PUBLISHED ON : ஜூலை 04, 2020

திருவாரூர் மாவட்டம், ராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2004ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
கணித ஆசிரியர் ஆரோக்கியராஜ், மாதம் இருமுறை தேர்வு நடத்துவார். அன்றாடம் உலக செய்திகளை கூறி ஆர்வமூட்டுவார். ஒரு நாள் வீட்டுப்பாடமாக, அன்றைய செய்திகளை தொகுத்து வகுப்பில் வாசிக்கச் சொன்னார்.
அதன்படி, குறிப்பெடுத்தேன். அவற்றை, இரண்டு மணி நேரம் வாசித்து நன்றாக பயிற்சி செய்தேன்.
மறுநாள் வகுப்பில், தெளிவான உச்சரிப்புடன் வாசித்து பாராட்டு பெற்றேன். அதை, அன்றாடம் நிகழ்த்தும் வாய்ப்பையும் பெற்றேன்.
அந்த பழக்கம், மிகப்பெரும் வெற்றியை தரும் என நம்பிக்கையூட்டினார் ஆசிரியர்.
அதன் பயனாக, மாவட்ட அளவில் நடந்த வினாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்தேன். அதை அறிந்து நெகிழ்ந்தவர், 'வெற்றி பயணம் தொடரட்டும்...' என வாழ்த்தினார்.
எனக்கு, 27 வயதாகிறது; வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறேன். சிறப்பான வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளம் அமைத்த ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.
- ரா.குகன், திருவாரூர்.
தொடர்புக்கு: 84892 58818
