PUBLISHED ON : மார் 19, 2022

திருப்பூர், நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 9ம் வகுப்பு படித்தபோது கால்கள் வலுவின்றி அவதிப்பட்டேன். அந்த காலகட்டத்தில் போலியோ நோய் தாக்குதல் தீவிரமாக இருந்ததால் பயந்திருந்தனர், பெற்றோர். உணவில் பால், முட்டை அதிகம் தந்தனர்.
மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் அறிந்து பயிற்சி கொடுப்பார், விளையாட்டு ஆசிரியர் ஆறுமுகம். மிகவும் கண்டிப்பானவர். ஒருநாள் தாமதமாக பள்ளிக்கு சென்ற எனக்கு, முட்டி போடும் தண்டனை தந்தார். நிற்க முடியாமல் சாய்ந்து விழுந்த என்னை, பிரம்பால் அடித்து, 'என்னாச்சு...' என்று கேட்டார்.
கால் பலவீனத்தை கூறினேன். கண் கலங்கியபடி ஆறுதல் கூறியவர், கால்பந்து விளையாட்டில் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்தார். தினமும், 100 முதல், 400 மீட்டர் வரை தொடர் ஓட்ட பயிற்சி கொடுத்து நம்பிக்கையூட்டினார். பின், கால்பந்து சப் ஜூனியர் டீமில் சேர்ந்து திறனுடன் விளையாடினேன்; நிறைய கோப்பைகள் வென்றேன்.
என் வயது, 68; இன்றும் என் கால் வலுவை இளம் வீரர்கள் வியக்கின்றனர். அதை கேட்கும் போதெல்லாம், அந்த ஆசிரியரின் பொட்டு வைத்த முகம் மனக்கண்ணில் தோன்றுகிறது.
- சந்திரசேகர சுப்ரமணியம், சென்னை.
