PUBLISHED ON : நவ 07, 2014

ஈராக் அதிபர் சதாம் ஹுசேன் ஒரு இரும்பு மனிதராக இருந்தாலும், அவர் கதிகலங்கிப் போன ஒரு சம்பவமும் நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து வேறு பல நாடுகளையும் கவலையின்றி பகைத்து வந்த சதாம், தன் சொந்த வீட்டிலேயே உண்டான பூகம்பத்தால் திகைத்து நின்றார்.
சதாமுக்கு ஒரு மகன், இரு மகள்கள். அவர்களில் மூத்த மாப்பிளையின் பெயர் ஹுசேன் கமேல். அவர் மீது சதாமுக்கு தனிப்பிரியம். தன் மாமனாரின் பாதுகாவலராக அரசுப் பணியில் நுழைந்த கமேல், விரைவிலேயே ஈராக்கின் ஆயுதக் கிடங்கை நிர்ணயிக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார். ஈராக்கின் வட பகுதியில் அடிக்கடி புரட்சிக் கொடி பிடித்த குர்த் இனத்தவரை கமேல் அடக்கி வைக்க, மாமனார் மெச்சும் மாப்பிள்ளையாக மாறினார். தனது அத்தனை அரசியல் பிரச்னைகளிலும் இந்த மாப்பிள்ளையைக் கலந்தாலோசித்தார் சதாம்.
நாளடைவில் கமேலை ஈராக்கின் தொழில் மந்திரி ஆக்கினார் சதாம் ஹுசேன். 'நவீன ஈராக்கின் ராணுவ சிற்பி' என்றே கமேல் அழைக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சதாம் ஹுசேனின் இரு மகள்களும், மாப்பிள்ளைகளும் (கமேல் உட்பட) ஈராக்கிலிருந்து வெளியேறி பக்கத்து நாடான ஜோர்டானில் தஞ்சம் கேட்டனர்.
'சதாம் ஹுசேனின் ஆட்சியில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை' என்று இரு மாப்பிள்ளைகளும் ஒரே குரலில் கூறினர்.
சதாமுக்கு இது பலத்த அடி. நான்கு நெருங்கிய உறவினர் கள் எதிரிகளாகிவிட்டது மட்டுமல்ல, யாரும் அறியாமல் எப்படி இவர்கள் ஈராக்கின் எல்லையைக் கடந்தனர் என்ற திகைப்பும் முக்கிய காரணம். காரணம், சட்டத்தை மீறி நாட்டு எல்லையைக் கடப்பவர்களுக்கு மரண தண்டனை உண்டு அங்கே.
அந்த நால்வரும் நாட்டை விட்டு ஓடியதற்கு முக்கிய காரணம் சதாம் ஹுசேனின் மகன்தான். மருமகனுக்கு அநியாயமாக சலுகைகள் கொடுக் கிறார் அப்பா என்ற எண்ணம் ஏற்கெனவே அவருக்கு இருந்தது. அடிக்கடி தன் எதிரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அவருக்குப் பழக்கமான ஒன்றுதான்.
இதையெல்லாம் கவனித்த கமேலுக்கு அச்சம் பிறந்தது. தொடர்ந்து ஈராக்கில் தங்குவது தன் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தார். இதே போன்ற அச்சம் சதாமின் மற்றொரு மாப்பிள்ளைக்கும் ஏற்பட, இரு சகலைகளும் தங்கள் மனைவியருடன் ஈராக்கிலிருந்து வெளியேற முடிவெடுத்தனர். பல் கேரியாவில் நடக்கவிருக்கும் ஒரு மாநாட்டுக்காக தொழில்துறை அமைச்சராக தான் செல்லப் போவதாகச் செய்தி பரப்பினார் ஹுசேன் கமேல். சதாமின் இரு மகள் களும் வரவிருக்கும் முகமது நபியின் பிறந்த நாளை எங்கள் கணவர்களோடு சேர்ந்துக் கொண்டாட எண்ணமிட்டிருந்தோம் என்று கூறினர். யாருக்கும் சந்தேகம் எழவில்லை. ஆக எளிதாகத் தப்பிவிட்டனர்.
இந்த செய்தியை அறிந்ததும் தன்னுடைய ராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்த சதாம் ஹுசேன், சந்தேகப் பட்டியலில் இருப்பவர் களைக் களையெடுத்தார்.
பிறகு ஜோர்டானில் உள்ள தனது மகள்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதினார்.
''எனது அன்பு மகள்களே, உடனே மீண்டும் ஈராக்குக்கு உங்கள் கணவருடன் வாருங்கள். பழையனவற்றை கழித்து புதியனவற்றை நிர்மாணிப்போம். உங்கள் கணவர்களுக்கு எங்களது முழு ஆதரவு உண்டு. உங்கள் சிறுபிள்ளைத்தனத்தை மன்னித்து விட்டேன்,'' என்றது அந்த அறிவிப்பு.
மனம் மாறிவிட்டனர் இருமகள்களும். ஈராக்குக்கே திரும்பிச் செல்லலாம் என்று முடிவெடுத்தனர். தங்களது கணவர்களையும் கட்டாயப்படுத்தி ஈராக்குக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. இரு மாப்பிள்ளைகள் மீதும் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. கிலியின் காரணமாகத்தான் ஜோர்டானுக்குப் போனாமே தவிர, ஈராக்குக்கு எதிரான செயலாக எண்ணி எதுவும் செய்யவில்லை என்றார் ஹுசேன் கமேல்.
சதாம் ஹுசேனின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த அந்த ராணுவ நீதிமன்றம் வேறு எப்படி இயங்கியிருக்க முடியும்? இரு மாப்பிள்ளைகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் சதாம் ஹுசேனின் மகள்கள் மீது ஒப்புக்குக்கூட ஒரு விசாரணை நடத்தவில்லை என்பதுதான் உண்மை.
***
