PUBLISHED ON : நவ 07, 2014

ஆற்காடு என்னும் ஊரில் ரஞ்சன் என்ற தொழிலாளி வசித்து வந்தான். அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளோடு ஊருக்கு வெளியே அவன் முன்னோர்கள் அவனுக்கு விட்டுச் சென்ற சிறிய அளவு நிலத்தில் ஒரு சிறு குடிசை கட்டிக் கொண்டு வசித்து வந்தான்.
சில நாட்களில் வேலையேதும் கிடைக்காமல் கஷ்டப்படுவான். வேலை கிடைக்காத நாட்களில் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, அவன் ஊரில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும், வேலை கிடைத்தவுடன் கடனை திருப்பிக் கொடுத்தும், தன் காலத்தை கடத்தி வந்தான்.
ஒருசமயம் அவன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், தன் மனைவியின் அருகிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதனால் அவனால் வேலைக்குப் போக முடியவில்லை.
வேலைக்குச் செல்லாததினால் குடும்ப செலவுக்குப் பணம் கிடைக்காமல் கஷ்டப்பட்டான். ஊரில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினான். இதனால், ரஞ்சனுக்கு கடன் சுமை அதிகமாகி விட்டது. கடன் கொடுத்தவர்கள் கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்தனர். ரஞ்சன் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். அப்படியும் தன்னால் முடிந்த அளவு வேலைக்குச் சென்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்பச் செலவு போக, மீதி இருந்த பணத்தில் கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வந்தான்.
ரஞ்சனுக்கு கடன் கொடுத்த கதிரேசன் என்பவன் நிறைய தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தான். அவன் விடியற்காலையிலேயே ரஞ்சன் வீட்டிற்குச் சென்று உடனே கடனைக் கொடுக்கும்படி வற்புறுத்துவான். ரஞ்சனும் சளைக்காமல், ஏதாவது ஒரு பதில் சொல்லி தப்பித்துக் கொள்வான்.
ரஞ்சனுக்கு கதிரேசனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது. அவன் போதா காலம், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கத் தேவையான பணம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ரஞ்சனிடம் கடன் கொடுத்தவர்கள் ரஞ்சனின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவன் கொடுக்கும் போது கொடுக்கட்டும் என்று சும்மா இருந்து விட்டனர். ஆனால், கதிரேசன் மட்டும் எப்படியாவது ரஞ்சனிடம் இருந்து கடனை வசூலித்து விட வேண்டும் என்று ரஞ்சன் செல்லும் இடம் எல்லாம் அவன் பின்னாலேயே சென்று வந்தான்.
ஒருநாள் ரஞ்சன் முடி திருத்திக் கொள்வதற்காக முடி திருத்துபவரிடம் சென்று கொண்டிருந்தான். ரஞ்சனை தூரத்தில் இருந்து பார்த்து விட்ட கதிரேசன் ரஞ்சனை துரத்தியபடி பின்னாலேயே வந்தான். முடி திருத்துபவரிடம், முடியை திருத்திக் கொள்ள நிறைய பேர் காத்துக் கொண்டிருந்ததால், ரஞ்சன் அவர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தான்.
கதிரேசன் முடி திருத்துபவரின் வீட்டு வாசலில் அமர்ந் திருந்த ரஞ்சனை கோபப் பார்வையில் பார்த்து விட்டு, ''என்னிடம் வாங்கிய கடனை உடனே கொடுத்துவிடு... உன்னிடம் பணம் வாங்காமல் நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன்,'' என்றான்.
''கதிரேசா! நான் இப்போது முடி திருத்திக் கொள்ள வந்துள்ளேன். முடி திருத்திக் கொண்டதும் உன் கடனை அடைத்து விடுகிறேன்,'' என்று கூறினான்.
கதிரேசன், ரஞ்சன் கூறியதை ஒத்துக் கொள்ளவில்லை.
''அவர் உனக்கு முடி திருத்தும் வரை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. இப்போதே நான் உனக்குக் கொடுத்த கடனை எனக்குத் திருப்பிக் கொடு,'' என்று கட்டாயப் படுத்தினான்.
