
திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி, ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில், 1950ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
அன்று மதிய சாப்பாடு எடுத்து வரவில்லை; பசியாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். அதே பள்ளியில், 6ம் வகுப்பு படித்த அழகேந்திரன், மிதிவண்டியை பூட்டாமல் நிறுத்தி வைத்திருந்தான்.
அவனிடம் அனுமதி பெறாமல் அந்த மிதிவண்டியில் அவசரமாக வீட்டிற்கு வந்தேன்; வீடு பூட்டியிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பசியுடன் மீண்டும் திரும்பி, மிதிவண்டியை அதே இடத்தில் நிறுத்தி, வகுப்புக்கு சென்றேன்.
என்னை கண்டதும் மின்னலென பாய்ந்து, இடி போல் கன்னத்தில் அறைந்து, 'பிறர் பொருளை, அனுமதியின்றி எப்படி எடுக்கலாம்...' என திட்டினார் ஆசிரியர் ஜோசப் அமல்தாஸ்.
என் நிலையை விளக்கி, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டேன்.
கண்டிப்புடன், 'ஒரு பொருளை உரியவர் அனுமதியின்றி எடுப்பது திருட்டுக்கு சமமானது; இனி அப்படி செய்யாதே...' என அறிவுரைத்தார். யார் பொருளையும் கேளாமல் எடுப்பதில்லை என உறுதி பூண்டேன்.
இப்போது, என் வயது, 84; தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றேன். இடி, மின்னல் ஏற்படும் போதெல்லாம், அந்த ஆசிரியரை நினைத்து, கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.
- கே.வீரையன், திண்டுக்கல்.

