
மதுரை, சவுராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 11ம் வகுப்பு படித்த போது, திருவள்ளுவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில், பள்ளி சார்பில் பங்கேற்று பரிசு பெற்றேன். இதை, தலைமையாசிரியர் ஆர்.வெங்கட்ராமன் கவனத்திற்கு கொண்டு சென்றார், தமிழாசிரியர் ராமச்சந்திரன். 
உடனே அடுத்து வரும் மாணவர் பேரவை கூட்டத்தில் பேச வாய்ப்பு தந்தார். அன்று பிரார்த்தனை கூடத்தில், மாணவர்கள் அணிவகுத்து நிற்க, 'பள்ளிக்கு கிடைத்திருக்கும் மாணிக்கம் போன்ற மதிப்புடைய மாணவன்...' என, என்னை பெருமையுடன் அறிமுகப்படுத்தி பேச அழைத்தார்.
தயக்கமின்றி, 'திருக்குறள் நெறி!' என்ற தலைப்பில் உரையாற்றினேன். கை தட்டி உற்சாகப்படுத்தினர் மாணவர்கள். என் உச்சரிப்பு, மேடை பாவனைகளுக்காக பாராட்டு கிடைத்தது. ஆண்டு விழாவில், 'நல்லொழுக்க மாணவர்' என்ற விருதும் பெற்றேன்.
அந்த ஊக்குவிப்பால் நன்றாக படித்து அரசுத் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அதே பள்ளி குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். வாரமலர் இதழ் நடத்திவரும் அமரர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியில், முதல் பரிசும் பெற முடிந்தது. 
தற்போது, எனக்கு, 66 வயதாகிறது; சிறந்த வாழ்வுக்கு அடித்தளமிட்ட அந்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- டி.கே.ஹரிஹரன், மதுரை.
தொடர்புக்கு: 98416 13494

