்டியன்