PUBLISHED ON : அக் 09, 2021

முன்கதை: இயற்கை மீது ஆர்வம் கொண்ட சிறுவன் சந்திரஜெயனை தென்துருவ பகுதியான அன்டார்டிகா அழைத்து செல்வதாக, விஞ்ஞானியான அவன் மாமா யோகிபாபு கூறினார். அது பற்றி விரிவாக விசாரித்தான். அங்கு கிடைக்கும், 'பாஸில்' என்ற புதைபடிவத்தை கடத்தி வரப் போவதாக அவர் கூறினார். இனி -
''என்னையும் கடத்தல்காரனாக்கி விடாதீங்க...'' என்றான் சந்திரஜெயன்.
''நாட்டு நலன் வேண்டி, கடத்தல்காரன் ஆவதில் தவறேதுமில்லை...''
புன்னகைத்தபடி கூறினார் யோகிபாபு.
''மார்ஷலிடம் மாட்டிக் கொண்டால்...''
''சர்வதேச போலீசால் கைது செய்யப்படுவோம்...''
''என்னையுமா கைது செய்வார்...''
''கடத்தலுக்கும், உனக்கும் சம்பந்தமில்லை என விடுவித்து விடுவேன்; இதையெல்லாம் உன் பெற்றோரிடம் கூறி விடாதே; ஏற்கெனவே பயப்படுகின்றனர்; இது தெரிந்தால் அனுப்பவே மாட்டார்கள்...''
''புதைபடிவத்தை எடுத்து வந்து, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்க போறீங்களா...''
''சேச்சே... அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்...''
''அதுசரி... எனக்கு பிறந்தநாள் பரிசு தர போவதாக சொன்னீங்களே...''
''நீ கனவிலும் நினைக்காத பரிசாக அது அமையும்...''
''அன்பாக எதை கொடுத்தாலும், வாங்கிக் கொள்வேன்...''
''அப்படி என்மேல் உனக்கென்ன விசேஷ அன்பு...''
''பம்பை தலை கேசத்துடன் வித்தியாசமாக இருக்குறீங்க; விஞ்ஞானிகள் மீது, எனக்கு அதீத மரியாதை உண்டு. அவர்கள்தான் மனித சமுதாயத்தை முன் நோக்கி எடுத்துச் செல்கின்றனர்; ஒரு விஞ்ஞானி, 1 கோடி மனிதருக்கு சமம்; உங்களைப் பார்த்தால், எனக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஞாபகம் வரும்...''
''ஐன்ஸ்டீன் அளவு நான் மேதை இல்லை...''
''மீதி வாழ்நாளில், ஐன்ஸ்டீனின் தரத்தை எட்டுவீங்க...''
''உன் நம்பிக்கைக்கு மிக்க நன்றி...''
சிறுவன் கையை பற்றினார் யோகிபாபு.
அன்று -
ஆஸ்திரேலிய கண்ட பகுதியில் நியூசிலாந்துக்கு செல்லும் விமானத்தில், இருவரும் ஏறினர்.
விமானம், 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது.
நியூசிலாந்தில் இறங்கி அடுத்த விமானத்தில் ஏறினர்; அது உஷாய்யாவில் தரை இறங்கியது.
வானில், ஆல்பட்ராஸ் பறவைகள் பறந்து கொண்டிருந்தன; நீல நிறமாய் அமைதி காத்தது வானம். யானை, ஒட்டகம் வடிவில் மேகங்கள் நகர்ந்தன.
இந்திய விஞ்ஞானிகள் குடியிருப்பில், மெதுவாக கண்களை திறந்தான் சந்திரஜெயன்; பெற்றோரும், வளர்ப்பு மிருகங்களும், உடன் இல்லாத தனிமை முகத்தில் அறைந்தது.
'தோழி தீவிதாவை துணைக்கு அழைத்து வந்திருக்கலாம்; ஆனால், அவள் பெற்றோர் ஒப்பு கொள்ள மாட்டார்களே' என எண்ணினான் சந்திரஜெயன்.
குடியிருப்புக்குள்ளும் குளிர் அடித்தது.
''வணக்கம் மாமா... நல்ல துாக்கமா... எனக்கு துாக்கம் வர மறுக்கிறது...''
''நீண்ட நேர வித்தியாசம் உள்ள, ஒரு நாட்டிலிருந்து, இன்னொரு நாட்டிற்கு செல்லும் பயணிக்கு, 'ஜெட்லாக்' என்ற பிரச்னை ஏற்படும்... இந்தியாவில், பகல் வேளையாக இருப்பது, பயணம் போன நாட்டில் இரவாக இருக்கும். இரவு, பகல் குழப்பத்தால், உடல் துாங்க மறுக்கும்; ஒரு சில நாட்களுக்கு பின், இந்நிலை சரியாகும்...''
''கெட்ட கனவு வந்தது மாமா...''
''கெட்ட கனவா... அது என்னன்னு சொல் பார்ப்போம்...''
''இருவரும், ஆளுக்கொரு டால்பின் முதுகில் அமர்ந்து, அன்டார்டிகா கடலில் நீந்துறோம். ரொம்ப துாரம் கடந்த பின், டால்பின்கள் உருண்டு புரண்டு இருவரையும் கவிழ்த்து விடுகின்றன. அச்சமயம், திமிங்கலம் நம்மை நோக்கி நீந்தி வருகிறது...
''திமிங்கலத்திடம் சிக்காமல் தப்பி ஓடுறோம்; தொடர்ந்து துரத்தி வருது. ஒரு கட்டத்தில், திமிங்கலம் இருவரையும் விழுங்குகிறது; வயிற்றுக்குள் போறோம்; அங்கு ஒரு கத்தி கிடைக்கிறது...
''அதை நீங்கள் எடுத்து, திமிங்கலத்தின் வயிற்றை கிழிக்கிறீங்க; இருவரும் தப்புகிறோம்; திமிங்கலத்தின் ரத்தம் ஒட்டு மொத்த அன்டார்டிகாவையும் சிவப்பாக்குகிறது...''
கதையை சொல்லி முடித்தான் சந்திரஜெயன்.
''உன் கனவு ஒரு சாகசமாக இருக்கு...''
''எனக்கு அப்படி தான் கனவுகள் வரும்...''
''உனக்கு கற்பனைத் திறன் அதிகம்; எதிர்காலத்தில் மிக சிறந்த எழுத்தாளர் ஆவாய்; அன்டார்டிகா பயணம் முடிந்ததும், ஒரு பயணக் கட்டுரை எழுது; திருத்திக் கொடுக்கிறேன்...''
''மாமா...இன்று என்ன செய்ய போகிறோம்...''
''காலை, 10:00 மணிக்கு புறப்பட்டு, 50 கி.மீ., சுற்றளவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளபோகிறோம்; மாலை, 3:00 மணிக்கு திரும்புறோம்...''
''கூட யாராவது வருவாங்களா மாமா...''
''இல்லை... நாம ரெண்டு பேரு மட்டும் தான்...''
''வழியில ஏதாவது ஆபத்து நேர வாய்ப்பிருக்கா...''
எதிர்பார்ப்புடன் கேட்டான் சந்திரஜெயன்.
- தொடரும்...
- வஹித்தா நாசர்
