PUBLISHED ON : அக் 09, 2021

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவம்...
அப்துல் கலாமும், ராமநாதனும் நெருங்கிய நண்பர்கள்; இருவரும் வகுப்பறையில் ஒன்றாக அமர்வது வழக்கம்.
ராமநாதன் உச்சிக்குடுமி வைத்திருந்தார்; குல்லா அணிந்திருந்தார் கலாம்.
இதைக் கண்ட புதிய ஆசிரியர், 'உச்சிக் குடுமியும், குல்லாவும் ஒன்றாக அமருவதா' எனக் கொதித்தார். கலாமை கடைசி பெஞ்சுக்கு மாற்றினார்.
இதை அறிந்தார் ராமநாதன் தந்தை லட்சுமண சாஸ்திரி. அந்த புதிய ஆசிரியரை வரவழைத்து, 'பிஞ்சு மனதில் துவேஷத்தையும், விஷத்தையும் விதைக்கலாமா; இது தவறு...' என கடுமையாக கண்டித்தார்.
தவறை உணர்ந்த ஆசிரியர், ஒன்றாக அமர வைத்து நட்பு தொடர வழி வகுத்தார்.
கலாம் மீது அளவற்ற அன்பு உள்ளவர், அறிவியல் ஆசிரியர் சிவசுப்ரமணிய ஐயர். அவரது அறிவியல் திறமையை ஊக்குவித்தவர்.
ஒரு நாள், கலாமை வீட்டிற்கு சாப்பிட அழைத்து சென்றார், சிவசுப்ரமணிய ஐயர். ஆனால், அவரது மனைவி உணவு பரிமாற மறுத்து விட்டார்; அதனால், ஆசிரியரே பரிமாறினார்.
அடுத்த வாரம் மீண்டும் அழைத்துச் சென்றார்.
என்ன ஆச்சர்யம்...
இந்தமுறை ஆசிரியரின் மனைவியே, கலாமுக்கு உணவு பரிமாறினார்.
படிக்கும் காலத்திலேயே, மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாக திகழ்ந்தார் கலாம். வாழும் காலம் வரை அதை கடைப்பிடித்தார்; இந்திய குடியரசு தலைவராக உயர்ந்தார்.
ராமேஸ்வரத்தில், அக்டோபர் ௧௫, 1931ல் பிறந்தார் கலாம்; இந்திய வரைபடத்தில் உச்சியில் இருக்கும் மேகாலயா மாநிலம், சில்லாங் நகரில், ஜூலை ௨௭, 2015ல், காலமானார்.
குழந்தைகளே... ஜாதி, மத, நிற பேதம் தவிர்த்து, நல்ல மனிதர்களாக பழக வேண்டும்.
- மல்லிகா அன்பழகன்
