தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆறுவது சினம்!

ஆறுவது சினம்!

ஆறுவது சினம்!


PUBLISHED ON : ஆக 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணனுக்கு பிறந்த நாள். அதிகாலை எழுந்ததுமே மகிழ்ச்சி வானில் மிதந்தது மனம். ஆசை மேலிட, 'உறுதியளித்திருந்தபடி, மிதிவண்டி வாங்கியிருப்பாரா அப்பா' என்ற கேள்வி விரிந்தது. அவன் சேமித்திருந்த தொகை, விரும்பிய மிதிவண்டியை வாங்க போதுமானதாக இல்லை.

பணிவுமிக்க சிந்தனையுடன் பெற்றோரை வணங்கினான்.

அன்புடன் வாழ்த்தி, தங்க வண்ணத்தில் சிறு பெட்டியை பரிசாக தந்தனர் பெற்றோர்.

ஆவலுடன் பிரித்தான்.

புத்தம் புதிய மிதிவண்டி சாவி இருந்தது.

''வாவ்...''

ஆனந்த கூச்சலிட்டபடி, ''அப்பா... அப்பாவே தான்...'' என, தழு தழுத்தபடி திணறினான்.

மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வண்ண மிதிவண்டி, முற்றத்தில் கம்பீரமாக நின்றது. ஆர்வத்துடன் தொட்டுப்பார்த்தான். பெடலை மிதித்து ஓட்டினான்.

அவன் மனம், பின்னோக்கி பறந்தது...

ஏழாம் வகுப்பு படிக்கிறான் கண்ணன்; சில மாதங்களுக்கு முன், வகுப்பு நண்பன் புவனேசுக்கு பிறந்தநாள். அன்று புதிய மிதிவண்டியில் பள்ளிக்கு வந்தான் அவன்; பெருமையில் உடன் பயிலும் மாணவர்களை வம்புக்கு இழுத்தான்.

அன்று மாலை தந்தையிடம், 'எனக்கு ஒரு மிதிவண்டி வாங்கி தாங்க...' என்றான் கண்ணன்.

'என்ன... திடீரென கேட்குற...'

'கூடப் படிக்கிற புவனேசுக்கு, அவங்க அப்பா மிதிவண்டி வாங்கி தந்துருக்காரு. நீங்களும் எனக்கு வாங்கித் தரலாமே...' என, அடம்பிடித்தான்.

பலவிதமாக சமாதானம் சொல்லியும், பிடிவாதமாக அழுது புலம்பினான். ஆத்திரம் தலைக்கேற தந்தையின் கண்ணாடியை துாக்கி வீசினான். வேகத்தில், 'டிவி' நாசமானது. துகள்களாக சிதறி விழுந்தது கண்ணாடி.

ஒரு நொடி தான். ஆத்திரத்தில் அறிவிழந்தான்.

சுய உணர்வு பெற்று விபரீத செயலை எண்ணி தவித்தான்; அதிர்ச்சியில் சிலையானான் கண்ணன்.

'மகன் மீது அதிக பாசம் காட்டியது தவறோ' என நொந்தார் தந்தை. 'விதம் விதமான விளையாட்டு பொருட்களை வாங்கி தந்தது முறையற்றதோ' என புழுங்கினார். விளையாட்டை ரசித்தது தவறோ என்று கூட எண்ணத் துவங்கினார். அளவுக்கு மீறிய பாசம், முன்கோபத்தையும், பிடிவாதத்தையும் அல்லவா வளர்த்துள்ளது. மனம் தவியாய் தவித்தது.

இந்த துர்குணத்தை சீர் செய்வது குறித்து யோசித்தார். பின், எதுவும் சொல்லாமல் மனம் வெதும்பி வெளியேறினார். அவர் வெகுநேரம் வீடு திரும்பாததால் கலங்கி நின்றான் கண்ணன். அம்மா பலவிதமாக கண்டித்து கூறிய அறிவுரை மனதில் பதியவில்லை.

