PUBLISHED ON : பிப் 26, 2022

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1978ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
வகுப்பில் என் அருகே அமர்ந்திருந்தாள் தோழி இந்துமதி; ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்; நன்றாக படிப்பாள். பள்ளிக் கட்டணம் செலுத்த பணம் இன்றி திண்டாடிவந்தாள். சிரமத்தைப் போக்க அவளே ஒரு வழி கண்டுபிடித்தாள். அப்போது, ஒரு கடலை மிட்டாயின் சில்லறை விலை, ஐந்து காசுகள். ஒரு பாக்கெட்டாக வாங்கினால், 1 ரூபாய் 50 காசுகள். அதை பிரித்து விற்றால், லாபமாக, 30 காசுகள் கிடைக்கும்.
பாக்கெட்டாக வாங்கி வந்து, மதிய உணவு இடைவேளையில், மாணவியரிடம் விற்பாள் தோழி. கிடைக்கும் லாபத்தை உண்டியலில் சேமித்து உரிய நேரத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தினாள். பேனா, பென்சில், நோட்டுப்புத்தகமும் வாங்கிக் கொண்டாள். அவள் சிரமம் அகன்றது; பெற்றோரின் சுமையும் குறைந்தது. இப்படியாக சமாளித்து படிப்பை தொடர்ந்துவந்தாள்.
இதை கவனித்த தமிழாசிரியை மணிமேகலை, 'இது ஒரு வகையில் சிறந்த உழைப்பு; எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்ற மன உறுதியைக் காட்டுகிறது... படிப்பின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது உன் செயல்; வாழ்க்கையில் எல்லா வகையிலும் சிறப்படைவாய்...' என வாழ்த்தினார். கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினோம். எனக்கு, 58 வயதாகிறது; கடலை மிட்டாய் சாப்பிடும் போதெல்லாம், அந்த தோழியின் கடின உழைப்பு கண்முன் காட்சியாக விரிகிறது.
- இந்திராணி தங்கவேல், சென்னை.
தொடர்புக்கு: 94454 57305
