PUBLISHED ON : அக் 25, 2019

விழுப்புரம் மாவட்டம், தகடி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 2000ல், 4ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது...
வகுப்பு ஆசிரியர் ரமேஷ் ஒருநாள், 'முக்கிய வேலையாக செல்கிறேன்; திரும்பும் வரை அமைதியாக படிக்க வேண்டும்...' என்று கூறி வெளியேறினார்.
மாணவத் தலைவன், அரட்டையடித்தவர் பெயரை எல்லாம், கரும்பலகையில் எழுதினான். என் பெயருக்கு நேராக, 'அடங்கவில்லை' என, எழுதி இருந்தான். ஆசிரியர் திரும்பியதும் அடி கிடைத்தது.
இதுபோல், கரும்பலகையில் என் பெயர் வருவதும், அடி வாங்குவதும் அடிக்கடி நடந்தது.
பள்ளி ஆண்டு விழா வந்தது. போட்டிகளுக்கு மாணவர்களை சேர்த்தனர். என் பெயரை, பேச்சுப் போட்டியில் சேர்த்துள்ளதாக கூறினார் ஆசிரியர்.
பயத்துடன், 'நான் எப்படி ஐயா பேசுவேன்...' என்றேன். சிரித்தபடியே, 'திறமை இருப்பதால் தான், வகுப்பில் அடிக்கடி பேசி, அடி வாங்குகிறாய்... உன்னால் முடியும்...' என்று உற்சாகப்படுத்தினார்.
எனக்கு, என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரிடம், என் ஐயத்தை கேட்டேன்.
'யாரும் எழுதி தந்ததாக இருக்க கூடாது; உன் சொந்த கருத்தாக இருக்கட்டும்...' என்று அறிவுரைத்தார்.
அன்று தான் சிந்திக்க துவங்கினேன். பின், கல்லுாரியில் படிப்பை முடிக்கும் வரை, பேச்சுப் போட்டிகளில் பரிசை தட்டுவதை வழக்கமாக்கி கொண்டேன்.
அப்படி தான் முளைக்க துவங்கியது என் கற்பனை விதை. எனக்கு, 27 வயதாகிறது; பாடல், கவிதைகள் எழுதி வருகிறேன். என் திறமையை துாண்டிய, அந்த ஆசிரியருக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
- கே.மகாலட்சுமி, சென்னை.
