
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்!
அறிவியல் ஆசிரியர் கோவிந்தசாமி, எங்கள் வகுப்பறையில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அறிவியல் பாட பரிசோதனை மாதிரிகளை, அட்டையில் வடிவமைக்க பயிற்சி தந்தார். எனக்கு, 'மின்கலங்களும் பயன்களும்!' என்ற தலைப்பு தரப்பட்டிருந்தது. அதற்கு ஏற்ப, பாட்டரி ஒன்றை வாங்கி, சிறு பல்பை இணைத்து, 'மின்சார பயன்' என்ற தலைப்பில் ஒளிர விட்டிருந்தேன்.
கண்காட்சியை துவக்கி பார்வையிட்ட தலைமை ஆசிரியரிடம் விளக்கமளித்தபடி வந்துகொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர். அப்போது, அவரிடம் பதற்றத்துடன் ஓடி வந்த ஒருவர், காதில் ஏதோ கூறினார். ஒரு நிமிடம் தாமதித்தவர், பணியை தொடர்ந்தார். 
தலைமையாசிரியர் புறப்பட்ட பின், என்னை அழைத்து, 'மற்ற பிரிவு ஆசிரியர், மாணவர்களை அழைத்து வந்து முறையாக விளக்கு...' என்று கூறியபடி அவசரமாக கிளம்பினார். விசாரித்த போது அவரது மகள் இறந்து விட்டதாக அறிந்தேன். 
இந்த சோக தகவலை அறிந்த பின்னும் கலங்காமல் பணியை தொடர்ந்த அந்த ஆசிரியர் மீது மிகுந்த மதிப்பு ஏற்பட்டது. அவர் தந்த ஊக்கத்தால் பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். தொடர்ந்து படித்து, வங்கி சீனியர் மேலாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். 
என் வயது, 67; மூன்று தனியார் பள்ளிகளின் நிர்வாக அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறேன். அந்த ஆசிரியர் தந்த ஊக்கமிக்க செயல்முறையே, இந்த உயர்வுக்கு காரணம் என நம்புகிறேன்!
- எம்.சையத் ரியாஸ் அகமது, சென்னை.
தொடர்புக்கு: 94440 22537