மீண்டும் ஒருமுறை ரஞ்சன் கதிரேசனைப் பார்த்து, ''முடி திருத்துபவர் முடி திருத்தி முடித்ததும் கடனைக் கொடுத்து விடுகிறேன்,'' என்று கூறினான்.
''நீ இப்படித்தான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பித்து விடுகிறாய். இந்த முறை என்னை ஏமாற்ற முடியாது. நீ முடி திருத்திக் கொண்ட பிறகு பணம் தருவாய் என்பதை நான் எப்படி நம்புவது?'' என்று கேட்டான் கதிரேசன்.
''நீங்கள் என்னை நம்பவில்லையென்றால் எனக்கு முடி திருத்தப்போகும் இவரே சாட்சியாக இருக்கட்டும். அவரைச் சாட்சியாக வைத்து நான் முடி திருத்திக் கொண்டதும் உன் கடனை கட்டாயம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று எழுத்து மூலமாக எழுதிக் கொடுக்கவும் தயாராக உள்ளேன்,'' என்றான்.
''முடி திருத்துபவர் சாட்சியாக இருந்தால் போதும். நீ எதுவும் எழுதிக் கொடுக்க வேண்டாம்,'' என்று கூறினான் கதிரேசன்.
முடி திருத்துபவர் ரஞ்சனுக்கு முன்னால் இருந்த அனைவருக்கும் முடி திருத்தி முடித்து விட்டு, ரஞ்சனை முடி திருத்துவதற்கு அழைத்தார்.
கதிரேசன், ரஞ்சனைச் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருந்தான். மிகவும் நல்லவனாக இதுவரை வாழ்ந்து வந்த ரஞ்சனும், கதிரேசனின் தொல்லை தாங்க முடியாமல், அவனுக்கு பாடம் புகட்ட நினைத்தான்.
முடி திருத்துபவரிடம் சென்ற ரஞ்சன், ''ஐயா, நான் இப்போது உங்களிடம் முடி திருத்திக் கொண்டால் உங்களை சாட்சியாக வைத்து, நான் கூறியபடி கதிரேசனுக்கு பணம் தர வேண்டும். நான் இப்போது முடி திருத்திக் கொள்ள போவதில்லை. அதனால் கதிரேசனுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒப்பந்தபடி, முடி திருத்திக் கொண்ட பிறகு தானே பணம் தர வேண்டும். முடி திருத்திக் கொள்ளாவிட்டால், பணம் தர வேண்டிய அவசியம் ஏற்படாது. அதனால் நான் எப்போது தங்களிடம் வந்து முடிதிருத்திக் கொள்கிறேனோ அப்போது கண்டிப்பாக கதிரேசனுக்கு பணம் கொடுத்து விடுகிறேன். அதுவரை நான் முடி திருத்திக் கொள்ளாமல் முடியை வளர்த்துக் கொள்கிறேன், என்று அவரிடம் கூறியபடி கதிரேசனைப் பார்த்து, ''நீ, நான் இவரிடம் வந்து முடி திருத்கிக் கொள்ளும் வரை இங்கேயே காத்துக் கொண்டிரு... நான் முடிதிருத்திக் கொள்ள வருவதற்கு ஒரு மாதமும் ஆகலாம் அல்லது ஓரிரு ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் நீ நம் ஒப்பந்தப்படி நான் முடிதிருத்திக் கொள்ளும்வரை முடி திருத்துபவரின் வீட்டு வாசலில் எனக்காகக் காத்திரு,'' என்று கூறியபடி அங்கிருந்து வேகமாகச் சென்று விட்டான்.
ரஞ்சன் அன்று முதல் தன் முடியை நீளமாக வளர்க்கத் தொடங்கி விட்டான். கதிரேசனும் ரஞ்சனை முடி திருத்துபவரின் வீட்டு வாசலில் எதிர்பார்த்து எதிர்பார்த்துச் சலிப்படைந்து, கொடுத்த கடனை மறந்து விட்டான்.
***
