PUBLISHED ON : அக் 09, 2021

என் வயது, 81; குடும்ப தலைவராக உள்ளேன். நான் வசிக்கும் மலைப்பகுதி கிராமத்திற்கு, ஆட்டோவில் தான் வரும், தினமலர் நாளிதழ்; அத்துடன் சிறுவர்மலர் வரும் சனிக்கிழமைக்காக ஆவலுடன் காத்திருப்போம். வந்ததும் வாங்கி முழுதும் படிப்பேன்.
என் பேரன்களுக்கு, அங்குராசுவின் கட்டுரைகளை வாசித்து காட்டுவேன். அதில் வரும் தகவல்களை பெரிய பேரன் குறிப்பெடுப்பான். பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் போது அவற்றை பயன்படுத்துவான்.
சமூகத்தில் பல சீர்திருத்தங்கள், 'இளஸ்... மனஸ்...' பகுதியால் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். சிறுவர்களின், 'உங்கள் பக்கம்!' பகுதியை பார்த்து ஆர்வத்தில் புதுடில்லி, என்.ஐ.ஓ.எஸ்.பள்ளியில், ஆர்ட் பாடத்தில் சேர்ந்துள்ளான், ஒரு பேரன்.
பாரம்பரிய உணவு தரும், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியை குறிப்பெடுத்து வைக்கிறார், மருமகள்; அதனால் பல சுவையான உணவுகள் கிடைக்கின்றன.
ஊரடங்கு காலத்தில், வீட்டுக்குள் அடைந்திருந்தவர்களுக்கு, பேருதவி புரிந்தது சிறுவர்மலர் இதழ். அது மேலும் மேலும் உயர மனதார வாழ்த்துகிறேன்!
- கே.கே.ஆரி, ஊட்டி
