PUBLISHED ON : நவ 07, 2014

ஹரீஷ் பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஹரீஷின் விலை உயர்ந்த பேனா தவறுதலாக, அந்த விளையாட்டு மைதானத்தில் விழுந்தது.
ஹரீஷின் பிறந்தநாள் பரிசாக அவனுடைய மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து, அவனுக்கு வழங்கியிருந்தார்.
ஹரீஷ் வீட்டிற்கு வந்த பின்புதான், அவனுடைய பேனா தொலைந்து போனது அவனுக்குத் தெரிந்தது. அவன் மிகவும் மன வேதனை அடைந்தான். அது விலைமதிக்க முடியாத பொருளாக இருந்தபோதும், அதன் பின்னணியில் இருந்த அவனுடைய மாமாவின் அன்பு அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது.
ஹரீஷின் பள்ளித்தோழன் குமார், அந்த விலை மதிக்க முடியாத பேனாவை அந்த விளையாட்டு மைதானத்திலிருந்து கண்டெடுத்தான். ஹரீஷ் அந்தப் பேனாவை வைத்திருந்த போது பள்ளித் தோழனான குமாருக்கு அதன்மேல் ஆசை இருந்தது.
அதை எப்படியாவது தான் திருடி விட வேண்டும் என எண்ணியிருந்தான். ஆனால், இப்போது அதுவே அவனுடைய கையில் அகப்பட்டுக் கொண்டது. அதை எடுத்து தன் வீட்டிலிருந்த ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்திருந்ததான்.
ஹரீஷ் விரைந்து சென்று தான் விளையாடிய இடங்களிலெல்லாம் தன் பேனாவைத் தேடினான். அது அங்கு இருந்தால்தானே அவனுக்குக் கிடைப்பதற்கு? அதைத்தான் குமார் எடுத்து ஒளித்து வைத்து விட்டானே? அவனுக்கு எப்படி அது தெரிய போகுது.
பேனா கிடைக்காத வேதனையில் ஹரீஷ் மனவருத்தத்துடன் மீண்டும் வீடு வந்து சேர்ந்தான்.
பேனாவைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருந்த குமாருக்கு மனசாட்சி உறுத்தியது. திருடுவது என்பது இயல்புக்கு மாறான செயல். அதைச் செய்யக்கூடாது. நானே ஹரீஷ் பையிலிருந்து பேனாவை எடுக்கவில்லையென்றாலும் கூட, நான் கீழே கண்டெடுத்த பேனா ஹரீஷ் பேனா என்பதை அவன் நன்றாகவே அறிவான். அவ்வாறு இருக்கும் போது அதனை ஹரீஷிடம் ஒப்படைப்பதுதான் முறை. அதனைத் தானே வைத்திருப்பது கூட திருட்டுதான். இதை அவனுடைய மனசாட்சி தெளிவாக அவனுக்கு உரைத்தது. அவனது மனம்,'மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும்போது அவனிடம் ஒப்படைத்துவிடு' என்று அறிவுரை கூறியது.
மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு வந்த ஹரீஷிடம் சென்றான் குமார். ''ஹரீஷ் உன்னுடைய மாமா உனக்கு அன்பாகப் பரிசளித்த விலை உயர்ந்த பேனாவை நான் விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்தேன். அதை உடனே உன்னிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதன் மீது இருந்த ஆசையால் அதை நான் உன்னிடம் ஒப்படைக்கவில்லை. உரிய பொருளை உரியவரிடம் ஒப்படைக்காமல் இருப்பது கூட திருட்டுத்தான் என்பதை மனசாட்சி என்னை உறுத்தியது. அதனால்தான் இதை உன்னிடம் ஒப்படைக்க வந்தேன்,'' என்று கூறி, அந்தப் பேனாவை கொடுத்தான். தன் பேனா கிடைத்த மகிழ்ச்சியில் ஹரீஷ் அப்படியே குமாரை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
''நீ தாண்டா என்னுடைய உண்மையான நண்பன்!'' என்று அவனைப் பாராட்டினான்.
குட்டீஸ்! நல்ல பழக்கங்கள் அல்லாத செயல்களை செய்யக்கூடாது. திருடுவது நல்லபழக்கம் அல்ல. எனவே அதைச் செய்யக்கூடாது!
***
