
ஆசியா கண்டத்தில் புகழ் பெற்றது, சரஸ்வதி மகால் நுாலகம். இது, தஞ்சாவூர், அரண்மனை வளாகத்தில் உள்ளது. அருங்கலை பொருட்களின் பொக்கிஷமாக விளங்குகிறது.
பெருமை மிக்க சரஸ்வதி மகால் நுாலகம் பற்றி பார்ப்போம்...
சோழர் காலத்தில், தமிழ் இலக்கியத்தில் அமர காவியங்கள் எழுதப்பட்டன. பின், அந்த பகுதியை நாயக்கர்கள் பிடித்தனர். அந்த பரம்பரையில் வந்த மன்னர்கள் கல்வி, கலை, ஓவியம், விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்தனர். சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தனர். அவர்கள் இயற்றிய நுால்கள் சரஸ்வதி மகால் நுாலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
பின், மராட்டிய மன்னர்கள் தஞ்சை பகுதியில் ஆட்சிக்கு வந்தனர். சரஸ்வதி மகால் நுாலக வளர்ச்சியில் தீவிர பங்காற்றினர். அதில் முதன்மையாக விளங்கியவர் மன்னர் சரபோஜி. ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி உட்பட, பல மொழிகளை கற்றவர். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முயற்சியால் இமயமலை அழகை சித்தரிக்கும் ஓவியங்கள், இங்கு வைக்கப்பட்டுள்ளன.
மராட்டிய மொழியில் எழுதப்பட்ட மகாபாரதமும், பாகவதமும் உள்ளன. இவை ஏட்டில் எழுதப்பட்டுள்ளன. மருத்துவம், ஜோதிடம் பற்றிய நுால்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சரஸ்வதி மகால் நுாலகம் அரசுடமையாக்கப்பட்டது. அங்கு, பல மொழிகளில் எழுதப்பட்ட காகித குறிப்புகள், ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய வகை புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த, நந்திநாகரி என்ற எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்ப ராமாயணம், திருக்குறள் நுால்கள் உள்ளன.
குழந்தைகளே... அறிவு களஞ்சியமாக விளங்கும் சரஸ்வதி மகால் நுாலகத்தை போற்றுவோம். அறிவுச்சுடர் அணையாமல் பாதுகாப்போம்!
- என்.சுந்தரராஜன்