PUBLISHED ON : மார் 19, 2022

நாமக்கல் மாவட்டம், புதுப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1999ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
பள்ளி வளாகத்தில் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்; என் கைப்பட்டு அவளது சீருடை சிறிது கிழிந்து விட்டது. பயத்துடன் மன்னிப்பு கேட்டேன். அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மறுநாள் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் அழைத்தார். அவரது அறைக்கு சென்றேன். கிழிந்த சீருடையை கையில் ஏந்திய தந்தையுடன் நின்று கொண்டிருந்தாள் தோழி.
விசாரணையில், 'தவறுதலாக நடந்து விட்டது... மன்னித்து விடுங்கள் ஐயா...' என்றேன்.
அறிவுரை கூறி அனுப்பினார். வகுப்புக்கு வந்ததும், 'அப்பாவிடம் நடந்ததைக் கூறினேன்; இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை...' என வருந்தினாள், தோழி.
அதை மறந்து, படிப்பில் கவனம் செலுத்தியபடி நட்பையும் பேணிவந்தேன்.
சில நாட்களுக்கு பின், புத்தாடை அணிந்து, ஊர் திருவிழாவுக்கு தோழி வீடு வழியாக சென்று கொண்டிருந்தேன். வாசலில் அமர்ந்திருந்த தோழியின் அம்மா, 'என் மகள் சீருடையை கிழித்து விட்டு, நீ மட்டும் புது ஆடை அணிகிறாயா...' என கோபத்துடன் கேட்டார். வாயடைத்து நின்றேன்; வருத்தமாக இருந்தது.
பின், தோழியும் சரியாக பேசவில்லை. நட்பில் விரிசல் ஏற்பட்டது. அடுத்த கல்வி ஆண்டில் வேறு பள்ளிக்கு சென்று விட்டாள். தொடர்பு விட்டுபோனது.
தற்போது, என் வயது, 35; அந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றும் அந்த தோழியை மனம் தேடிக் கொண்டே இருக்கிறது. சிறு பிள்ளைகள் அறியாமல் செய்யும் தவறை மன்னிக்கும் பாடத்தை, இந்த சம்பவத்தால் கற்றுக் கொண்டேன்.
- ந.தென்றல், மதுரை.