வெகு நேரத்துக்கு பின், திரும்பிய அப்பாவின் கையில், அழகிய உண்டியல் இருந்தது. எழில்மிக்க சிறு பெட்டிகள் இரண்டும் இருந்தன.

சற்றே பயத்துடன், 'அப்பா... மன்னித்து விடுங்க...' என்றான்.

மென்மையாக சிரித்தவர், 'உன் கோபத்தால், என் கண்ணாடி வீணாகி விட்டது; அதிலும் என் சிறப்பான பணியை பாராட்டி, பணித் தலைவர் தந்த பரிசு அது. விலை மதிப்பற்றது...' என்றார்.

'அதுதான், மன்னிப்பு கேட்டுவிட்டேன் அல்லவா...'

'மன்னிப்பு கேட்டுட்டா, உடைஞ்சது சரியாகி விடுமா... அந்த பொருள் திரும்ப கிடைக்குமா... இங்கே பார்... இந்த பெட்டிகளில், நிறைய தங்க நிற காசும், வெள்ளி வண்ண காசும் இருக்கு. தினமும் செய்கிற நல்ல செயலுக்கு, இதிலிருந்து ஒரு தங்க நாணயம் தருவாங்க அம்மா. தவறான செயலுக்கு வெள்ளி நாணயம் கிடைக்கும்... தினமும் தங்க நாணயங்களை சேர்க்க முயற்சி செய்...

'ஈட்டும் ஒவ்வொரு தங்க நாணயத்துக்கும் மதிப்பாக, உன் உண்டியலில், ஐந்து ரூபாய் போடப்படும். தவறான செயலால் கிடைக்கும் வெள்ளி நாணயத்துக்கு ஈடாக, உன் உண்டியலில் இருந்து, ஆறு ரூபாய் எடுக்கப்படும். நற்செயலால் சேமிப்பு பெருகும். அதன் மூலம், உன் ஆசை மிதிவண்டியை வாங்க முயற்சி செய்...'

கண்டிப்பும், அன்பும் கலந்த குரலில் அப்பா பேசியது, கண்ணன் மனதில் ஆழமாக பதிந்தது. நல்ல பண்புகளை வளர்க்க உறுதி பூண்டான்.

முதலில், கோபத்தை தணிக்க முயன்றான். அது சுலபமாக இல்லை. மிகவும் சிரமப்பட்டான். வேதாத்திரி சுவாமிகள் எழுதிய, 'சினம் தவிர்த்தல்' என்ற எளிய புத்தகம் வீட்டில் இருந்தது. அதை வாசித்தான். அதில் குறிப்பிட்டிருந்த பயிற்சிகளை மிகவும் ஈடுபாட்டுடன் மேற்கொண்டான்.

தொடர் பயிற்சியின் மூலம் தணிந்தது சினம். முயற்சி கைகூடியது. பண்பு மிக்கச் செயல்கள் தங்க காசுகளை பெற்றுத்தந்தன. அதுவே, புதிய மிதிவண்டியாக மாறி அவன் முன் நிற்கிறது.

''என்ன கண்ணா, என்ன யோசனை...''

அப்பாவின் குரல் கேட்டு நினைவலைகளில் இருந்து மீண்டான்.

''மிதிவண்டி சூப்பரா இருக்குப்பா...''

''உன் பண்பு தான் அதை பெற்றுத்தந்தது...''

''உங்க அன்பும், கண்டிப்பும், வழிமுறையும் தான் காரணம்...'' என நெகிழ்ந்து நன்றி தெரிவித்தான்.

மொட்டுகளே... கோபத்தை கைவிடுவதைத் தான் அவ்வை பாட்டி, 'ஆறுவது சினம்' என்று அழகிய தமிழில் அறிவுரைத்துள்ளார். நற்பண்புகளை வளர்ப்பதன் மூலம் கோபம் மறையும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

பா.செண்பகவல்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us