தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செய்யும் தொழிலே தெய்வம்!

செய்யும் தொழிலே தெய்வம்!

செய்யும் தொழிலே தெய்வம்!


PUBLISHED ON : அக் 09, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படுவது சரஸ்வதிபூஜை.

அன்றைய தினம் வீடு, பணியிடம், அலுவலகத்தை வண்ணமயமாக அலங்கரித்து, பூஜை செய்து வழிபடுவது, வழக்கமாக உள்ளது!

வழிபாடு துவங்கும் முன், சில முன்னேற்பாடுகள் அவசியம். முதலில் வழிபடும் இடத்தை துாய்மைப்படுத்த வேண்டும். தேவியருக்கு படைக்க வேண்டிய பொருட்களுக்கு சந்தனம் தெளித்து, குங்குமம் இடவேண்டும். பின் வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

அன்னையின் பார்வையில், புத்தகங்களை அடுக்கி, அதன் முன் வாழை இலை விரித்து, படையலை பக்தியுடன் சமர்பிக்க வேண்டும். பொரி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை மற்றும் பழங்களை படைத்து வழிபடுவது சிறப்பு சேர்க்கும்.

விநாயகரே எதற்கும் முதலானவர். எனவே, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, பூஜையில் வணங்கிய பின், சரஸ்வதி பூஜையை துவங்க வேண்டும். பூஜையில் கலசம் வைத்து, அம்பிகையை முறைப்படி எழுந்தருள செய்து, பூஜிப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும்.

நவராத்திரியில் அன்னையின் அருள் பெற, ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள், சரஸ்வதிபூஜையன்று மட்டும் வணங்கினால் போதும். அன்னை அருள் பூரணமாய் கிடைக்கும்.

சரஸ்வதிபூஜையின் போது, புதிய புத்தகம் ஒன்றை வைத்து வழிப்படுவது சிறப்பு தரும்; அந்த புத்தகத்தை மறுநாள் படித்தால் மனநிறைவு கிடைக்கும்.

முதல் வணக்கம்!

கல்வி உட்பட கலைகள், வித்தை தருபவர் அன்னை சரஸ்வதிதேவி. இதனால் தான், கலைமகள், கலைவாணி, வித்யாதேவி என பல பெயர்களில் அவரை போற்றி வணங்குகிறோம்.

சரஸ்வதிதேவி வழிபாட்டில் குறிப்பிட்ட வழிமுறையை தவறாமல் கடைப்பிடிக்கிறோம். அது, வாழ்வு தரும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளை வணங்குவதாகும். அதாவது, தையற்காரர், ஊசியையும், தையல் இயந்திரத்தையும் வணங்கிய பின்பே, தைக்கும் பணியை துவங்குகிறார். இதுவே, தொழில் சார்ந்த வழிபாட்டின் அடிப்படை.

இதுபோல், மிகப்பெரிய இயந்திர உதவியுடன், பொருள் உற்பத்தி செய்பவர், முதலில் அந்த இயந்திரத்தை வணங்கிய பின்தான் உற்பத்தியை துவங்குகிறார்.

வேலைகளை, சுயமாக கண்காணித்து இயக்கும் கணினி ஆதிக்கம் வந்த பின்னரும் கூட, தொழிற் கருவிகளுக்கு உரிய மரியாதை செலுத்த தயங்குவதில்லை.

காரணம், வாழ்க்கையை மேம்படுத்துவதில் தொழிற்கருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கணினியை தொட்டு வணங்கிய பின் இயக்குவோரும் உண்டு.

இப்படி, தொழிலுக்கு துணை புரியும் கருவிகள் அத்தனைக்கும், பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு செய்யும் திருநாள் தான், ஆயுத பூஜை.

சிறுதொழில் செய்பவர் முதல், கோடிக்கணக்கில் முதலீடு செய்து, இயந்திர உதவியுடன் உற்பத்தி செய்பவர் வரை, ஆயுத பூஜையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

புராண காலத்தில், போர்க்கருவிகளை பூஜையில் வைத்து வணங்கி வந்துள்ளனர் என்பதை, கதைகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆயுதபூஜை செய்வதன் நோக்கம், தொழில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான்; அந்த ஆயுதங்களால், எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

தொழிற்கருவிகளுக்கு மரியாதை செய்யும் பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருகிறது. பல இடங்களில் உற்சாக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பாடப்புத்தகங்களை படைத்து, அன்னை சரஸ்வதி தேவியை மாணவ, மாணவியர் வணங்குவது போல, தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர் தொழிற்கருவிகளை சுத்தம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

இது, செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்தை மையப்படுத்துகிறது. அந்த உட்பொருள் கொண்ட ஆயுத பூஜையை இனிதே வரவேற்று, அன்னையரை பணிந்து அற்புத வரங்கள் பெறுவோம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us